ஆண் குழந்தை பெற வழி! SEX செக்ஸ் பற்றி மநு (Post No.5109)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 14 JUNE 2018

 

Time uploaded in London –  14-23  (British Summer Time)

 

Post No. 5109

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

மனு நீதி நூல்- பகுதி 20

ஆண் குழந்தை பெற வழி! SEX செக்ஸ் பற்றி மநு (Post No.5109)

 

மூன்றாம் அத்யாயத் தொடர்ச்சி

 

எனது கருத்துகள்:

கீழ்கண்ட ஸ்லோகங்களில் மநு, பெண்களைப் புகழ்ந்து கூறுவது போல உலகில் வேறு எந்த நூலும் புகழ்ந்ததில்லை. பெண்கள் அழுதால்    அந்தக் குடும்பங்கள் வேருடன் சாயும் என்பதும், கணவன் மட்டும் மகிழ்ந்தால் போதாது, குடும்ப மகிழ்ச்சிக்கு மனைவியும் மகிழ வேண்டும் என்பதும் நோக்கற்பாலது

 

வரதட்சணை வாங்கி பெண்களை மணப்பது தவறு என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மநு கூறியது அவரை முற்போக்குச் சிந்தனையாளர் என்பதைக் காட்டும்

 

2600 ஸ்லோகங்களுக்கும் மேலாக உள்ள மநு ஸ்ம்ருதியில் இடைச் செருகலாக வந்த 40 ஸ்லோகங்களை மட்டும் காட்டி மநுவை மட்டம் தட்டும் திராவிடங்களுக்கும் மார்கஸீயங்களுக்கும் செமை அடி கொடுக்கும் பகுதி இது.

 

செக்ஸ் செய்வதற்கு உரிய நாட்கள் எவை , ஆண், பெண் குழந்தைகள் பெற எப்பொழுது படுக்க வேண்டும் என்பது பற்றி மநு கூறுவதை விஞ்ஞான முறையில் ஆராய்வது நன்மை பயக்கும்.

 

யாகங்களுக்கும் மழைக்கும் உள்ள தொடர்பு ஏற்கனவே விஞ்ஞான முறையில் நிரூபிக்கப்பட்டுவிட்டது. கார்பன் ஸீடிங் (carbon seeding) என்று மேகங்களில் விஞ்ஞான முறையில் இப்பொழுது செய்வதை அன்றே ரிஷி முனிவர்களும் மநுவும் செப்பியது கண்டு, கேட்டு இன்புறத்தக்கது; வியக்கற்பாலது!

 

 

தினமும் செய்ய வேண்டிய ஐம்பெரும் வேள்விகள் திருக்குறள் முதலிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும் உள; ஐம்பெரும் கொலைக் களங்களும் தமிழ் நூல்களில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இது அருமையான ஒரு கொள்கை. முன்னோர்களையும் பிராணிகளையும் காப்பது மனிதனின் கடமை என்ற சிந்தனை உலகில் வேறு எந்த பழைய நூலிலாவது இருக்குமா என்பது கேள்விக்குறியாக தொக்கி நிற்கும்.

சில வேலைகளைச் (Works, jobs) செய்யக் கூடாது என்று மநு விதிக்கும் தடைகள் இக்காலத்துக்குப் பொருந்தா; சொல்லப்போனால் இன்று மநு நீதி நூல் புழக்கத்தில் இல்லை. இன்றைய அரசியல் அமைப்புச் சட்டமே பல முறை திருத்தப்பட்டுவிட்டது. அம்பேத்கர் போன்றோர் கீழ் ஜாதிகளுக்கு சலுகை தருவது பற்றிச் சொன்ன விதிகளே மீறப்பட்டுவிட்டன. மேலும் பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூ டாது என்ற தடையையும் யாரும் மதிப்பதில்லை. பிராஹ்மணர்கள்   வெளிநாடுகளுக்குச் செல்லக் கூ டாது என்ற தடையையும் யாரும் மதிப்பதில்லை.

 

தருமம் என்பது கால தேச வர்த்தமானத்தை (சூழ்நிலை)ப் பொறுத்தது என்று மநு முன்னரே பீடிகை போட்டதும் அவ்வப்பொழுது உள்ள பெரியோர்களைக் கேட்டு அனுசரித்துப் போங்கள் என்று மநு சொன்னதும் நினை  விற் கொள்ளத் தக்கது.

 

சுமார் 2700 ஸ்லோகங்களில் இடைச் சொருகலாக வந்த ஒரு 40 ஸ்லோகக்ங்களை ஒதுக்கிவிட்டால் மநுதான் உலகிலேயே சிறந்த சட்டப் புத்தக நிபுணர் என்ப தை உலகம் ஒப்புக்கொள்ளும்.

 

மூன்றாம் அத்யாயத் தொடர்ச்சியைக் காண்போம்:——

3-43 தன் குலப் பெண்களைக் கரம் பிடித்து ஏற்கும் பாணிக் கிரஹணம் சிறந்தது. ஏனைய குலப் பெண்களை மணக்கையில் பின்வருவனவற்றைச் செய்க

 

3-44 ஒரு பெண் மேல் ஜாதிக் காரனை மணந்தால் க்ஷதரியப் பெண் ஒரு அம்பையும், வைஸ்யப் பெண் ஒரு சாட்டையையும், சூத்திரப் பெண் மணமகனின் ஆடையின் நுனியையும் கையில் பிடித்துக்கொள்ள வேண்டும்.

 

( ஜாதி முறைகளோ இந்த மாதிரி விநோத வழக்கங்களோ உலகில் எந்தப் பகுதியிலும் இல்லை. ஆகவே இந்துக்கள் வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள் என்ற வாதம் பொய்மையில் பிறந்த வாதம் என்பது எனது கருத்து)

மனைவியுடன் எப்போது படுக்கலாம்? (செக்ஸ்)

3-45 பருவ காலங்களில் கூடலாம்; பிறர் மனைவியை நாடக்கூடாது; விரும்பும் போதும் கூடலாம்; ஆனால் விலக்கப்பட்ட நாட்களைத் தவிர்க்க வேண்டும்

 

(விலக்கப்பட்ட நாட்கள்- பௌர்ணமி, அமாவாஸை, அஷ்டமி, சதுர்தஸி- அதாவது பௌர்ணமி, அமாவாஸைக்கு முதல் நாள்)

 

3-46 மாதவிடாய்க் காலத்திலிருந்து 16 நாட்கள் கூடுவதற்கு உரியதாயினும் முதல் நான்கு நாட்களை நல்லோர் விரும்புவதில்லை.

 

3-47 இவைகளிலும் ஏகாதஸி (11), த்ரயோதஸி (13)களை விலக்கினால் ஏனைய பத்து நாட்கள் சிறந்தவை.

ஆண் பெண் குழந்தை பெற வழி

3-48 மாத விலக்கிலிருந்து 6, 8, 10, 12, 14, 16 பேன்ற இரட்டைப் படை எண்கள் வரும் நாட்களில் புணர்ந்தால் ஆண் குழந்தையும் ஒற்றைப் படை எண்களில் புணர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கும்.

 

(இது ஆராய்ச்சிக்குரிய விஷயம்; ஒவ்வொரு ஆண் மகனும் ஒரு DIARY டயரி வைத்துக் கொண்டு எழுதி வந்தால் இதை ஆராயலாம்; அல்லது சரியான தகவலை ஆராய்ச்சியளர்களுக்குத் தந்தால் அவர்கள் இதை மெய்ப்பிக்கலாம் என்பது எனது கருத்து)

 

3-49 சேர்க்கையின் போது ஆண் விந்து அதிகமானால் ஆண் குழந்தையும், பெண் கரு சுரப்பு அதிகமானால் பெண் குழந்தையும் சம அளவில் இருந்தால் அலியும் பிறக்கும். மொத்தத்தில் எல்லாம் குறைவாக இருந்தாலும் பிறப்பு வேறுபடும்.

 

(மநு நூலுக்கு நிறைய உரைகாரர்கள் வியாக்கியானம் செய்து இருக்கிறரர்கள்; அவைகளில் கருத்து வேறுபாடும் உண்டு; ஆராய்ச்சியாளர்கள் அந்த உரைகளைப் படித்து ஜீரணித்து தெளிவான மொழியில் எழுதினால் பயன்தரும் என்பது என் கருத்து)

 

3-50 மேற்சொன்ன விலக்கத்தக்க ஆறு நாட்கள் + பௌர்ணமி, அமாவாஸை ஆகிய 8 நாட்களில் மனைவியுடன் கூடாதவன் பிரம்மச்சாரிக்குச் சமமானவன்

 

3-51 பணம் பெற்றுக் கொண்டு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பது அறிவாளிகள் செயல் அன்று; அது பெண்களை விற்பனை செய்ததாகும்

 

3-52 பெண்ணின் சீதனப் பணத்தால் வாழும் கணவனும் தந்தையும் பாவத்தால் அழிவுறுவர்.

 

3-53 ஆர்ஷ விவாஹம் எனப்படும் மு றையில் பசுவும் காளையும் தருகிறார்கள். அதுவும் வரதட்சிணை இல்லையா என்று சிலர் நினைப்பர். அப்படியல்ல; விற்பனைக்கென பணம் வாங்குதலே பாவம்

3-54 பெண்ணுக்கான பணம் வாங்காமல் கல்யாணம் செய்து கொடுப்பவன் அந்தப் பெண்ணின் மீது அன்பும் கருணையும் உடைவன் ஆவான்.

பெண்களைப் போற்றாத இடத்தில் தெய்வம் வசிக்காது

3-55 பெண்ணின் தந்தை, கணவன், சஹோதர்கள், மைத்துனர் ஆகியோர் பெண்ணுக்கு பரிசுகள் தந்து சந்தோஷப்படுத்த வேண்டும்.

3-56 ஆடை அணிகலன்களுடன் பெண்கள் மரியாதை செய்யப்படும் இடத்தில் தெய்வங்களும் மகிழ்ச்சியுடன் வசிக்கும்; எந்த வீட்டில் இப்படிப் பெண்கள் போற்றப்படுவதில்லையோ அங்கு செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகி விடும்.

 

(நான் ஆயிரம் ஸம்ஸ்க்ருத, தமிழ், ஆங்கில நூல்களையாவது கட்டாயம் படித்திருக்கிறேன்; உண்மையைச் சொல்கிறேன்; இப்படிப் பெண்களைப் போற்றும் பாக்களை யாங்கணும் கண்டதில்லை- இது ஸத்தியம்)

 

3-57 பெண்கள் வருத்தப்பட்டு கண்ணீர் சிந்தும் குடும்பங்கள் அழிந்துபோகின்றன. எங்கு அவர்கள் சந்தோஷத்துடன் இருக்கிறார்களோ அக்குடும்பங்கள் செழிக்கின்றன; தழைத்து ஓங்குகின்றன

 

3-58 எந்த ஒரு வீட்டில் பெண்கள் தன்னை மரியாதையுடன் நடத்தாமைக்காக சாபம் இடுகிறார்களோ அந்தக் குடும்பம் அடியோடு அழியும்; மாய மந்திரத்தால் அழிக்கப்பட்டது போல மறைந்தே போகும்

 

(மநுவின் எச்சரிக்கை, அவர்க்குப் பெண்கள் மீதுள்ள மரியாதையையும் அச்சத்தையும் காட்டுகிறது. உலகில் இது போன்ற கடுமையான சொற்றொடர்களை எங்கும் காண முடியாது)

 

3-59 ஆகவே செழித்துத் தழைத்து, வளத்துடன் வாழ விரும்பும் குடும்பங்கள் தனது குலப் பெண்களுக்கு ஆடைகள், நகைகள், உணவு முதலியவற்றைத் திருவிழா நாட்களிலும் பண்டிகைக் காலத்திலும் கொடுத்து சந்தோஷப்படுத்த வேண்டும்.

 

(இந்த ஒரு ஸ்லோகத்துக்காவது பெண்கள் மநு என்னும் புலவனுக்கு/ முனிவனுக்கு ஆயிரம் முறை நன்றி சொல்ல வேண்டும்; இன்றும் கூட பிராமஹ்மணர் குடும்பங்கள் பொங்கல், தீபாவளியின் போது சஹோதரிகளுக்கு பணமும் உடைகளும் தருகின்றனர்)

3-60 கணவனும் மனைவியும்– இருவரும் மனம் ஒருமித்து- மகிழ்ச்சியுடன் வாழும் குடும்பத்தில்தான் சந்தோஷம் நிலவும். ஒருவரை ஒருவர் சந்தோஷப்படுத்த வேண்டும்

 

(கணவன் மட்டும் மகிழ்ந்தால் போதாது; பெண்களையும் மகிழ்ச்சியாக வைக்க வேண்டும் என்று மநு சொல்கிறான்;    அந்தக் காலத்தில் பெண்கள் வீட்டின் வாசலைத் தாண்டுவது கல்யாணம் அல்லது திருவிழா நாட்களில் மட்டுமே; இன்று போல பெண்கள சம்பாதிக்கவும் இல்லை; கிளப்புகள் சினிமாக்கள், குடி, கூத்துகளுக்கும் செல்லவில்லை. அப்பேற்பட்ட காலத்திலேயே இருவர் மகிழ்ச்சி பற்றி இயம்புகிறான் மநு!)

 

3-61 மனைவி சோபிக்காவிட்டால கணவனுக்கு இன்பம் ஏற்படாது. அப்படி மனைவி செய்யாவிட்டால் அந்தக் குடும்பத்தில் குழந்தைகளும் பெற வாய்ப்பு இல்லை ( அதாவது மனைவியை கணவன் அழகு செய்ய வேண்டும்; அந்தக் கவர்ச்சி மூலம் அவள் கணவனைத் திருப்திப்படுத்த வேண்டும்; அதன் மூலம் தாம்பத்ய உறவு சிறக்கும்)

 

3-62 மனைவி மகிழ்ச்சியுடன் இருந்தால்தான் சந்ததி தோன்றும்; அது மட்டுமல்ல; கணவன் விரும்பாத மனைவி பிறரால் தீண்டப் பெற்று குடும்பமும் கெட்டுப்போகும்

 

3-63 தகாத திருமணங்களாலும், சமயச் சடங்குகளைச் செய்யாமையினாலும், வேதமோதாமையினாலும், அந்தணர் முதலிய பெரியோரைப் போற்றாமையினாலும் உயர்ந்த குலங்களும் தாழ்ந்து போகும்.

3-64 (பிராஹ்மணர் தவிர்க்க வேண்டியவை)- கைவினைப் பொருட்கள் செய்தல், பசு, குதிரை, வண்டிகள் வைத்து வணிகம் செய்தல், ஏர் பிடித்தல், அரசுப் பணிகளில் ஈடுபடுதல், வேதம் ஓதாமல் இருத்தல், தாழ்ந்த குலப் பெண்கள் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளல்,

3-65 தகுதியற்றோரை வைத்து யாக யக்ஞாதிகள் செய்தல், கடவுளையும் சடங்குகளையும் எதிர்த்துப் பேசுதல், அனுஷடானங்களைக் கடைப்பிடிக்காமல் இருத்தல்—- இவைகளால் பிராஹ்மண குலம் தாழ்ச்சியுறும்.

 

3-66 வறுமையில் வாடினாலும் வேதத்தைப் படிப்போர் புகழையும் செல்வத்தையும் பெற்றவர்களாவர்

ஐந்து பெரிய வேள்விகள்

 

3-67 இதுவரை இல்லறம் பற்றி இயம்பினேன்; இனி இல்லறத்தானுடைய ஐந்து பெரிய வேள்விகள் பற்றி விளம்புவேன்.

 

 

3-68 ஒவ்வொரு வீட்டிலும் ஐந்து கொலைக் களங்கள் இருக்கின்றன; அவையாவன:  மாவு அறைக்கும் இயந்திரம், தானியம் இடிக்கும் உரல், உலக்கை, வீட்டைச் சுத்தம் செய்யும் விளக்குமாறு, நீர்க்குடம், அடுப்பு (நம்மை அறியாமலேயே புழு பூச்சிகளை அழிக்கும் இடங்கள் இவை)

 

3-69 இந்த ஐந்து  பாவங்களையும் போக்குவதற்காக ரிஷி முனிவர்கள் ஐந்து பெரும் வேள்விகளைக் கூறுகின்றனர்:

 

1.வேதம் ஓதுதல்

2.முன்னோர்களை வழிபடல்

3.வேள்விமூலம் இறைவனை வழிபடல்

4.பிராணிகளுக்கு உணவளித்தல்

5.விருந்தோம்பல்

 

(இது பாரதீய பண்பாட்டின் சாரம்; திருக்குறள் முதலான நூல்களிலும், சிலப்பதிகாரத்திலும் இருப்பதைக் காண்க; உலகில் வேறு எந்த பண்பாட்டிலும் இத்தகைய கொள்கைகள் இல்லாததால் இந்துமதம் இந்தியாவில் தோன்றி வளர்ந்தது என்பதையும் அறிக; வெளிநாட்டினர் செய்த பரப்புரை பொய்மையில் விளைந்த அடியற்ற, உளுத்துப் போன வாதம் என்பதையும் தெளிக)

3-71 எவன் ஒருவன் இந்த ஐந்து பெரு வேள்விகளைச் செய்கிறானோ அவன் அந்த கொலைக்கள பாவங்களில் இருந்து விடுபடுவான்

 

3-72 கடவுள், விருந்தினர், தன்னைச் சேர்ந்தோர், முன்னோர்கள், தான் ஆகிய ஐவரையும் போற்றாதவன் இருந்தும் இறந்தவனுக்குச் சமம்

 

3-73 இந்த 5 வேள்விகளுக்கு அஹுத, ஹுத, பிரஹுத, ப்ராம்யஹுத, ப்ரஸீத என்று பெயர்கள் (அதாவது தீ வேள்வியில் இடப்படாதது, வேள்வித் தீயில் இடப்படுவது, இரைப்பதன் மூலம் அளிக்கப்படுவது, புரோஹிதர்களுக்கு அளிக்கப்படுவது, தின்னப்படுவது என்று பொருள்)

3-74 அஹுதம்-பிரம்ம வேள்வி; ஹுதம்- தெய்வ வேள்வி; ப்ரஹுதம் பூத வேள்வி; ப்ராம்யஹுத- மானுட வேள்வி; ப்ரசீதம்- பிதுர்/ முன்னோர் வேள்வி

 

3-75 ஒருவன் வறுமையில் வாடினாலும் இயன்றதைச் செய்யலாம். தேவ யக்ஞம் மூல ஒருவன் தாவரங்களையும் பிரானிகளையும் கப்பாற்றியவன் ஆகிறான்

 

3-76 தேவர்க்கு அளிக்கும் ஹவிஸ் (உணவு) சூரியனுக்கு சென்று மழை பொழிவிக்கிறது. இதனால் விளைவு அதிகரிக்கும்; அதனால் உயிரினங்கள் வாழும்; இது வேத வாக்கு

 

(இது பகவத் கீதையிலும் உளது)

3-77 எல்லா ஜீவராசிகளும் பிராண வாயுவினால் (ஆக்ஸிஜன்) வாழ்வதைப் போல இல் வாழ்வான் மூலமாகவே ஏனைய மூன்று ஆஸ்ரமங்களான பிரம்மச்சாரி, வானப் ப்ரஸ்தன், சந்யாஸி ஆகிய மூவரும் வாழ்கின்றனர்.

 

(இந்த ஸ்லோகமும் திருக்குறளில் உள்ளது. ‘தென்புலத்தார்  தெய்வம்’ என்ற குறளையும் ‘இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்’ என்ற குறளையும் ஒப்பிடுக)

3-78 மற்ற மூன்று பிரிவிலுள்ளோர் வேதம் ஓதுவதற்கும் பிக்ஷை ஏற்பதற்கும் இல்லறத்தான் உதவுவதால் கிரஹஸ்தனாக இருப்பதுதான் சிறப்பு

 

(ஏனைய மூன்று பெயருக்கும் ஆதாரம் கல்யாணம் செய்து பிள்ளை பெற்று வாழ்பவன். ஆகையால் புத்த மதம், சமண மதம் போலல்லாது இந்து மதம் இல்வாழ்வானைப் போற்றுகிறது. துவக்க காலத்தில் துறவறத்தை மட்டுமே வலியுறுத்தியதால் பௌத்தமும் சமணமும் வற்றிப் போயின)

 

3-79 இக, பர நன்மைகளை விரும்புவோன் மிக உற்சாகத்தோடு கடமை ஆற்ற வேண்டும்; புலன் விஷயங்களில் பலவீனம் உடையவன் நல்ல இல்லறத்தான் ஆக இருக்க இயலாது.

 

3-80 தேவர்கள், முனிவர்கள், விருந்தினர்கள், பிராணிகள், முன்னோர்கள் ஆகிய ஐவரும் இல்வாழ்வானையே நாடி நிற்கின்றனர். ஆகையால் பின்வருவனவற்றைச் செய்க

 

3-81 வேதம் ஓதுவதால் முனிவர்களையும், ஹவிஸ் (அவி) சொறிவதால் தேவர்களையும், உணவு படைப்பதால் விருந்தினர்களையும், பலி (உணவு) கொடுப்பதால் உயிரினங்களையும் திதி/சிரார்த்தம் செய்வதால் பிதிரர்களையும் (இறந்துபோன முன்னோர்கள்) திருப்தி செய்க

 

3-82 முன்னோர்களுக்கு நீரோ, பால், பழம், கிழங்கோ, சோறு படைத்தோ தினமும் திருப்தி செய்க

 

3-83 பிதுர் வேள்விக்கான உணவைக் கொண்டு ஒரு அந்தணனுக்கு உணவு படைக்கலாம். பூத வேள்வியில் இப்படி எவருக்கும் தனி உணவு படைக்கத் தேவை இல்லை.

 

தொடரும்……………………