கட்டுரை மன்னன் ; லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1256; கட்டுரை தேதி- 28 ஆகஸ்ட் 2014.
இந்தக் கட்டுரையை முன்னரே வேறு சில பிளாக்–குகளில் எழுதினேன். இவை நான் படித்த மதுரை சேதுபதி பள்ளிக்கூட நினைவுக் கதைகள். முதல் பகுதி —- ‘பிராமணர் கள் சாப்பிடும் இடம்’— 26ஆம் தேதி வெளியானது. அந்தக் கட்டுரையின் எண் 1252. அதையும் படிக்க வேண்டுகிறேன்
கற்பி! தமிழைச் சுவைபடக் கற்பி
ஒருகுருவிடம் ஒரு சிஷ்யன் வேலை பார்த்தான். அவன் மிகவும் மரியாதை தெரிந்தவன். யார் வந்தாலும் எதைச் செய்தாலும் “திரு” என்ற அடை மொழி இல்லாமல் பேசமாட்டான். ஐயங்கார்கள் “திருக்கண்ணமுது” (பாயசம்?) என்று சொல்லுவது போல அஃறிணைப் பொருட்களுக்கும் கூட “திரு” போடுவான்.
குருவுக்குப் பெரிய எரிச்சல். அவனைக் கூப்பிட்டார். டேய், மடையா! இனி திரு என்று எதற்காவவது சொன்னால் உன்னை மடத்திலிருந்து தூக்கி எறிந்து விடுவேன் என்று கோபத்துடன் கூறினார்.
சிஷ்யன் பயந்து நடுங்கிக் கொண்டே “சுவாமி, இனிமேல் “திரு” என்பது வாயிலிருந்து வரவே வராது ,இது சத்தியம் ! என்று சொல்லிப் போய்விட்டு வேலைகளைச் செவ்வனே செய்து வந்தான்.
அன்று இரவு குருவின் ஆஸ்ரமத்தில் “திரு”டன் வந்து எல்லா பொருட்களையும் தூக்கிச் சென்றான. இதைப் பார்த்த சிஷ்யன் எல்லோரையும் எழுப்புவதற்காக,
“டன் வந்து “டிக்” கொண்டு போய்ட்டான்”,
“டன் வந்து டிக் கொண்டு போய்ட்டான்”,”
டன் வந்து டிக் கொண்டு போய்ட்டான்”,
என்று பலமுறை கூச்சலிட்டான். தூக்கத்தில் எழுந்த எல்லோருக்கும் மகா கோபம்.
ஏதேனும் கெட்ட கனவு கண்டாயா? ஏன் உளறுகிறாய்? போய்த்தூங்கு என்று விரட்டினார்கள். அவர்களைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்று நடந்ததைக் காட்டினான். அப்போதும் அவனுக்கு செமை அடிதான் கிடைத்தது. “சனியனே, வாயைத் திறந்து ஒழுங்காகக் கூறியிருந்தால் திருடனைப் பிடித்திருப்போமே” என்றார்கள்.
அவனோ பய பக்தியுடன் குருவின் உத்தரவை நினைவு படுத்தினான். குரு இனிமேல்– திரு– சொல்லக் கூடாது என்றதால் நான் ‘’திரு’’டன் வந்து ‘’திரு’’டிக் கொண்டு போய்விட்டான் என்பதில் திரு எல்லாவற்றையும் விட்டுவிட்டேன் என்றான்!!!!
விளங்காத பயல்கள்
தமிழ் மொழி வகுப்பு என்றாலே “போர்” அடிக்கும் வகுப்பு என்று பெயர் எடுத்த காலத்தில் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் (பாரதியார் பணியாற்றிய பள்ளி) எனக்கு இரண்டு பொன்னான ஆசிரியர்கள் கிடைத்தார்கள். வகுப்பு முழுதும் ஒரே “ஜோக்” குகளும் சிரிப்புமாக இருக்கும். நினைவில் நின்ற சில விஷயங்கள் மட்டும்:
சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சுந்தர ராஜ ராவ் என்று ஒரு தமிழ் ஆசிரியர் இருந்தார். நளவெண்பா போன்ற பாடல்களை சிவாஜி கணேசன் போல நடித்துக் காண்பிப்பார் (வகுப்பில்).
பாடல்களை எல்லாம் விளக்கிவிட்டு
“டேய், விளங்காத பயல்கள் எல்லாம் கையைத் தூக்குங்களடா”
என்பார். எல்லோரும் ‘கொல்’ என்று சிரிப்போம்.
தமிழில் விளங்காதவர்கள் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
போர் அடிக்கிறதா? இன்னும் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணூ.
ராமன் ராவணனை எச்சரிக்கும் போது கூறியது:
சீதையைத் திருப்பி அனுப்பாவிடில்
உன் பேர்,——– ரிப்”பேர்” ஆகி விடும்,
உன் மானம்,—— வி”மானத்தில்” ஏறிவிடும்,
உன் கதி, ——- ச”கதி” ஆகி விடும்.
ஒருபாட்டுக் கச்சேரிக்குப் போனேன். அவர் பாடிய ராகமோ வ”ராகம்”, போட்ட தாளமோ வே”தாளம்”. அவ்வளவு நன்றாக இருந்தது!!
சொன்ன ஆசிரியர் திரு ம.க.சிவசுப்பிரமணியம்,மதுரை.
Pictures are taken from different sites;thanks. They are not directly related to the anecdotes.
-சுபம்–




You must be logged in to post a comment.