அதிசய க்யூரியம், அதிசய அமெரிஷியம்; குழந்தைகள் கூட்டத்தில் அறிவிப்பு! (Post No.5783)

Written by London Swaminathan


swami_48@yahoo.com



Date: 15 December 2018


GMT Time uploaded in London – 8-20 am

Post No. 5783


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

அதிசய க்யூரியம்அதிசய அமெரிஷியம்குழந்தைகள் கூட்டத்தில் அறிவிப்பு! (Post No.5783)

நம் வீடுகளை செங்கற்காளால் கட்டுகிறோம். இந்தப் பிரபஞ்சமானது 118 மூலகம் (தனிமம்) என்னும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் பகர்வர். நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் முதல், பெண்கள் அணியும் தங்கம் வரை அனைத்தும் 118ல் அடக்கம். க்யூரியம் (Curium) என்ற உலோகமும் அமெரிஷியம் (Americium) என்ற உலோகமும் ரஹஸியமாகத் தயாரிக்கப்பட்டன. இரண்டாவது உலக மஹா யுத்த காலத்தில் அமெரிக்கா நடத்திய ஆராய்ச்சியில் இவை உருவானது. இதை அமெரிக்கா பரம ரஹஸியமாக வைத்திருந்தது. அதில் ஈடுபட்ட ஒரு விஞ்ஞானி குழந்தைகள் ரேடியோ   நிகழ்ச்சியில் இந்தக் கண்டு பிடிப்பை வெளியிட்டார். அவர் சொன்னது குழந்தைகளுக்கு விளங்கி இருக்காது! அடுத்த சில தினங்களில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியான பின்னர் வேதியியல் உலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதோ சில சுவையான மூலகக் கதைகள்!

1945 நவம்பர் 11ம் தேதி க்விஸ் கிட்ஸ் (Quiz Kids- Radio Show) என்ற ரேடியோ நிகழ்ச்சி நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக க்ளென் டி. ஸீபோர்க் (Glen T Seaborg) என்பவரை அழைத்திருந்தனர். அவர் எங்கள் ஆராய்ச்சியில் புதிய மூலகம் (தனிமம்) இரண்டு கிடைத்தன என்றார். இரண்டாவது உலக மஹா யுத்தம் முடிந்துவிட்டதால் அமெரிக்காவின் ரஹஸிய அணு ஆயுத ஆராய்ச்சிகள் வெளியிடப்பட்டன. இதற்குச் சில நாட்களுக்குப் பின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு உலகத்தை வியப்பில் ஆழ்த்தியது அமெரிக்கா.

இதற்கு ஓராண்டுக்குப் பின்னர், அந்த மூலகத்துக்கு அமெரிஷியம் என்ற பெயர் சூட்டப்பட்டது. அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்படி ஒரு நாமகரணம்!

மற்ற மொழிகளில் அமெரிஷிய என்றாலும் ஆங்கிலத்தில் அமெரிஷம் என்பர்.

ரேடியத்தைக் கண்டுபிடித்து கதிரியக்கத்தினால் புற்று நோய் ஏற்பட்டு இறந்த மேரி க்யூரி, பியர் (பீட்டர்) க்யூரி என்ற பிரெஞ்சு விஞ்ஞானிகளின் நாமம் க்யூரியம் என்ற மூலகத்துக்கு சூட்டப்பட்டது. ரேடியம் கதையை இன்னொரு நாள் சொல்லுகிறேன்.

அமெரிஷம் பற்றி சில சுவையான செய்திகள்.

எங்கள் லண்டனில் எல்லோருடைய வீட்டிலும் ஸ்மோக் அலார்ம் (Smoke Detector)  உண்டு. வீட்டை வாடகைக்கு விடுவதாக இருந்தால் இது கம்பல்ஸரி (கட்டாயம்).

வீட்டிலெங்கேனும் புகை அதிகமானால் உடனே இது ‘கியா, கியா’ என்று கத்த ஆரம்பித்துவிடும். சில நேரங்களில் தோசை வார்க்கும் போதோ சுவையான கறி செய்யும்போதோ கொஞ்சம் புகை வந்துவிட்டால் புகை அபாய அறிவிப்பு அலறும்; ஓடிப்போய் அதை அணைத்துவிட்டுப் பின்னர் ‘ஆன்’ (Switch On)  செய்வோம். வீடுகளுக்கு ஐயர்களை  பூஜைக்கு அழைத்தால் அவர் போடும் முதல் கட்டளை.

“ஆத்தில் (அகத்தில்) ஏதேனும் ஸ்மோக் அலார்ம் இருந்தால் அணைச்சுட்டு வாங்கோ” என்பார். அல்லது அவர் விளக்கையும் ஊதுபத்தியையும் ஏற்றிய அடுத்த நிமிஷத்தில் அபஸகுன அலார்ம் (எச்சரிக்கை ஒலி) வந்து விடும். இவ்வளவு பீடிகை எதற்கு என்று கேட்கிறீர்களா?

வீட்டுக்கு மிகவும் பயன் தரும் உயிர் காக்கும் தோழனான– ஸ்மோக் அலார்மில், அமெரிஷம் அல்லது அமெரிசியம் உளது. ஆனால் இதிலிருந்து வரும் கதிரியக்கம் உடலைப் பாதிக்கும் அளவு கிடையாது. ஆயினும் இதைப் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும் கதிரியக்கம் தாக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் உண்டு.

இதிலிருந்து வரும் கதிரியக்கம் எலும்புகளைத் தாக்கி அதன் மஜ்ஜையில் உருவாகும் இரத்த சிவப்பு அணுக்களை அழித்துவிடும்..

அமெரிக்காவில் இல்லினாய்ஸ் மாகாணத்திலுள்ள சிகாகோ பல்கலைக் கழகத்தில் ஸீபோர்க் உள்பட 4 விஞ்ஞானிகள் 1944ம் ஆண்டில் இதை உண்டாக்கினர். ப்ளூட்டோனியம் என்னும் மூலகத்தின் மீது, ஒரு அணு உலையில், நியூட் ரான்-களைக் கொண்டு தாக்கினால் க்யூரியமும் அமெரிஷமும் கிடைக்கும்.

ப்ளூடோனியம்-239 இலிருந்து அமெரிஷம் 243 கிடைக்கும் (ஐஸடோப்). இது நிலைத்து நிற்கக்கூடிய வகையறா; ஏனையவை குறுகிய காலத்தில் அழிந்து விடும். இது பாதியாகக் குறைய (Half Life) 7370 ஆண்டுகள் ஆகும். எல்லா கதிரியக்க மூலகங்களுக்கும் இப்படி அரை வாழ்வு (Half life) கணக்கு உண்டு. பின்னர் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக ஈயத்தில் வாழ்வு முடிந்து விடும்.

ஸ்மோக் டிடெக்டரில் பயன்படுவது அமெரிஷம்-241. ஒவ்வொரு ஸ்மோக் அலார்மிலும் 150 மைக்ரோக்ராம் அளவுதான் இது வைக்கப்படும். அந்தக் கருவியில்  மின்சார ஓட்டம் புகை காரணமாக தடைப்படுகையில் அதனுடன் இணைந்த எச்சரிக்கை மணி அடிக்கத் துவங்கும்.  5000 கருவிகள் செய்வதற்கு ஒரு கிராம் உலோகம் போதுமானது. ஆனால் அமெரிஷம் ஆக்ஸைட் ஒரு கிராமின் விலை 1500 டாலர்களுக்கு மேல்!

இதன் வேதியியல் குறியீடு- Am

அணு எண் -95

உருகு நிலை- 994 டிகிரி C

பூமியில் இது இயற்கையில் கிடைக்கக்கூடும். ஆனால் கோடிக்கணக்கான ஆண்டுகளில் அழிந்திருக்கலாம்.

பலவகை அமெரிஷம் காம்பவுண்டுகளை (உப்பு) செய்து, வெவ்வேறு கலர் ஊட்டுவர். எடுத்துக் காட்டாக அமெரிஷம் க்ளோரைட் இளஞ்சிவப்பு (ரோஜா) நிறத்தில் இருக்கும்.

இது வெள்ளி போன்று பளபளக்கும் ஒரு உலோகம்.

இனி க்யூரியத்தின் கதையைக் காண்போம்.

ஒரு பெண்ணின் பெயர் சூட்டப்பட்ட பெருமை இதற்கு உண்டு. அவர்தான் மேரி க்யூரி.

முன்னர் சொன்ன ஆராய்ச்சியில் கிடைத்ததுதான் க்யூரியமும். இந்தக் கதிரியக்கமும் மனிதர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும். ஆனால் இதையும் மிக   குறைந்த அளவில் பயன்படுத்தினால் ‘உயிர்  காக்கும் தோழன் ஆவான்.

ப்ளூட்டோனியத்தை நியூட் ரான் கொண்டு அடிக்கும் அடியில், க்யூரியம் கதறிக்கொண்டு வெளியே வரும். ஒவ்வொரு கிராம் உலோகத்தைக் கொண்டு, மூன்று வாட் (3 Watt) மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். இதன் காரணமாக இதை செயற்கை இருதயக் கருவிகள் (Pace makers), விண்கலங்கள், கடலில் மிதக்கும் வழிகாட்டி (Navigational buoys) மிதவைகள் ஆகியவற்றில் பயன்படுத்துகின்றனர். இது வெளியிடும் ஆல்பா (alpha rays) கிரணங்களை எளிதில் தடுக்க இயலுமாதலால் பாதுகாப்புப் பெட்டகத்தில் அடக்கிவைத்து, மின்சாரத்தைப் பெறுவர்.

இதன் வேதியியல் குறியீடு- Cm

அணு எண் -96

உருகு நிலை- 1340 டிகிரி C

இதுவும் செயற்கை மூலகம்; உலோகம். வெள்ளி  நிறம் உடையது. இதற்கு 14 அவதாரங்கள் (ஸடோப்புகள் ) உண்டு. க்யூரியம்-242 என்ற ஐஸடோப் 163 நாட்களில் அழிந்துவிடும். ஆனால் க்யூரியம்-247ன் அரை வாழ்வு 16 மில்லியன் ஆண்டுகள் (ஒரு மில்லியன் = பத்து லக்ஷம்).

இது இயற்கையில் கிடைப்பதல்ல. ஆனால் மனிதர்கள் நடத்திய அணு ஆய்த சோதனைகளால் காற்று மண்டலத்தில் கொஞ்சம் இருக்கக்கூடும்.

அமெரிஷத்தால் தீவிபத்து உயிரிழப்புகளைத் தடுக்க முடிகிறது; க்யூரியத்தால் செயற்கை இருதயக் கருவிகளை உருவாக்க முடிகிறது.

இயற்கையில் தீய கதிரியக்க மூலகங்கள்!!! ஆனால் மனிதனின் புத்திசாலித்தனம் இரண்டையும் உயிர் காப்பான் தோழன்’ என்ற வகையில் சேர்த்துவிட்டது அரக்கர்களைப் பயன்படுத்தி தேவர்கள் அமிர்தத்தைப் பெறவில்லையா? ஆகவே நம்மூர் முரடர்களையும் கூட, நுகத்தடியில் காளைகளைப் பூட்டி வேலை வாங்குவது போல வேலை வாங்கலாம்.

வாழ்க க்யூரியம்! வாழ்க அமெரிஷம்/ அமெரிஷியம்!!

TAGS– க்யூரியம், அமெரிஷியம்,  ஸ்மோக் அலார்ம், செயற்கை இருதயக் கருவி

–சுபம்–