
WRITTEN by London Swaminathan
Date: 17 May 2018
Time uploaded in London – 9-00 AM (British Summer Time)
Post No. 5019
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
விடிய விடிய ராமாயணம் கேட்டானாம்; என்னடா கதை? என்று கேட்டபொழுது சொன்னானாம் ‘சீதைக்கு ராமன் சித்தப்பா’ – என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இது தாய்லாந்தைப் பொறுத்த மட்டில் மிக மிக உண்மை. ராமாயணத்தைத் தலை கீழாக மாற்றிவிட்டார்கள்.
கேட்கக் கேட்க வேடிக்கையாக இருக்கும்; ராமபக்தர்களுக்கோ அபச்சாரமாகத் தோன்றும்; நீண்ட கட்டுரை; ஆகையால் முதலில் சுவையான விஷயங்களை புல்லட் பாயிண்டுகளில் (in Bullet Points) தருகிறேன்.
1.சீதாதேவி, ராவணனின் மகள்; வேறு ஒரு இடத்தில் வளர்ந்ததால், தெரியாமல் தூக்கி வந்து விட்டார்.
2.அனுமனுக்கு குறைந்தது இரண்டு மனைவிகள்; இரண்டு மகன்கள்! அவர் குரங்கு மனம், குரங்கு புத்தி உடையவர். பிரம்மச்சாரி அல்ல.
3.ராமாயணத்தில் பலப்பல புதுக்கதைகள்; இந்தியாவில் அந்தப் பெயர்களையே கேள்விப்பட்டதில்லை; கம்பனும் வால்மீகியும் சொல்லாத கதைகள்.
4.ராமன் பெயர், சீதை பெயர், அனுமன் பெயர் தவிர மற்ற எல்லாப் பெயர்களும் கண்டபடி மாற்றம். ராமாயணம் படிக்காதவர்கள் பார்த்தால், இது ஏதோ வேறு ஒரு கதை என்று மலைப்பர்.
5.இந்தியாவில் உள்ள ராமாயணம் பற்றியோ அதை எழுதிய வால்மீகி பற்றியோ தெரியாது.
6.ராவணனையும் விடப் பெரிய ராக்ஷஸன் உண்டு. அவனுக்கு ஆயிரம் தலைகள்!
7.ராமாயணம் என்பது தாய்லாந்தில் நடந்தது!

ஏன் இத்தனை கோளாறுகள்?
தாய்லாந்து மக்களின் வாழ்வில், கலையில், பண்பாட்டில், வரலாற்றில் ராமாயணம் இரண்டறக் கலந்துவிட்டது. ஆகையால் அது வெளி நாட்டில் நடந்ததாகச் சொன்னால் மக்கள் மனம் ஏற்காது. மேலும் தாய்லாந்தின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப ராமாயணம் திரிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ‘’தாய்’’ மக்கள் அது இங்கேதான் நடந்தது என்று நம்புகின்றனர் என்று தாய்லாந்து மொழி ராமாயணமான ‘ராம்கியன்’ அறிஞர் மனீக் (மாணிக்க) ஜும்சாய் கூறுகிறார்.
உண்மை என்ன?
தாய்லாந்தில் இருந்த தாய்லாந்து மொழி ராமாயணத்தின் பெயர் ராம்கீயன் ( ராம க்யான அல்லது ராம கீர்த்தி).இது 200 ஆண்டுகளுக்கு முன்னர் தீ விபத்தில் அழிந்து விட்டது. பின்னர் முதலாவது ராமா, இரண்டாவது ராமா என்ற மன்னர்களும் தக்ஷின் என்ற கவிஞர் முதலியோரும் புதிய ராமாயணத்தை யாத்தனர். அதில் பல கற்பனைகளைச் சிறகடித்துப் பறக்கவிட்டனர். மக்களுக்கு ரசனையாக தாய்லாந்து மக்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளைப் புகுத்தினர். ஆனால் ராமனையோ சீதையையோ பழிக்க வில்லை போற்றித் துதி பாடினர்.
இதைத் தமிழ்நாட்டிலுள்ள கோயில் தல புராணங்களுக்கு ஒப்பிடலாம். நமக்குத் தெரிந்த புராணக் கதைகளை, இதிஹாசக் கதைகளை உள்ளூரில் நடந்ததாகக் கூறி அந்த ஊர் சாமியின் புகழை ஏத்தி விடுகிறோம்.
மேலும் வேத காலத்தில் இதிஹாச காலத்தில் வாழ்ந்த ரிஷி முனிவர்களை அங்கு வந்து சாப விமோசனம் பெற்றதாகக் கூறுகிறோம். ஆனால் உண்மையில் கடவுளையோ அந்த சாது சந்யாசிகளையோ பழிக்காமல் அவர்கள் புகழை அதிகப்படுத்த முயற்சிக்கிறோம்.
மேலும் பல உள்ளூர்க் கதைகளையும் நம்பிக்கைகளையும் பழையதுடன் கலந்து சுவைபடக் கூறுகிறோம். நேற்று தோன்றிய முஸ்லீம், கிறிஸ்தர்களைக் கூட இணத்து சில புதிய கதைகளை உண்டாக்குகிறோம்; உண்மையில் அவர்கள் அண்மைக் காலத்தில் வாழ்ந்த பக்தர்கள். அவ்வளவுதான்.
இப்படி நமது நாட்டிலேயே நடக்குமானால் சில ஆயிரம் மைல்கள் தள்ளியுள்ள தாய்லாந்தில் கதைப்போக்கு மாறுவதில் வியப்பொன்றுமில்லை. அது மட்டுமல்ல அங்கு இப்பொழுது மூன்று வேறு வேறு பாட பேதங்கள் உள்ளன. கோவில் சிலைகளில் வேறு புதிய கதைகள்!
சிலைகள், ஓவியங்கள் முதலியன அவரவர் கற்பனைக்கேற்ப புனையப்பட்டுள்ளன.

இதோ தாறுமாறாக திரிக்கப்பட்ட ராமாயண கதாபாத்திரஙகள்:-
குச்சி= கூனி மந்தரை (குப்ஜ/கூன் முதுகு;ஸம்ஸ்க்ருதம்)
ஸ்வாஹா= அஞ்சனா
கல்லாசனா= அஹல்யா (கல் என்ற தமிழ் சொல்)
காகனாசுரா= தாடகா
கூகன்= வேடன் குகன்
மங்குட்= லவன் (ராமன் புதல்வன்)
வஜ்ம்ருகா = வால்மீகி
சத்ருட் = சத்ருக்னன்
க்ருட்= கருடன்
லக்= லக்ஷ்மணன்/ இலக்குவன்
லாஸ்டியன்= புலஸ்த்ய
பிபெக்= விபீஷணன்
நங் மோண்டோ= மண்டோதரி
தத்சகன்= தச கண்டன்/ ராவணன்
பாலி= வாலி
சுக்ரீப்= சுக்ரீவன்
நங் சீடா = சீதா தேவி
ப்ரம் ராம் = ராமன்
கும்பகன் = கும்ப கர்ணன்
இந்ததரசிட்= இந்திரஜித்

புதிய பெயர்கள்
பெஞ்சகாய்= வஞ்சகி???
மைராப் = மயில் ராவணன்??
மாலிவக்க ப்ரஹ்மா= பிரம்மா
சுவண்ணமச்சா= ஸ்வர்ண மத்ஸ்ய= தங்க மீன்
மச்சானு= மத்ஸ்யன் (மீனன்)
மஹாபால் = மஹீபாலன்??? (மன்னன்)
தேபாஸுரா = தேவாசுர (தேவர்கள்+ அஸுரர்கள்
உன்ராஜ் = ஊன ராஜன் ( நொண்டி ராஜா?)
இனி அனுமனின் இரண்டு மனைவி, மயில் ராவணன் , மாண்டோதரி மகள் சீதை முதலிய கதைகளைக் காண்போம்.
தொடரும்…………………………….
–சுபம்–