
Written by London swaminathan
Date: 11 December 2016
Time uploaded in London: 7-06 am
Post No.3438
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
பெண்களின் குரலைக் குயில் போல இருக்கிறது என்றும் சொல்லைக் கிளி போல இருக்கிறது என்றும் போற்றுவது கவிகளின் மரபு.
தமிழ் மொழியைத் தேனினும் இனிய மொழி என்று பாராட்டுவதை அறிவோம். ஆனால் ஒரு சொல்லை எடுத்து அதைத் தேனிலும் அமிர்தத்திலும் குழைத்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும்?
இது கம்பனும் அவரைப் பின்தொடர்ந்து பாரதியாரும் செய்த ஆராய்ச்சி. அந்த ஆராய்ச்சியின் முடிவுதான் இந்த இரண்டு பாடல்களும்!
அளவு இல கார் எனும் அப்பெரும்பருவம் வந்தணைந்தால்
தளர்வர் என்பது தவம் புரிவோர் கட்கும் தகுமால்
கிளவி தேனினும் அமிழ்தினும் குழைத்தவள் கிளைத்தோள்
வளவி உண்டவன் வருந்தும் என்றால் அது வருத்தோ
—–கம்பன் பாடல், கிட்கிந்தாக் காண்டம்,கார்காலப் படலம்
பொருள்:–
ஓர் அளவில்லாத சிறப்புடைய கார்காலம் வந்து விட்டால், முற்றும் துறந்த முனிவர்களும் மனம் தளர்ந்து போவார்கள். ஆகவே தேன், அமிழ்தம் ஆகிய இரண்டிலும் தோய்த்து எடுத்தது போன்ற இனிமையான சொற்களைப் பேசும் சீதையின் தோள்களைத் தழுவிய இராமனுக்கு, கார்காலம் துன்பம் தந்தது என்றால் அது துன்பம் என்று கொள்ளத் தக்கதோ?
பாரதி என்ன கம்பனுக்கு சளைத்தவனா?
இதோ பாருங்கள்! பாரதி பாட்டை!
“வில்லினை யொத்த புருவம் வளைத்தனை
வேலவா! — அங்கொர்
வெற்பு நொறுங்கிப் பொடிப் பொடி
யானது வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப்பாள் சிறு
வள்ளியைக் — கண்டு
சொக்கி மரமென நின்றனை தென்மலைக்
காட்டிலே
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
பாதகன் – சிங்கன்
கண்ணிரண்டாயிரங் காக்கைக்கிரையிட்ட
வேலவா!
பல்லினை காட்டி வெண்முத்தைப் பழித்திடும்
வள்ளியை – ஒரு
பார்ப்பனக் கோலந்தரித்துக் கரம்தொட்ட
வேலவா!
–சுப்பிரமணிய பாரதியார்
ஆக இரு கவிஞர்களும் நமக்கும் அவர்களுடைய கவிதைகளைத் தேனில் குழைத்துத் தந்துவிட்டார்கள்!

தேன் தமிழ்
தமிழுக்குள்ள ஏராளமான சிறப்பு அடை மொழிகளின் பட்டியலை ஏற்கனவே ஒரு கட்டுரையில் கொடுத்துவிட்டேன். தமிழ் என்றாலேயே இனிமை என்பது புலவர்தம் கருத்து. ஆனால் கம்பன் மேலும் ஒரு படி சென்று தமிழ் என்றால் தேன் என்பான்:-
அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும்
தமிழ் நிகர் நறவமும் தனித் தண் தேறலும்
இமிழ்கனிப் பிறக்கமும் பிறவும் இன்னன
கமழ்வுறத் துவன்றிய கணக்கில் கொட்பது
–கிட்கிந்தா காண்டம், பிலம்புக்கு நீங்கு படலம்
பொருள்:-
மேலும் அந்த நகரம் அமிழ்தத்தைப் போன்ற சோறு முதலிய உணவுப் பொருள்களும், தமிழ் மொழியைப் போன்ற தேனும் குளிர்ந்த மதுவும், இனைய பழங்களின் தொகுதியும் — இவை போன்ற மற்ற உணவுப் பொருட்களும் நறுமணம் வீசுமாறு நிறைந்துள்ள எல்லையற்ற பெருமை உடையது — கிட்கிந்தா காண்டம்
தேன் தமிழை நாமும் மாந்தி, தமிழ் போதையில் திளைப்போம்.
–subham–