
Kilpeck Church, United Kingdom
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1476; தேதி 11 டிசம்பர், 2014.
பிரிட்டனிலும் இத்தாலியிலும் பல சர்ச்சுகளில் பாண்டியர்களின் மீன் சின்னம் காணப்படுகிறது. இது ஏன்?
ஏசு கிறிஸ்துவை மீன் என்று அழைத்தது எதனால்?
உலகம் முழுதும் மீன்களை காதல் மற்றும் அதிர்ஷ்ட சின்னமாகக் கருதுவதே இதற்குக் காரணமா?
எனது ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கத்தை மட்டும் இங்கே தருகிறேன்:-
1.உலகில் மீனுக்கு தெய்வ அந்தஸ்து கொடுத்தது இந்துக்கள். விஷ்ணுவின் முதல் அவதாரம் மச்சாவதாரம். உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்தில் மத்ஸ்ய சம்மட என்ற மர்ம மன்னர் பற்றிய செய்தி வருகிறது. இவரைப் பற்றிய விவரம் எதுவும் கிடைக்கவில்லை.
(உலகம் முழுதும் காணப்படும் மீன் வழிபாடு பற்றி முன்னொரு சமயம் ஆங்கிலக் கட்டுரை எழுதினேன். அதில் மேல் விவரம் காண்க.)
2.உலகில் மீனை, காதல் குடும்ப உறவுடன் சம்பந்தப் படுத்தியவர்கள் இந்துக்களே. காதல் தெய்வமான மன்மதனின் கொடியில் இருப்பது மீன்.
3.சிந்துசம்வெளிச் சின்னங்களில் மீன் வடிவில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் ஒளிவீசும் கடவுளரைக் குறிக்கும் என்பது அறிஞர்கள் வாதம்.
4.எகிப்தில் மன்னர்களும் குருமார்களும் மீன் சாப்பிட முடியாது. ஏனெனில் அவை புனிதமானவை.
5.சீனாவில் மகிழ்ச்சி, குடும்ப உறவின் சின்னம் மீன்கள்
6.சிந்தி இன மகான் உள்பட பல சாது சந்யாசிகள் – எல்லா மதங்களிலும் — மீன்களுடன் தொடர்புடையோரே.
7.ஏசு கிறிஸ்துவை மீன் சின்னத்துடன் தொடர்புபடுத்துவர். கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய ரோமானிய மன்னர்களிடமிருந்து மறைக்க இப்படி மீன் சின்னத்தைப் பயன்படுத்தினர் என்பது ஒரு தரப்பு செய்தி.
இப்படிப்பட்ட செய்தி எல்லாம் ஐந்து ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே அதிக அளவில் உலவியது. க்ரேக்க மொழியில் மீன் என்பதற்கான இத்திஸ் என்ற சொல்லை அவர்கள் சுருக்கெழுத்தாகப் பயன்படுத்தினர் என்பர். ஆனால் இவை எல்லாம் பிற்கால கட்டுக் கதைகள் என்பது எனது துணிபு.
ஏசு கிறிஸ்துவுக்கும் கிரேக்க நாட்டுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஒருவனைக் கூப்பீட்டு மூக்கைத் தொடு என்றால் நேரடியாக மூக்கைத் தொடுவதற்குப் பதிலாக கழுத்துக்குப் பின் கையை வளைத்துத் தொட முயற்சிப்பதற்கு இது சமம்.
பானை என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? என்று கேட்டால் பாலும் நெய்யும் வைக்கும் பாண்டத்துக்கு பால்+நெய்= பானை என்று எட்டுக்கட்டிச் சொல்வது போன்றதே இது.
உண்மையில் ‘’ஜஸ’’ என்ற சம்ஸ்கிருத சொல் மீனைக் குறிக்கும். ஜஸானாம் ச மகர அஸ்மி == மீன்களில் நான் மகரமாக இருக்கிறேன் – என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையின் விபூதி யோகத்தில் சொல்லி இருக்கிறார். ஆக ‘’ஜஸ’’ என்ற சம்ஸ்கிருத்ச் சொல்லையே கிறிஸ்தவர்கள் சங்கேதச் சொல்லாக பயன்படுத்தினர் என்று பொருள் கொள்வதே பொருத்தமுடைத்தாம்.
மீன் சின்னம் அதிர்ஷ்ட சின்னம் என்பதால் உலகம் முழுதும் – அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே பயன்படுத்தினர்.
8. புத்த மதத்தில் எட்டு மங்களச் சின்னங்களில் ஒன்று—- இரண்டு மீன்கள்.
9.மஹாவீரர் பிறப்பதற்கு முன்னர் அவர் தாய் கண்ட கனவில் வந்த 16 சுப சின்னங்களில் துள்ளிப் பாயும் இரண்டு மீன்கள் இருந்ததாக சமண மத நூல்கள் செப்பும்.
10.பாண்டியர் காசுகள், செப்பேடுகள் முதலியவற்றில் இரண்டு மீன்களைப் பொறித்ததற்கு அதிர்ஷ்டம் என்பதே காரணமாக இருக்கலாம்.
11. கர்நாடகத்தை ஆண்ட ஆலுபா என்ற பாண்டிய வம்சத்தினர் தங்கக் காசுகளில் மீன்களைப் பொறித்தனர்.. ஹொய்சாளர் சின்னங்களிலும் இதைக் காணலாம்.
12.பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளில் சர்ச்சுகளில் காணப்படும் இரட்டை மீன்கள் ஐந்தாவது நூற்றாண்டுக்குப் பின்னர் கிறிஸ்துவுடன் தொடர்புபடுத்தப்பட்டது.
13.பைபிளில் நிறைய சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பது பற்றி நான் இரண்டு பகுதிகளைக் கொண்ட கட்டுரை எழுதியுள்ளேன். மச்சாவதாரம் போன்ற கதை பைபிளிலும் உண்டு. அதில் மனு என்பதற்குப் பதிலாக நோவா என்பவர் பெயர் வரும். நாவ என்றால் படகு, கப்பல் என்று வடமொழியில் பொருள். நோவா ஒரு கப்பலைக் கட்டிக் கொண்டுவந்ததால் அவருக்கு கப்பல்காரன் (நாவ=நோவா) என்ற பெயர் வந்தது. முஸ்லீம்களில் கடல் வணீகம் செய்தவர்களை மரைக்காயர் (மரக்கலக் காரர்) என்று அழைப்பது போல இது. ஆதாம், ஏவாள் என்பதெல்லாம் ஆத்மா, ஜீவாத்மா என்ற சொற்களின் மரூஉ என்று காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் கூறியதையும் முன்னரே கொடுத்துவிட்டேன்.
முடிவுரை
1.இரட்டை மீன்கள் புனிதச் சின்னம்—அதிர்ஷ்டச் சின்னம் என்பதால் உலகம் முழுதும் உள.
2.ஜீசஸ் என்ற ஏசுவின் பெயர் ‘’ஜஸ’’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லுடன் ஒத்து இருப்பதால் இதை ஏசுவைக் குறிக்கும் ரகசிய சொல்லாகப் பயன்படுத்தினர். கிரேக்கம், லத்தீன், ஜெர்மானிய மொழிகள் எல்லாம் சம்ஸ்கிருதக் குடும்பத்தைச் சேர்ந்ததே என்று உலகமே ஒப்புக் கொள்வதால் மேல் விளக்கம் தேவை இல்லை.
3.மீனை புனித நிலைக்கு ஏற்றி சிந்து வெளி முத்திரைகளிலும் கடவுள்/தேவர் என்ற பொருளில் பொறித்தது இந்துக்களே.




You must be logged in to post a comment.