
Written by S NAGARAJAN
Date: 28 May 2017
Time uploaded in London:- 6-54 am
Post No.3948
Pictures are taken from different sources such as Face book, Wikipdia, Newspapers etc; thanks.
contact: swami_48@yahoo.com
சிந்திக்கவும் சிரிக்கவும்
பார்த்து மகிழ ஒரு நல்ல திரைப்படம் ஜாலி எல் எல் பி – Jolly LLB
ச.நாகராஜன்
சாதாரணமாக திரைப்படம் பார்க்க எனக்கு நேரமே கிடையாது. இப்போது சான்பிரான்ஸிஸ்கோவில் இருப்பதால் நிறைய நேரம் கிடைக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் தொலைக்காட்சி சீரியல்களையும் சில திரைப்படங்களையும் பார்க்கும் வசதியும் வாய்ப்பும் நேரமும் இங்கு உள்ளதால் சில தமிழ், ஹிந்தி, ஆங்கிலத் திரைப்படங்களையும் தொலைக்காட்சி சீரியல்கள்கள் சிலவற்றையும் பார்க்க முடிந்தது.
இதில் குறிப்பிடத்தகுந்த படமாகத் திகழ்வது ஹிந்தியில் எடுக்கப்பட்ட Jolly LLB ஜாலி எல் எல் பி என்ற திரைப்படம்.
2013ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது. நையாண்டி படம் என்றோ காமடி திரைப்படம் என்றோ இதை லேசில் ஒதுக்கி விட முடியாது.

அற்புதமாக காட்சிக்கு காட்சி ரசிக்க வைக்கும் திரைப்படம் இது. அத்துடன் தீவிர சிந்தனையைத் தூண்டி விடும் படமாகவும் இது அமைகிறது.
கதையின் ஓட்டத்தில் கதாபாத்திரங்கள் சொல்வதையும் செய்வதையும் மேம்போக்காகப் பார்த்து விட்டாலும் ஒவ்வொரு சீனிலும் அழுத்தம் திருத்தமாக பல உள்ளார்ந்த அர்த்தங்கள் இருப்பதை சிந்தனை செய்து தெரிந்து கொள்கிறோம்.
கதை வக்கீல்களைப் பற்றியது; ஒரு கேஸைச் சுற்றிச் சுழல்கிறது. பணக்கார வீட்டுப் பையன் நடைபாதையில் படுத்திருந்த ஆறு பேரை ஒரு காரை ஏற்றிக் கொன்று விட்டான், குடி போதையில்.
அந்த கேஸிலிருந்து தப்பிக்க போலீசுக்கு லஞ்சம். வக்கீலுக்குப் பெருந்தொகை. தப்புக்கு மேல் தப்பு செய்யும் ஒரு பெரிய வக்கீலின் சாகஸ திருப்பங்கள்.
நமது கோர்ட் வாசல்களிலும் சுற்றுப்புறங்களிலும் இருக்கும் வக்கீல்களின் கூட்டமும் அவல நிலையும் ஒரு புறம்.
ஓட்டை டைப்ரட்டர்களை வைத்துக் கொண்டு, சார், பெய்ல் வேணுமா என்று கத்தரிக்காய் வியாபாரி போலக் கூவும் வக்கீல்கள். அந்த ஓட்டை டைப்ரட்டரையும் ஒரு பூட்டு போட்டு பாதுகாக்கும் அவலம்!
இந்த வக்கீல் கும்பலில் தன் தனித்துவத்தை நிலை நாட்ட விரும்பி, ஆறு பேரைக் கொலை செய்த ஹிட் அண்ட் ரன் கேஸை எடுத்து தன் பெயரை நிலை நாட்டத் துடிக்கும் ஜாலி என்ற வக்கீல் (அர்ஷத் வாஸி நடிகர்)
அவர் கேஸைக் கையாளும் விதம் அழகுறச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜட்ஜ் திரிபாதியாக நடித்துள்ள சௌரப் சுக்லாவின் நடிப்பைப் புகழ வார்த்தைகளே இல்லை.
லஞ்சம் வாங்கும் சபலப் பேர்வழியோ என்று முதல் காட்சியில் சந்தேகம்; டீ குடித்து விட்டு கேஸ் பேப்பர்களை கண்ணாடி வழியே அருகே வைத்துப் பார்த்து ஏ.சி. இல்லை என்று அலட்டிக் கொள்வது, அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று அனைவரையும் திகைக்க வைக்கும் ஒரு வித்தியாசமான கேரக்டர், பெரிய வக்கீலான ராஜ்பாலைப்( நடித்து அசத்துபவர் நடிகர் பொமன் இரானி) புகழ்வது; அவரை அனுசரிப்பது; ஆனால் தன் போக்கில் வழக்கை மேலே நடத்த அனுமதிப்பது. ராஜ்பால் கத்தும் போது அவருக்கு மேலே கத்தி ‘இது எனது கோர்ட்; இங்கு நான் தான ஜட்ஜ் என்று தீர்க்கமாகச் சொல்வது, கடைசியில் இறுதித் தீர்ப்பை வழங்குவது என எல்லா விதத்திலும் அழகுற நடித்து அசத்துவதோடு நம்மை பெரிதும் சிந்திக்க வைக்கிறார் சௌரப் சுக்லா – இல்லை, இல்லை ஜட்ஜ் திரிபாதி.
குடும்ப உறவைச் சித்தரிக்க காதலி தேவை – அதற்கு அமிர்தா ராவ்!
படத்தில் பல திருப்பங்கள்!
ராஜ்பால் வாதத்தால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியால் மனம் நொந்து கேண்டீன் நடத்தும் பெரியவர்;
செக்யூரிடியாக் வந்து இருமி இருமி இளைத்தவராக இருக்கும் போலீஸ் என்றாலும் இறுதியில் தன் பணியைச் செய்யும் செக்யூரிடி போலீஸ்.
இருப்பவரை இறந்ததாக மாற்றும் லஞ்ச லாவண்ய போலீஸ் இன்ஸ்பெக்டர்,
“இறந்து போன”வர் சாட்சி சொல்ல வருவது,
பெருந்தொகையைப் பெற தானே ஆளை செட் அப் செய்யும் ‘பெரிய்ய வக்கீல்’ தேஜ்பால்
என இப்படி கேரக்டர்களின் வீச்சு அபாரமாக உள்ளது.
பாட்டுக்கள் கூட பொருள் பொதிந்து இருப்பதால் கேட்க வைக்கிறது.

நமது நியாய ஸ்தலங்கள் எப்படி ஒரு அவல நிலையில் இயங்குகிறது என்பதைச் சுட்டிக் காட்டும் இந்தப் படத்தில் இடம் பெறும் வசனங்கள் ஒவ்வொன்றுக்கும் இன்னொரு மறை பொருள் அர்த்தம் இருக்கும் படி பார்த்துக் கொண்ட் வசனகர்த்தா நம்மை நெடு நேரம் சிந்திக்க வைக்கிறார். இந்தப் படம் 1999ஆம் ஆண்டு ந்டந்த ஒரு ஹிட் அண்ட் ரன் கேஸான சஞ்சீவ் நந்தா கேஸ் மற்றும் பிரியதர்ஷினி மாட்டூ கேஸ் ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்பட்ட உத்வேகத்தால் எடுக்கப்பட்டது.
படத்தின் டைரக்டர் மற்றும் வசனகர்த்தா சுபாஷ் கபூர். இல்லை இவரை சபாஷ் கபூர் என்றே இனி அழைக்கலாம்.
சிறந்த ஹிந்தி படத்திற்கான நேஷனல் பிலிம் அவார்டை இந்தப் படம் பெற்றுள்ளது.
ஜட்ஜ் திரிபாதியாக நடித்த சௌரப் சுக்லாவிற்கு பெஸ்ட் சப்போர்டிங் ஆக்டர் என்ற நேஷனல் பிலிம் அவார்ட் கிடைத்துள்ளது. அட, அவார்டுகளின் மீது கூட ஒரு நம்பிக்கை வருகிறதே, இந்தப் படத்தால்!
அடுத்து ஜாலி எல் எல் பி 2 – இந்த ஆண்டு வெளியாகி இருக்கிறது!
அதையும் பார்த்து விட வேண்டியது தான் என்று எண்ணிக் கொண்டேன்.
சிந்திக்க வைக்கக் கூடிய ஒரு தமாஷ் மற்றும் சீரியஸான படத்தைப் பார்க்க 128 நிமிடம் இருந்தால் இதை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்.
எனது மார்க் இந்தப் படத்திற்கு நூற்றுக்கு நூறு!
***
திரைப்படங்கள் சிலவற்றைப் பார்த்திருப்பதால் அதைப் பற்றிய தீர்மானமான எனது எண்ணங்களை இன்னொரு கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறேன்.
****