
Post No.7903
Date uploaded in London – 30 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
27 நட்சத்திரங்களில் எது முதல் நட்சத்திரம்?- Part 2 (Post 7903)
ஒரு வட்டத்தில் முதல் எது? கடைசி எது?
நான் ஒரு இடத்தில் ஒரு புள்ளி வைத்து இதுதான் முதல் என்பேன். என் எதிராளி வேறு ஒரு இடத்தில் புள்ளி வைத்து இதுதான் முதல் என்பான். ஆக, சந்திரன் சுற்றும் வட்டப்பாதையிலுள்ள 27+1 (அபிஜித்) நட்சத்திரங்களில் எது முதல், எது கடைசி என்று யோஜிக்கலாம். ஆனால் இது அப்படித் தீர்மானிக்கப்படக் கூடியதல்ல . இதில் வேறு சில சூட்சுமங்கள் இருக்கின்றன.
நட்சத்திரம் என்றால் ‘ஒளி இல்லாதது’ என்று பொருள் சொல்லி அதற்கு ஒரு கதையும் சொல்கிறது சதபத பிராஹ்மணம். யாஸ்கர் எழுதிய நிருக்தம் இதையும் சொல்லி, ‘ நக்ஷ’ என்றால் ‘அருகில் வர’ என்று பொருள் சொல்லும். சதபதம் சொல்லும் பொருளையே சரி என்பார் ( பாணினி 6-3-75) பாணினி.
வேத கால நட்சத்திரப் பட்டியல் கிருத்திகா / கார்த்திகையுடன் துவங்கும். யாக்ஞ வால்க்ய (1-267) ஸ்ம்ருதி காலம் வரை இது நீடித்ததாக (Hopkins) ஹாப்கின்ஸ் கூறுகிறார் .

அஸ்வினி என்பது கி.பி.490-ல் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றது . இது மார்ச் 21 ஏற்படும் வெர்னல் எக்வினாக்ஸ் (vernal equinox) எனப்படும் காலம் ஆகும். கிருத்திகாதான் முதல் நட்சத்திரம் என்பதை பதஞ்சலியும் உறுதி செய்கிறார்( 2-2-34). அதாவது 2200 ஆண்டுகளுக்கு முன்வரை இதே நிலை.
பாணினி 4-3-34 சூத்திரத்தில் ‘ச்ரவிஷ்டாவில் துவங்கி பல்குணி, அனுராதா , சுவாதி, திஷ்ய, புனர்வசு, ஹஸ்த, விசாகா -ஆஷாட, பஹுல’ என்பார்.
வேதாங்க ஜோதிடத்தில் ச்ரவிஷ்டா என்னும் அவிட்ட நட்சத்திரம்தான் முதலில் வருகிறது. இது பற்றி கார்க மஹரிஷி விளக்கம் தருகிறார் . சடங்குளைச் செய்கையில் கிருத்திகா (பஹுல) முதலில் வரும்; சாதாரண விஷயங்களில் அவிட்டம் (ச்ரவிஷ்டா / தனிஷ்டா) முதலில் வரும்.
“கர்மசு கிருத்திகாஹா பிரதமம் ;
ச்ரவிஷ்டா து சங்கியாயாஹா “.
இதை ஆராய்ந்த ஹாப்கின்ஸ் மஹாபாரதத்திலும் இரண்டு விதமான முறைகள் இருப்பதைக் கண்டார்.
1.வன பர்வத்தில் தனிஷ்டா/ ச்ரவிஷ்டா / அவிட்டம் முதலில் வைக்கப்பட்டுள்ளது 230-10 வன பர்வம்.
2. ஸ்ரவணா தீனி ரிக்சாணி – என்று அஸ்வமேத பர்வத்தில் வருகிறது ; (ஸ்ரவணம் — ஓணம் )
இதை அறியாமல் ப்ளீட் (Fleet) செய்த வேறு ஒரு ஆராய்ச்சியில் ஆதி பர்வத்தில் வரும் 71-34 ஒரு குறிப்பை அளிக்கிறார்:–
பிரதிஸ்ரவண பூர்வானி நக்ஷத்ராணி சகார யஹ .
இதிலிருந்து தெரிவது என்ன ?
சிரவணம் என்னும் ஓணம் இரண்டு குறிப்புகளில் முதலில் வைக்கப்பட்டுள்ளது.

அதாவது காலம் உருண்டோடிவிட்டது. தனிஷ்டா/அவிட்டம் முதலில் இருந்த குளிர்கால சங்க்ராந்தி (Winter Solstice) காலத்திலிருந்து மேற்கு நோக்கிச் சென்று இப்போது ஓணத்துக்கு வந்துவிட்டது . பாணினி வேதாங்க ஜோதிடத்தைப் பின்பற்றி ஓரிடத்தில் அதை முன் வைக்கிறார்.
அவர் வேதாங்க ஜோதிடத்தை ஆதரிப்பவர் என்பது, எந்த நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறதோ அதை அந்த மாதமாக குறிப்பிடுவதில் இருந்து தெரிகிறது
சித்திரா நட்சத்திரத்தில் பவுர்ணமி ஏற்பட்டால் அந்த மாதத்துக்கு சைத்ர /சித்திரை என்று பெயர் 6-2-21
தனிஷ்டா காலம் எது ?
குளிர்கால சங்கராந்தி (WINTER SOLSTICE) அவிட்டத்திலிருந்து ஒணத்துக்கு மாறியது எப்போது ?

விச்வாமித்ர மகரிஷி புதிய நட்சத்திர மண்டலத்தைப் படைத்தார் என்று மகாபாரதமும் புராணங்களும் புகழும்; அவர்தான் காலத்துக்கு ஏற்ற காலண்டரை உருவாக்கி புரட்சி செய்தார். ஆங்கில காலண்டரில் ஜூலியன் (Julian Calendar) செய்த மாற்றங்களுடன் உள்ளதையே இன்று நாம் பின்பற்றுகிறோம். அதுபோல விசுவாமித்திரர் தனிஷ்டா எனப்படும் அவ்விடத்தில் இருந்து ஸ்ரவணம் எனப்படும் ஓணத்துக்கு மாற்றினார் . வேத காலத்தில் முதலில் இருந்ததோ கிருத்திகா. இவை எல்லாம் அவற்றின் காலத்தைக் கணக்கிட நமக்கு உதவுகின்றன.
பேராசிரியர் ஜோகேஷ் /யோகேஷ் சந்திர ரே 1934-ல் இதைக் கணக்கிட்டுக் கொடுத்தார் .
ச்ரவிஷ்டா என்னும் அவிட்டத்தின் வானியல் பெயர் – Beta Delphini பீட்டா டெல்பிணி.
இது கி.மு.1372-ல் சூரியன், சந்திரன் ஆகியவற்றுடன் குளிர்கால சங்கிராந்தியில் (WINTER SOLSTICE) சேர்ந்து இருந்தது. ஆகவே இது 3372 ஆண்டுகளுக்கு முந்தையது.
வானியல் கணக்கில் ஒரு டிகிரி கடந்து செல்ல 70 ஆண்டுகள் பிடிக்கும். இவ்வாறு சுமார் 933 ஆண்டுகள் சென்ற பின்னர் , அதாவது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் சிரவணம் முதலிடம் பிடித்தது.
ஆகையால் ச்ரவிஷ்டா நட்சத்திரம் பற்றிப் பேசுவோர் கி.மு. ஐந்தாம் நூற் றாண்டுக்கு முந்தையோர். (கிருத்திகாவை முதலில் வைக்கும் வழக்கம் வேத காலத்தியது )
ஆக இவைகளைக் கால வரிசைப் படுத்தினால்
1.வேத காலத்தில் கிருத்திகா/ கார்த்திகை முதல் நட்சத்திரம்
2.பின்னர் அவிட்டம்/தனிஷ்டா முதல் நட்சத்திரம்
3. அதற்குப் பின்னர் ஓணம் எனப்படும் ஸ்ரவணம் முதல் நட்சத்திரம்
4.தற்கால அஸ்வினி CE 490-ல் வழக்கத்துக்கு வந்தது .
குளிர்கால சங்க்ராந்தி (WINTER SOLSTICE) மாறியவுடனே முதல் நட்சத்திரமும் மாறிவிட்டது என்றும் சொல்வதற்கில்லை. அதை அக்கால வானியல்- ஜோதிட வல்லுநர்கள் விவாதித்து பஞ்சாங்கத்தில் மாற்றிய பின்னர் கூட நிகழ்ந்திருக்கலாம்.
மஹா பாரதத்தில் பலவிதமான குறிப்புகள் இருப்பது அவை அவ்வப்போது சேர்க்கப்பட்டவை. இந்துக்கள் எல்லாவற்றை யும் ‘அப்டேட்’ UPDATE செய்து கொண்டே வருவார்கள்.

கட்டுரைத் தொடரின் மூன்றாவது (இறுதி) பகுதியில் 27 நட்சத்திரங்கள் பற்றி பாணினி என்ன சொல்கிறார் என்பதைக் காண்போம்.
XXXX subham xxxxx