
Compiled by London swaminathan
Date: 13 December 2015
Post No. 2386
Time uploaded in London :–7-09 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
பழைய கால நகைச் சுவை நூலான — பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.
நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை
நூறு ஆண்டு பழமையான ‘ஜோக்’குகள்

மூன்று செவிடர்கள் கதை
பொண்டிரெட்டிபட்டி யென்றவூரில் பொம்மனனென்றவனுக்கு வல்லாளகண்டியென்னும் பெண்வாழ்க்கைப் பட்டிருந்தாள். அவ்விருவரும் பீரங்கிபோட்டாலும் புகையென்று சொல்லக்கூடிய காதுகேளாத கம்பிளிகள்.
ஒருநாள் பொம்மணன் தன் மனைவியைப் பார்த்து, அடியே! இன்று அரைக்கீரை மசியலும் , உருளைக் கிழங்கு வறுவலும் செய்யென்று சொன்னான். அதற்கவள் தாங்கள் அசலூருக்குப் போவதால் எனக்குச் சமையல் வேண்டாமென்றாள். அதற்குப் பொம்மணன், சரி, செய். வயலுக்குப்போகிறேனென்று சொல்லிப்போய்விட்டான். இவள் தனக்குச் செய்துவைத்திருந்த சாப்பாட்டைச் சாப்பிடப்போகும் தருணத்தில் புருஷன் கதவைத்திறந்து உள்ளே வந்து, அடியே எனக்கு இலையைப் போடு என்றான்.
மனைவி:– ஏன் ஊருக்குப்போகவில்லையா?
புருஷன்:- நான்தான் உருளைக்கிழங்கு வறுவலும், அரைக்கீரை மசியலும் செய்யச் சொன்னேனே! செய்தாயா?
மனைவி: வண்டி உருளையை நான் பார்க்கவில்லையே!
புருஷனுக்குக் கோபம் வந்து உடனே தலைமயிரைப் பிடித்து அடித்துவிட்டு, ஊருக்கு மேற்கிலுள்ள மண்டபத்திலுட்கார்ந்து யோஜனைசெய்துகொண்டிருக்கும்போது,

ஒரு செவிட்டு இடையன் தன் ஆடுகளில் மூன்று காணாமற்போனதால், அதைத்தேடிக்கொண்டுவர மண்டபத்திலுட்கார்ந்திருக்கும் பொம்மணனைப் பார்த்து ஐயா! என் ஆட்டுக்குட்டிகளைப் பார்த்தீராவென்று கேட்க, இவனென்னமோ கேட்கிறானென்று கீழ்திசையை நோக்கிக் கையைக் காட்டினான். அதற்கு இடையன், சாமி! ஆடுகள் அகப்படால் உங்களுக்கு நொண்டியாடு ஒன்றிருக்கிறது. அதைத் தருகிறேனென்று சொல்லிப்போனான். தற்செயலாய் அத்திசையில் மூன்று ஆடுகள் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துக்கொண்டு அம்ம்மண்டபத்துக்கு வந்து, செவிட்டுப் பொம்மனைப் பார்த்து, இச்செவிட்டிடையன், சாமி! இந்தாங்க, நொண்டியாடு வாங்கிக் கொள்ளுங்கள் என்றான்.
பொம்மண: அடே போடா! நான் ஒடிக்கவில்லை, காலை.
இடையன்: நல்ல ஆடாவேணும்! அது முடியாது. (காலைக் காட்டி) நொண்டியாடுதான் கொடுப்பேன்.
பொம்மண: வலது காலும் ஒடிக்கவில்லை, இடது காலும் ஒடிகவில்லை போடா!
இதேது, உபத்திரமாயிருக்கிறது. பெண்சாதி, சொன்னபடி கேட்கவில்லையென்று இங்குவதால் இவன் ஆட்டின் காலை ஒடித்தானென்கிறானே!
இடையன்; கும்பிட்டு விழுகிறேன் சாமி! கோபித்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் ஒப்புக்கொண்டபடி இந்த நொண்டியாட்டை வாங்கிக்கொள்ளவேணும்.
பொம்ம: ஐயையோ! இதேது இழவாயிருக்கிறது, இந்த நொண்டியாட்டை வைத்துக்கொண்டு வேறே ஆடு கேட்கிறானே. இது அநியாயம்.

இதற்குள் வழியே போன ஒரு தகல்பாஜி இச்செய்கையறிந்து, இடையனைக் கூப்பிட்டு, அடே உனக்கெனடா, இந்த நொண்டியாட்டைக் கட்டிவிட்டுப் போவென்றான். அந்தப்படி கட்டிவிட்டு அவன் நெடுந்தூரம் போனபிறகு, ஓய், இதோ பாரும், நீர் இந்த ஆட்டின் காலை ஒடித்ததற்காக ஒரு போலீஸ்காரனைக் கூட்டிவரப்போகிறான் என்று உரத்துக் கூறப் பொம்மணன் விழுந்து ஓட்டமாயோடித் தன்வீடு போய்ச் சேர்ந்தான். தகல்பாஜியும் இதுதான் சமயமென்று நொண்டியாட்டைப் பிடித்துக்கொண்டுசென்றான்.
–சுபம்–
You must be logged in to post a comment.