
WRITTEN BY S NAGARAJAN
Date: 13 March 2016
Post No. 2626
Time uploaded in London :– 7-15 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
ஹிந்து தத்துவம்
சுழற்சி பற்றிய அபூர்வமான ஹிந்து தத்துவம்!
ச.நாகராஜன்
சுழற்சித் தத்துவம்!
ஒரு ஹிந்து, வாழ்க்கையைப் பற்றிய சரியான கண்ணோட்டத்துடன் ஆனந்தமாக அலட்டிக் கொள்ளாமல் வாழ முடிவது எப்படி? அது கூறும் சுழற்சி தத்துவத்தினால் தான்!
கல்பம் என்ற நீண்ட நெடும் காலம் கூட சுழற்சிக்கு உட்பட்டதே!
நான்கு யுகங்கள் தோன்றும்; நடக்கும்; உரிய காலத்தில் உள் வாங்கி ஒடுங்கும். பின் மீண்டும் தோன்றும்; மலரும்!
ஜீவன்களும் அப்படித் தான்! சுழற்சிக்கு உட்பட்ட ஜீவன்கள் மீண்டும் அதே போல அதே செய்கையைச் செய்து வாழும்; மறையும் மீண்டும் தோன்றும்!
விவேகானந்தரின் விளக்கம்
ஒரு முறை ஸ்வாமி விவேகானந்தர் வட கலிபோர்னியாவில் சீடர்களுக்கு கீதையின் சுலோகம் ஒன்றுக்கு உரை சொல்லி அதை விளக்கிக் கொண்டிருந்தார்.
அது கீதையில் 18ஆம் அத்தியாயத்தில் வரும் 61ஆம் சுலோகம்!
ஈஸ்²வர: ஸர்வபூ⁴தாநாம் ஹ்ருத்³தே³ஸே²ऽர்ஜுந திஷ்ட²தி |
ப்⁴ராமயந்ஸர்வபூ⁴தாநி யந்த்ராரூடா⁴நி மாயயா || 18- 61||
அர்ஜுந = அர்ஜுனா
யந்த்ராரூடா⁴நி ஸர்வபூ⁴தாநி = உடல் என்கிற எந்திரத்தில் ஏற்றி அனைத்து உயிர்களையும்
ஈஸ்²வர: = ஈசுவரன்
மாயயா ப்⁴ராமயந் = மாயையினால் சுழற்றிக் கொண்டு
ஸர்வபூ⁴தாநாம் ஹ்ருத்³தே³ஸே² = எல்லா உயிர்களின் உள்ளத்தில்
திஷ்ட²தி = நிற்கிறான்
இதன் திரண்ட கருத்து இது: அர்ஜுனா, எல்லா உயிர்களிலும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.

ஒரு குயவனின் சக்கரத்தில் வைத்துச் சுழற்றுவது போல தமது மாயா சக்தியால் உயிரினங்களை இறைவன் சுழலச் செய்கிறார் என்ற கருத்தை ஸ்வாமிஜி நன்கு விளக்கி விட்டு இப்படிக் கூறினார்:” இப்போது நாம் காண்கின்ற இந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே ஏற்கனவே நடைபெற்றவை தான்! விளையாடுபவன் தாயக்கட்டையைக் குலுக்கி இடுகிறான். எண்கள் வருகின்றன. ஒரே விதமான சேர்க்கை பல நேரங்களில் வரலாம். வாழ்க்கையும் அப்படித்தான். சக்கரம் சுழலுகிறது. ஒரு முறை நிகழ்ந்ததே மீண்டும் நிகழ்கிறது. அதோ அந்தப் பானை, அந்த டம்ளர், இந்த வெங்காயம், இந்த உருளைக் கிழங்கு எல்லாம் ஏற்கனவே ஒரு முறை இதே இடத்தில் இப்படியே இருந்தன. இப்போது அந்தச் சேர்க்கையில் மீண்டும் இங்கே இருக்கின்றன. நாம் என்ன செய்யலாம், அம்மா! வாழ்க்கையின் சக்கரத்தில் நம்மை வைத்துச் சுழற்றுவது அவர் அல்லவா!”
சீதை காடு செல்லக் கூறும் காரணம்!
ஆனந்த ராமாயணத்திலில் இந்தக் கருத்தை விளக்கும் ஒரு அற்புதமான சம்பவம் இது:
ராமன் சீதையைக் காட்டுக்கு வர வேண்டாம் என்று கூறும் போது அவள் காட்டிற்கு வருவேன் என்பதை வலியுறுத்திக் கூறும் பல காரணங்களுள் ஒரு காரணம் இது:
“ஓ! ராமா! இது வரை நடந்த எந்த ராமாயணத்திலாவது சீதை இல்லாமல் ராமர் காட்டுக்குப் போயிருக்கிறாரா?”
கவி சமத்காரமாக இதை எடுத்துக் கொண்டாலும் கூட இது ஒரு அற்புதமான சுழற்சித் தத்துவத்தை வலியுறுத்தவே செய்கிறது.

கர்ம யோகம்
எல்லாமே நடந்தது தான் என்றால் அல்லது நடப்பது நடந்தே தீரும் என்றால் நாம் எதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
இருக்கும் இடத்தில் தர்மத்திற்கேற்ப உன் வேலையைச் செய்! அதில் பலனை எதிர்பார்க்காமல் கடமையை கர்ம யோகமாகச் செய் என்பது கண்ணனின் அருளுரை!
கீதை வலியுறுத்தும் தத்துவத்தை விளக்கும் விதமாக மாயக் கண்ணன் ஒரு கணம் கூட ஓய்வின்றி கர்மம் புரிகிறான்; எடுத்துக் காட்டாக விளங்குகிறான்!
நத்திங் டைஸ்!
- DUNNE என்பவர் எழுதிய ‘NOTHING DIES’ என்ற நூல் எதுவும் இறப்பதில்லை; யாரும் இறப்பதில்லை என்ற கருத்தை அழகுற விளக்குகிறது!
இறப்பது போலத் தோன்றும் ஒரு உயிர் இன்னொரு இடத்தில் வாழ்கிறது; அது மீண்டும் பூவுலகில் வருகிறது.
‘இந்த ஜனன மரணச் சுழற்சியை நீக்க முக்தி அடைவதை குறிக்கோளாகக் கொள்! நீண்ட நெடும் பயணத்தில் அனைவரும் ஒரு நாள் இந்த லட்சியத்தை எய்துவோம்’ என்கிறது ஹிந்து மதம்!
என்ன ஒரு ஆறுதலான செய்தி!
இறந்தவரை மீட்ட சம்பவங்கள்!
இன்னும் ஒரு கண்ணோட்டத்தில் வாழ்கின்ற அனைவரும் அவர்கள் ஆற்றிய அனைத்துச் செயல்களும் எல்லையற்ற பிரபஞ்சத்தில் பதிவு செய்யப்படுகின்றன.
வல்லவர்கள் அந்த பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் எந்தக் காலத்திற்கு வேண்டுமானாலும் பயணப்படலாம்.
அதனால் தான் ஞான சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பிக்க முடிந்தது.
கிருஷ்ணர் குரு தக்ஷிணையாக சாந்தீபனி முனிவருக்கு அவரது புதல்வரை காலம் சென்றாலும் வளர்ந்த நிலையில் மீட்டுத் தர முடிந்தது.
சுந்தரர் முதலை வாய்ப்பட்ட சிறுவனை இரு வருடங்கள் கழித்து மீட்டாலும் உரிய வளர்ச்சியுடன் பெற முடிந்தது.
அற்புதமான இந்த சுழற்சித் தத்துவம் ஹிந்து மதம் ஒன்றுக்கே உரியது என்பது எவ்வளவு அற்புதமான விஷயம்!
சிந்திப்போம்; உரிய வினையை ஆற்றி உயர்வோம்!!
*******
You must be logged in to post a comment.