
Written by London Swaminathan
Date: 17 MARCH 2018
Time uploaded in London – 6-20 AM
Post No. 4824
Pictures shown here are taken by London swaminathan
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகிலுள்ள திருக்கோவிலூருக்குச் சென்றேன். தென் பெண்ணை ஆற்றின் கரையில் அழகான சூழ்நிலையில் ஞானாநந்த தபோவனம் உள்ளது. அங்கு விலைக்கு வாங்கிய மலரில் (புஸ்தகத்தில்) ஒரு அதிசயச் செய்தியைப் படித்தேன்; எனக்கு முழுதும் விளங்கவில்லை; உங்களுடன் அதைப் பகிர்வேன் .

திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு இடங்களில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருக்கோவிலூரில் பல முக்கிய இடங்கள் உள; அவற்றில் சில:– சிவன் கோவில், உலகளந்த பெருமாள் கோவில், ஞானாநந்தா தபோவனம் மற்றும் பல ஆஸ்ரமங்கள்.
நான் சிறு பையனாக இருந்தபோது எங்கள் அண்ணன் இருவருக்கும் திருப்பதியில் பூணூல் போட்டார்கள். எனது தந்தை வேங்கடராமன் சந்தானம் மதுரையின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டி.வி.எஸ்-சுக்கு நெருக்கமானவர். அங்குள்ள ராமசந்திரன் என்பவர் பெரிய காரையும் கொடுத்து, நல்ல டிரைவரையும் கொடுத்து எங்களை ஊர்வலம் அனுப்பினார். அப்போது வரும் வழியில் திருக்கோவிலூருக்கும் சென்றதாக நிழல் போல சில நினைவுகள்.
நான் பள்ளிப் படிப்பு படிக்கையில் திருக்கோவிலூரில் தபோவனம் (ஆஸ்ரமம் அமைத்த) சுவாமி ஞானாநந்தா மதுரைக்கு வந்தார். எந்த சுவாமிகள் மதுரைக்கு வந்தாலும் மிகப்பெரிய ‘பப்ளிசிட்டி’ கொடுப்பது எங்கள் தந்தயின் கீழ் இருந்த மதுரை தினமணி மட்டுமே! அந்தக் காலத்தில் ஆன்மீகச் செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிடுவது ‘’ஹராம்’’ (அபச்சாரம்) என்று கருதினர். மதுரை தினமணிப் பொறுப்பாசிரியர் வெ. சந்தானம் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இதன் காரணமாக மதுரைக்கு சுவாமி ஞானாநந்தா வந்தபோது பழக்கடை தங்கவேலு, அவரது அம்மன் சந்நிதி பழக்கடையின் மாடியில் சுவாமிகளை தரிசிக்க எங்கள் குடும்பத்தை அழைத்து இருந்தார்; அடியேனும் ஒட்டிக்கொண்டேன்; அப்பொழுது அவரது தரிசனம் கிடைத்தது. எங்கள் வீட்டின் சுவாமி அறையில் இருந்த 108+ சாமியார் படங்களுடன் சுவாமி ஞானாநந்தா படமும் பூஜையில் இடம் பெற்றது. அது முதற்கொண்டு அவருக்கும் பூ வைப்போம்.

நீண்டகாலமாக திருக்கோவிலூர் செல்ல வேண்டும் என்ற ஆவல், இந்த முறை இந்தியாவுக்குச் சென்றபோது நிறைவேறியது (7-3-2018). தபோவனம் நல்ல அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது. காலை பத்தரை மணிக்குக் காலை பூஜை முடிந்துவிடும் என்பதால் விருத்தாசலத்தில் இருந்து சிட்டாகப் பறந்தோம்; சமாதியைத் தரிசித்தோம்; வலம் வந்தோம் புகைப்படம் எடுத்தோம். நன்கொடை கொடுப்பதற்குப் பதிலாக புத்தகங்கள் வாங்கி ஆஸ்ரமத்துக்கு பணம் அளித்தோம் ; ஒரு புஸ்தகம் 1999-ல் வெளியான கும்பாபிஷேக மலர். அதில் ஹரிதாஸ் சுவாமிகள் முதல் பலரும் அரிய பெரிய கட்டுரைகள் எழுதி இருந்தனர். அத்தனையையும் படித்+தேன். அது ஒரு படி, தேன் (one measure of honey) போல இனித்தது.
(ஸ்டாலின் பற்றிய நூலைப் படித்தேன்; அது ஒரு படி, தேன் என்பது கலைஞர் கருணாநிதி சொன்னது). நிற்க
யார் இந்த சுவாமி ஞானாநந்தா?

கர்நாடகத்தில் மங்களூரில் பிறந்து, வடக்கில் ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாராக சில காலம் இருந்து, இமய மலைக்கு மீண்டும் சென்று தவம் செய்து, பின்னர் நேபாளம் முதல் இலங்கை வரை பயணம் செய்து, தமிழ்நாட்டில் ஆட்டையாம்பட்டி ஏற்காடு முதலிய சில இடங்களில் ஆஸ்ரமங்கள் அமைத்து, இறுதியில் திருக் கோவிலூர் எனும் புனித க்ஷேத்ரத்தில் தபோவனம் நிறுவி, ஹரிதாஸ் சுவாமிகள் போன்ற பல பக்தர்களை உருவாக்கி, புகழ் மணமும் பக்தி மழையும் பொழிந்து 1974-ஆம் ஆண்டில் சமாதி அடைந்தார் ஞானாநந்தா.
இவருடைய சமாதி ஜீவ சமாதி- அதாவது பூத உடல் மறைந்தாலும் அவர்கள் அங்கே எப்போதும் இருந்து அருள் புரிவர். சுவாமிஜியின் குரு- ஜோதிர் மடத்தின் தலைவர் சிவரத்ன கிரி.

இவரைப் பற்றிய இரண்டு அதிசயச் செய்திகள்:
இவர் 150 ஆண்டுகள் வாழ்ந்தாராம்; இவர் என்று பிறந்தவர் என்பது யாருக்கும் தெரியாது; கர்நாடகத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவர் பேச்சுவாக்கில் சொன்ன செய்திகளில் இவர் ராமலிங்க சுவாமிகள் (வடலூர் வள்ளலார்) முதலிய பல பெரியோரைச் சந்தித்தவர் என்பது புலப்படும்.
இரண்டாவது செவிவழிச் செய்தி என் தந்தை மூலம் அறிந்தது- இவர் சமாதி நிலையில் அடிக்கடி இருந்ததால் உண்மையில் பூத உடலை விட்டுச் சென்றாரா என்பது பக்தர்களுக்குப் புதிராக இருந்ததாம்; பல நாட்களுக்கு உடல் அசைவில்லாமல் இருக்கவே காஞ்சி முனிவர்- மஹாபெரியவர்- சங்கராசார்யாரிடம் கருத்து கேட்டனராம்; அவர் குறிப்பிட்ட சில நாட்களைச் சொல்லி- அதற்குள் எழுந்திருக்காவிடில் சமாதியில் இறக்கிவிடுங்கள் என்று சொன்னவுடன் சீடர்கள் அப்படிச் செய்தனராம்.
இவை அனைத்தும் உண்மை என்றே நான் நம்புகிறேன்.

தபோவன மலரில் பல அதிசயங்கள் எழுதப்பட்டபோதும் நான் படித்த ஒரு அதிசயச் செய்தி எனக்கு விளங்கவில்லை. தபோவனம் எப்படி விரிவடையப் போகிறது என்பதெல்லாம் அவர் சொன்னபடியே நடந்தது. அவர் இருக்கும் காலத்திலேயே தபோவனத்தில் பல சந்நிதிகளையும் வைத்து பூஜை செய்யவைத்தார். ஆனால்…………..
ராஜ மாணிக்கம் என்பவர் எழுதிய கட்டுரையில் சுவாமிகள் பம்பாய் சென்று செவ்வாய் மண்டல ஞானிகளை அழைத்துவரப்போவதாகவும் அப்போது சுவாமிகளின் 1008 சங்க நாதம் ஒலிக்கும் என்றும் உலகமே சுபிட்சமாக வாழும் என்றும் இந்த நிகழ்வினைக் கண்டு உலகமே ஆச்சர்யப்படும் என்றும் — அந்தக் கட்டுரை முடிகிறது.
ஒரு பக்தரின் எழுத்து மூலம் வந்த செய்தி என்பதால், ஞானாநந்தா என்ன சொன்னார், எந்த சூழ்நிலையில் சொன்னார், செவ்வாய் மண்டல ஞானிகள் என்பது நாம் அறிந்த கிரஹங்களில் ஒன்றான செவ்வாயா அல்லது வேறு பொருள் உடைத்தா என்பது விளங்கவில்லை.

சுவாமிகளின் பூத உடல் சமாதியில் இறக்கப்பட்டு விட்டாலும் அவருடைய அருள் அவர் சொன்னபடியே இன்றும் அங்கே இருப்பதை நாம் உணரமுடிகிறது. ஆகவே அவர் புகழ் உடம்பு அந்த அதிசயத்தை நிகழ்த்தும் என்று எதிர் பார்ப்போமாக ( ஆஸ்ரம மலரில் வெளியான கட்டுரையின் கடைசி பக்கத்தை இங்கே இணைத்துள்ளேன்; ப டித்து மகிழ்க.
ஞானாநந்த சுவாமிகளுக்கு நமஸ்காரம்; அவர் புகழ் ஓங்குக!


–subham–