
Written by S NAGARAJAN
Uploaded in London on – 2 JANUARY 2020
Post No.7409
contact – swami_48@yahoo.com
pictures are taken from various sources; thanks.
பாக்யா 1-1-2020 இதழில் அறிவியல் துளிகள் பகுதியில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு இருபத்தி மூன்றாம் கட்டுரை -அத்தியாயம் 439
2019ஆம் ஆண்டின் அதிசய புதிய கண்டுபிடிப்புகள்!
ச.நாகராஜன்
2019ஆம் ஆண்டு முடிந்து விட்ட தருணத்தில் உலகில் உள்ள அனைத்து அறிவியல் இதழ்களும் இந்த ஆண்டின் அதிசய கண்டுபிடிப்புகள் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியுள்ளன. அடேயப்பா என்று பிரமித்துப் போகிறோம். குறிப்பாக டைம் மற்றும் லைவ் ஸயின்ஸ் போன்ற இதழ்கள் நூற்றுக் கணக்கான புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்துள்ளன. சிலவற்றை இங்கு பார்த்து பிரமிப்போம்.
காற்றிலிருந்து குடிநீர்

தண்ணீர் பற்றாக்குறை பெருகி வரும் இந்நாளில் வாட்டர்ஜென் (Watergen) என்ற இஸ்ரேல் நாட்டுக் கம்பெனி தயாரித்துள்ள ‘ஜென்னி’ (Genny) என்ற இயந்திரம் ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு . சாதாரணமாக நாம் அன்றாடம் பார்க்கும் வாட்டர்கூலர் போல இருக்கும் இது, தானே சுற்றுப்புறத்தில் இருக்கும் காற்றிலிருந்து நீரை எடுத்து, பருகும் அளவிற்குச் சுத்தம் செய்து தந்து விடும். ஒரு நாளைக்கு 7 காலன் தண்ணீரை (11 லிட்டர்) இது தரும். இது இயங்க மின்சக்தியோ அல்லது சூரிய ஆற்றலோ தேவைப்படும். இதன் விலை 1500 டாலர்! (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் ரூ 70)
ஸ்மார்ட் ஹலோ (SmartHalo)
பெருநகரங்களில் வழி தெரியாமல் அங்குமிங்கும் அலையாதபடிக்கு இப்போது உதவிக்கு வருவது மொபைல் போன். அதில் இருக்கும் படத்தைப் பார்த்தவாறே வண்டியை ஓட்டினால் போகும் இடம் தெரியும் என்றாலும் கூட அபாயம் அதிகம். சட்டப்படி வண்டி ஓட்டும்போது அதை உபயோகிப்பது தவறு. ஆக இப்படி புது இடம் செல்வோருக்கு வழிகாட்டி ஸ்மார்ட்ஹலோ2. இந்த சாதனம் ஸ்மார்ட்போனிலிருந்து செல்ல வேண்டிய திசையை எல் இ டி (LED) ஒளியாக மாற்றி பைக் அல்லது ஸ்கூட்டரின் ஹாண்டில்பாரில் அடுத்து எந்த திசையில் போக வேண்டும் என்று அம்புக்குறி இட்டுக் காட்டும். சைக்கிளிலும் இதை பொருத்திக் கொள்ளலாம். எது சுலபமான வழி, எதில் சென்றால் நேரம் குறைவாக இருக்கும் என்பது உட்பட இது அனைத்தையும் ஆராய்ச்சி செய்து வழி காட்டும்!
மூக்குக்கண்ணாடியில் பாட்டுக் கேளுங்கள் (Bose Frame)

பார்வைக்காக கண்ணாடி அணிந்தாலும் சரி, ஃபேஷனுக்காக சன் க்ளாஸ் அணிந்தாலும் சரி, இனி அதன் மூலம் ஒலியையும் கேட்க முடியும். போஸ் ஃப்ரேம்ஸ் (Bose Frames) என்ற பெயருள்ள இந்த சாதனம் நெற்றியின் இரு புறங்களிலும் பொருத்திக் கொள்ளக் கூடிய ஒரு சிறிய ஆடியோ சாதனத்தைக் கொண்டிருக்கும், அது அதை அணிபவருக்கும் மட்டும் கேட்கும்படியாக பாட்டு உள்ளிட்ட அனைத்தையும் ஒலிக்கும். இனி ஹெட் போனை மாட்ட வேண்டிய அவசியமோ அலது போட்காஸ்டோ தேவையில்லை. இந்த சன்கிளாஸை உங்களது ஸ்மார்ட்போனுடன் ப்ளூடூத் வழியாக இணைத்து விடலாம். வேண்டுமென்றால் உங்களுக்குத் தேவையான அனைத்துச் செய்திகள்/ குறிப்புகள் ஆகியவற்றை அததற்குறிய ‘ஆப்ஸின்’ மூலமாக ஒலியாகப் பெறலாம். ஆக இது நடந்தாலும், படுத்தாலும், வண்டி ஓட்டினாலும் உங்களுடன் பேசிக் கொண்டே இருக்கும் ஒரு அரிய துணையாக அமையும்!
பாதுகாப்பான மேக்-அப்பிற்கு சூப்பர்கூப்
கண்களைச் சுற்றியுள்ள தோல் பகுதி மிகவும் மெல்லியதானது; வயதானதை உடனே காட்டும் தன்மை கொண்டது; தோல் கான்ஸர் சுலபமாக வருவதற்கான இடமும் இது தான் என்பதால் 10 சதவிகிதம் பேருக்கு தோல் கான்ஸர் இங்கு ஏற்படுகிறது. ஆகவே மேக்-அப் போடும் போது பலர் எரிச்சலூட்டும் சாதனங்கள் பலவற்றைப் போட்டுக் கொள்வதில்லை. இந்தப் பாதுகாப்பற்ற தன்மையை நீக்கி உதவிக்கு வரும் சூப்பர் மேக்-அப் சாதனம் சூப்பர்கூப் (Supergoop). சோதனைச்சாலையில் பரிசோதிக்கப்பட்டு பாதுகாப்பானது என்ற சர்டிபிகேட்டைப் பெற்றது இது. சூரிய ஒளி கண்களைப் பாதிக்காமல் இருக்க சன்ஸ்க்ரீனை மருத்துவர்கள் பரிந்துரைப்பர். ஆனால் இனி கண்களைச் சுற்றி சூப்பர்கூப்பைப் போட்டாலே போதும், அழகு கூடும், அபாயம் குறையும்.
பேசும் ஹியரிங் எய்ட்
காது கேளாதோருக்கு ஒரு தர்மசங்கடம் ஹியரிங் எய்டை அணியலாமா வேண்டாமா என்பது தான்! ஸ்டார்கி ஹியரிங் டெக்னாலஜிஸ் (Starkey Hearing Technologies) என்ற கம்பெனி ஒரு புது ஹியரிங் எய்டைக் கண்டுபிடித்திருக்கிறது. இது செயற்கை அறிவு எனப்படும் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஒரு கருவி. இதில் உள்ள சென்ஸர்கள் உங்களுக்குப் பிடித்தமான இசைப்பாடல்களைக் கேட்க வைக்கும். நீங்கள் கேள்வி கேட்டால் மொபைல் போன் பதில் சொல்வது போல கேள்விக்கு உரிய பதிலை அளிக்கும். அன்னிய மொழியில் ஒருவர் பேசுவதை உங்கள் மொழியில் மொழியாக்கம் செய்து தரும். தனியாக இருக்கும் வயதான மூத்தவர்களுக்கு இது ஒரு அரிய துணை. ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள் உள்ளிட்ட பல தகவல்களை உங்களுக்கு இது அளிக்கும். சாதாரணமாகக் காது கேட்பவர்களை விட இன்னும் அதிகத் துல்லியமாகக் கேட்பதற்கான ஒரே வழி இந்த ஹியரிங் எய்ட் தான்! இது தான் எங்கள் கம்பெனியின் சூப்பர் கண்டுபிடிப்பு, அதிகமாக விற்பதும் கூட என்கிறார் இந்தக் கம்பெனியின் தொழில் நுட்ப நிபுணரான் அச்சின் பௌமிக்.
இன்னும் இது போல 2019இன் சிறந்த 95 கண்டுபிடிப்புகளின் விவரத்தை பிரபல டைம் இதழ் படத்துடன் தந்துள்ளது. தனது நிருபர்கள், ஆன் லைன் தகவல் சேகரிப்பு ஆகியவற்றின் மூலமாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உலகின் தலை சிறந்த முதல் நூறு கண்டுபிடிப்புகளை இந்த இதழ் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய உலகின் உள்ளே செல்ல இருக்கிறோம் என்பதையே இந்த அறிவியல் அதிசயங்கள் எடுத்துரைக்கின்றன!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
நமது நாட்டின் முதல் பயிரியலாளர் (Botanist) ஒரு பெண்மணி என்பதைப் பலரும் அறிந்திருக்க முடியாது. கேரளாவைச் சேர்ந்த ஜானகி அம்மாள் இந்தப் பெருமையைப் பெறுகின்ற அரிய பெண்மணி. 1897ஆம் ஆண்டு 19 சகோதர, சகோதரிகளைக் கொண்ட ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்த இவர் தைரியமாக தாவரவியலைத் (Botany) தேர்வு செய்து மதறாஸ் பிரஸிடென்ஸி காலேஜில் படிக்க ஆரம்பித்து பெரும் நிபுணரானார். போர்பர் ஸ்காலர்ஷிப் என்று ஒரு அரிய உதவிதொகை கிடைக்கவே முதன் முதலாக அமெரிக்காவிற்குச் சென்ற தாவரவியல் பெண்மணி என்ற பெயரும் இவருக்கு கிடைத்தது. அங்கு பல அரிய கண்டுபிடிப்புகளைச் செய்த இவரை அனைவரும் பாராட்டினர்; இவர் பெயர் மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள் (Magnlolia Kobus Janaki Ammal) என்றே ஒரு புதிய தாவரத்திற்குச் சூட்டப்பட்டது.
ஒரு முறை எல்லிஸ் ஐலண்டிற்குச் சென்ற இவரை உள்ளே நுழைய அங்குள்ள அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஆனால் இவரது நீண்ட சுருண்ட கேசத்தையும் உடையையும் பார்த்து அசந்து போன அவர்கள் நீங்கள் ஒரு இந்திய ராஜகுமாரியா என்று கேட்டனர். அதற்குத் தன் புன்னகையால் பதில் அளித்த இவரை உள்ளே வர அனுமதித்தனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பல்வேறு வித தாவர இனங்களை இனம் கண்டு வகை பிரித்த இவர் உலகின் முதல் இந்திய தாவர இயல் விஞ்ஞானி எனக் கொண்டாடப்பட்டார். இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு இவரது அரிய திறமையை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று விரும்பி அவரை உடனே இந்தியா வருமாறு வேண்ட ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் அவர் இந்தியா வந்தார். கரும்புச் சாகுபடியில் பல நல்ல முன்னேற்றங்களைச் செய்து காட்டினார்.
இந்தியாவில் உள்ள அரிய தாவர வகைகளை வெளி நாட்டு விஞ்ஞானிகள் இங்கு வந்து எடுத்துச் சென்று தங்கள் நாட்டில் ஆராய்ச்சி செய்து வந்தனர். (இன்றும் கூடப் பெரும்பாலும் இதே நிலை தான்!) எந்த இந்திய தாவரமானாலும் சரி வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் சோதனைச் சாலைகளே அதற்கான செய்திகளைத் தரும். அதை மாற்ற விரும்பி ஒரு பெரும் தகவல் களஞ்சியத்தை இவர் உருவாக்கினார். 87ஆம் வயதில் மறைந்த இவர் பற்றி பெரும்பாலானோருக்குத் தெரியாது என்பதே உண்மை! ஆனால் வெளிநாட்டுப் பத்திரிகைகள் இன்றளவும் இவரைப் பற்றிப் புகழ்ந்து கட்டுரைகள் எழுதி வருகின்றன!
tags – ஜானகி அம்மாள், 2019 கண்டுபிடிப்புகள்
***

You must be logged in to post a comment.