Post No.1045: : Dated 16th May 2014
English version of the article is posted under the title Hindu Magic: Indra Jal
சிறு வயதில் சர்கஸ், பொருட்காட்சி, விழாக்கள் போன்றவற்றில் மாயா ஜாலக் காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். டெலிவிஷன் வந்த பிறகு அதிலும் பல ‘மாஜிக்’ தந்திரக் காட்சிகள் வந்தன. இந்திர ஜாலம் என்பது இதற்கான வடமொழிச் சொல். தமிழில் இதற்குக் கண்கட்டு வித்தை என்று பெயர். ஆனால் அதிலும் வித்தை என்பது சம்ஸ்கிருதம்! மாயாஜால தந்திரக் காட்சிகள் என்றால் எல்லோருக்கும் எளிதில் விளங்கும். காமசூத்திர நூல் எழுதிய வாத்ஸ்யாயனர், இதையும் பெண்களுக்கான 64 கலைகளில் ஒன்றாகச் சேர்த்திருக்கிறார்.
ஆதிகாலம் முதற்கொண்டு இந்தியர்கள் செய்துவந்த மிகப்பெரிய மாயாஜாலக் காட்சி ‘கயிறு வித்தை’ என்பதாகும். இதைப் பற்றி பல வெளி நாட்டு யாத்ரீகர்கள் எழுதி வைத்துள்ளனர். மந்திரவாதி ‘’\சூ! மந்திரக் காளி!’’ சொன்னவுடன் ஒரு கயிறு தானாகவே மேலே எழும்பும். அதைப்பிடித்துக் கொண்டு ஒரு மந்திர வாதி வானத்தை நோக்கி மேலே மேலே செல்வான். பிறகு மறைந்து போய் விடுவான். சில காட்சிகளில் அவன் பெயரைக் கூப்பிட்டவுடன் கீழே வந்து நிற்பான். இபின் படூடா என்ற யாத்ரீகர் 700 ஆண்டுகளுக்கு முன் இதே போல ஒரு காட்சியை சீனாவில் பார்த்ததாக எழுதிவைத்துள்ளார்.
ஆதிசங்கரர் எழுதிய வேதாந்த பாஷ்யத்தில் இந்த கயிற்று வித்தையைக் குறிப்பிட்டு இதை மாயம் என்கிறார். ஆக அவரது காலத்துக்கு முன்னரே 2000 ஆண்டுகளாக இந்த வித்தை இந்தியாவில் காட்டப்பட்டு வருகிறது!!

இதற்கும் இந்திரனுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் வானவில்லை இந்திரனின் வில் (இந்திர தனுஸ்) என்று சம்ஸ்கிருதத்தில் அழைப்பர். அது போல இந்த ‘’மாஜிக் ஷோ’’வும் வண்ணம் நிறைந்ததாக இருந்ததால் இப்பெயர் வந்திருக்கலாம்.
இந்த இந்திர ஜாலம் பற்றி 1300 ஆண்டுகளுக்கு முன் தண்டி என்ற கவிஞர் எழுதிய தசகுமார சரித்திரம் என்ற வடமொழிக் கதைப் புத்தகத்தில் ஒரு சுவையான கதை வருகிறது.
சுவையான மாய மந்திரக் கதை
மகத நாட்டில் ராஜவாஹனன் என்ற இளவரசன் வசித்து வருகிறான். அவனுடைய தந்தையை மாளவ மன்னன் மானசாரன் தோற்கடித்து காட்டுக்கு விரட்டி விடுகிறான். ராஜவாஹனன் தாய் தந்தையரின் அனுமதி கேட்டு நாட்டைச் சுற்றிப் பார்க்கப் புறப்படுகிறான். அவனுடன் வந்த பத்துப் பேரையும் இடையில் தவற விடுகிறான். பின்னர் அவன் மட்டும் தனியாகப் பயணம் செய்து உஜ்ஜையினி நகரை அடைகிறான். அதுதான் மானசார மன்னனின் தலை நகரம். அந்த மன்னனுக்கு அவந்திசுந்தரி என்ற அழகிய மகள் உண்டு.
href=”https://tamilandvedas.com/wp-content/uploads/2014/05/indrajal.jpg”>
எதிர்பாராத விதமாக உஜ்ஜையினி நகரில் அவனுடைய பழைய நண்பனைச் சந்திக்கிறான். அவன், அவந்தி சுந்தரியின் தோழியைத் திருமணம் செய்துகொண்டு செல்வாக்குடன் விளங்குபவன். அவர்கள் மூலமாக அவந்தி சுந்தரியைச் சந்திக்கிறான். காதல் மலர்கிறது. ஆனால் தந்தையைக் காட்டிற்கு விரட்டிய மன்னனின் மகளைக் காதலிப்பதால் வெளிப்படையாக எதுவும் செய்ய முடியாது.

இதுபற்றி எண்ணி எண்ணிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தபோது, வித்யேஸ்வரா என்ற மந்திரவாதியின் தொடர்பு கிடைக்கிறது. அவன் உதவி செய்ய முன்வருகிறான். இருவரும் ஒரு திட்டம் தீட்டுகின்றனர். அதன்படி அவந்திசுந்தரி தனது தந்தை மானசாரனிடம் சொல்லி ஒரு மாயாஜாலக் காட்சியை ஏற்பாடு செய்கிறாள். அதில் அற்புதமான காட்சிகள் வருகின்றன.
தாரை ,தம்பட்டைகள் முழங்குகின்றன. ஒளி வெள்ளம் பாயும்போது விண்ணிலிருந்து பாம்புகளும் கழுகுகளும் இறங்குகின்றன. இரண்டு கழுகுகள் இரண்டு பாம்புகளைப் பிடித்துச் செல்லுகையில் மற்ற பாம்புகள் விஷம் கக்கி அரண்மனையை வலம் வருகின்றன. விஷ்ணுவானவர், நரசிம்ம வேடத்தில் வந்து இறங்கி ஹிரண்யகசிபுவைக் கிழித்து வதம் செய்கிறார். மக்கள் எல்லோரும் திகைப்புடன் பார்க்கையில் மந்திரவாதி மெதுவாக மன்னனிடம் சொல்கிறான்:
“அரசே நல்ல காட்சியை மங்களமாக முடிக்கவேண்டும் ஆகவே ஒரு திருமணக் காட்சியுடன் முடிக்க அனுமதி தேவை என்கிறான். உங்கள் மகளைப் போலவே அலங்கரிக்கப்பட்ட ஒரு மணமகளை வரவைக்கிறேன் என்றான். மன்னனும் திகைப்பிலிருந்து வெளியே வரவில்லை. ஆகவே என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்கிறான். ஒரு அழகான இளைஞன் மணப் பெண்ணுடன் வருகிறான். ஐயர் ஹோமம் வளர்த்து கல்யாணம் செய்துவைக்கிறார். எல்லாம் மாயாஜாலக் காட்சி போலவே நடக்கிறது. ஆனால் உண்மையில் மணப் பெண் போல வந்தது அவந்தி சுந்தரி. அவளை மணந்தவன் ராஜவாஹனன்.
கல்யாணம் முடிந்தவுடன், சூ! மந்திரக் காளீ! இரண்டு பேரும் மறைந்து போங்கள் என்கிறான். பெண்ணும் மாப்பிள்ளையும் அரண்மனையில் இருந்த ரகசிய சுரங்கக் கதவு மூலம் தப்பித்து ஓடிவிடுகிறார்கள். கதை எப்படிப் போனாலும் அந்தக் காலத்தில் மாயாஜாலக் காட்சிகள் அரண்மனையில் நடத்தப்பட்டதை நாம் அறிய இந்தக் கதை உதவுகிறது.
<a
கயிறு வித்தை தவிர, மந்திரத்தால் மாங்காய் மரம் உண்டாக்குவது, கலர் நூல்களைப் பயன்படுத்தி (சூத்திர க்ரீடா) தந்திரங்கள் செய்வது, கணக்கு வித்தைகளைச் செய்வது, கைகளை லாகவமாகப் பயன்படுத்தி காசுகளை மறைப்பது (ஹஸ்த லாகவம்) முதலியன அக்காலத்தில் தந்திரக் காட்சிகளில் இடம்பெற்றன.
contact swami _ 48@yahoo.com

You must be logged in to post a comment.