
Jack Fruit (Palaa Pazam in Tamil)
ஆய்வுக் கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்.:—1205; தேதி:- 31 ஜூலை, 2014
தமிழ் நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த காட்சிகளை நம் மனக் கண்ணுக்கு முன்னே நிறுத்துவதில் சிலப்பதிகாரம் சிறந்த பங்களிக்கிறது. மஹாபாரதத்தில் சபா பர்வத்தில் யுதிஷ்டிரன் (தருமர்), ராஜ சூய யக்ஞம் செய்யும்போது அவருக்கு என்ன என்ன பொருட்களை கப்பம் கட்டும், திரை செலுத்தும் ராஜாக்கள் கொடுத்தனர் என்ற பட்டியல் இருக்கிறது. இதே போல வட இமயத்தை வெற்றி கொண்ட கரிகால் சோழனுக்குக் கிடைத்த மூன்று முக்கியமான பொருட்களை சிலப்பதிகாரம் சொல்கிறது. இதை எல்லாம் விட ஒரு நீண்ட பட்டியல் சிலப்பதிகார காட்சிக் காதையில் வருகிறது. இது மன்னர்கள் செலுத்திய கப்பம் அல்ல. அன்பின் காரணமாக கானக மக்கள் கொடுத்த அன்புப் பரிசுகள்.
சேர நாட்டு மன்னன் செங்குட்டுவன் தனது மனைவியிடம் கூறுகிறான் அன்பே! இன்றைக்கு ‘பிக்னிக்’ போவோமா? உன்னை நான் இன்று இயற்கை அழகு மிக்க இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கே அருவிகள் ‘சோ’ என்ற இரைச்சலுடன் நீரைப் பொழியும். மேகங்கள் மலை மீது தவழ்ந்து செல்லும். அழகான சோலைகள் இருக்கும். புறப்படு என்கிறான்:

(Hill country Kerala, Malai Naadu/Chera Naadu in Tamil)
“துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் சோலை மலைவளம் காண்குவம் என ”
ராஜாராணி தங்கள் பரிவாரம் புடைசூழப் புறப்பட்டனர். அரசனும் அரசியும் வருவதை அறிந்த கானக மாக்கள் – குன்றக் குறவர்கள் – நிறைய பொருட்களை அன்புக் காணிக்கையாக கொண்டு வந்தனர். இதோ சுமார் 35 பொருட்களின் பட்டியல்:
யானையின் வெண்மையான தந்தங்கள்
அகில் கட்டைக் குவியல்
மான் மயிரால் கட்டிய சாமரம்/விசிறி
குடம் குடமாகத் தேன்
சந்தனக் கட்டை
சிந்தூரக் கட்டி
அஞ்சனத் திரள்
அழகிய அரிதாரம்
ஏலக் கொடி
கருமிளகுக் கொடி
கூவை நூறு (அரரூட் மாவு)
கவலைக் கொடியின் கிழங்குகள்
தென்னை நெற்றுகள்
இனிப்பான மாம்பழங்கள்
பச்சிலை மாலை
பலாப்பழம்
வெள்ளுள்ளி
கரும்பு
பூக்கள் நிறைந்த கொடிகள்
பாக்கு மர குலைத் தாறுகள்
வாழைப் பழக் குலைத் தாறுகள்
ஆளி, சிங்கம், புலி, யானை, குரங்கு, கரடி ஆகியவற்றின் குட்டிகள்
வரையாடுகள்
வருடை மான்கள்
மான் குட்டிகள்
கஸ்தூரி மான் குட்டிகள்
கீரிப் பிள்ளைகள்
ஆண் மயில்கள்
புனுகுப் பூணைக் குட்டி
கானக் கோழி
தேன் மொழி பேசும் கிளிகள்

(Musk Deer, Kasturi Maan in Tamil)
இவைகளைத் தலை மேல் சுமந்து வந்து கொடுத்தனர் என்கிறார் இளங்கோ. காடு வாழ் மக்களுக்கு எவ்வளவு அன்பு பாருங்கள். மலை நாட்டின் இயற்கை வளம் எத்தகையது என்றும் இதிலிருந்து உணர முடிகிறது. அருமையான இயற்கைக் காட்சிக்கு நடுவே இத்தனை பொருட்களும் குவிந்தன!!

யானை வெண்கோடும் அகிலின் குப்பையும்
மான் மயிர்க் கவரியும், மதுவின் குடங்களும்
சந்தனக் குறையும், சிந்துரக் கட்டியும்
அஞ்சனத் திரளும், அணி அரிதாரமும்
ஏல வல்லியும் இருங்கறி வல்லியும்
கூவை நூறும், கொழுங்கடிக் கவலையும்
தெங்கின் பழனும், தேமாங்கனியும்
பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும்
காயமும் கரும்பும் பூமலி கொடியும்
கொழுந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும்
பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும்
ஆளியின் அணங்கும் அரியின் குருளையும்
வாள்வரிப் பறழும், மதகரிக் களபமும்
குரங்கின் குட்டியும் குடாவடி உளியமும்
வரையாடு வருடையும் மடமான் மறியும்
காசறைக் கருவும் ஆசறு நகுலமும்
பீலி மஞ்சையும் நாவியின் பிள்ளையும்
கானக் கோழியும் தேமொழிக் கிள்ளையும்
மலைமிசை மாக்கள் தலை மிசைக் கொண்டு
—–காட்சிக் காதை, சிலப்பதிகாரம்

வாழ்க இளங்கோ!! வளர்க தமிழ்!!!
–சுபம்—
(Black Pepper, Karu Milaku in Tamil)

You must be logged in to post a comment.