
Picture by Lalgudi Veda
Written by London Swaminathan
Date: 28 September 2017
Time uploaded in London- 6-34 am
Post No. 4252
Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.
முடிச்சோதி, முகச்சோதி, அடிச்சோதி: நம்மாழ்வார் பாசுரம் (Post No.4252)
கடவுளை ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடிப் பரவிப் பரவசப்படும் அழகே தனி; ஆழ்வார்களில் பாரதியாருக்கு மிகவும் பிடித்தவர் நம்மாழ்வார். அவரது பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டதை இதே பிளாக்கில் எனது பழைய கட்டுரைகளில் படித்து மகிழலாம்.
கடவுளை ஒளி ரூபத்தில் வணங்குவதுதான் இந்துக்களின் மிகப்பெரிய மந்திரமான காயத்ரீ மந்திரம். மூன்று வேதங்களில் உள்ளது.
தமிழில் வேதக் கருத்துகளைப் பரப்பியவர்கள் ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஆவர். நம்மாழ்வார், எல்லோருக்கும் பிடித்தவர் என்பதால் ‘நம்ம+ ஆழ்வார்’ என்று புகழப்படுகிறார். அவர் பாடிய ஒரு பாடல் திவ்வியப் பிரபந்தத்தின் 4000 பாடல்களில் தனித்து நிற்கிறது. நாமும் படித்துப் பெருமாளின் அருளுக்குப் பாத்திரர் ஆவோம்:
முடிச் சோதி யாயுனது முகச்சோதி மலர்ந்ததுவோ?
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே கட்டுரையே.
–நம்மாழ்வார், திருவாய்மொழி, பாடல் 2897
திருமாலைப் பார்த்தார் நம்மாழ்வார்; எங்கும் ஒளிமயம்; ஜோதி ஸ்வரூபம்; இந்த ஒளிக்கு என்ன காரணம்? உன்னால்தான் நீ அணிந்திருக்கும் ரத்தின முடி ஒளி பெற்றதோ? உன்னுடைய காலின் ஒளிதான் தாமரையாக மலர்ந்துவிட்டதோ? நீ அணிந்திருக்கும் ஆடைகள் கூட பளபள என்று தங்க வெள்ளி ஜரிகைகளால் ஒளிவீசுகிறதே? அதுவும் உன் ஒளி பரவியதால்தானோ?
உண்மையில் தங்க ஜரிகை, ரத்தினக் கற்கள், சூரியனைக் கண்டு மலரும் தாமரை ஆகியவற்றுக்கு இயற்கை ஒளி உண்டு. ஆனால் அவை நம் கண்களில் புலப்பட கட்டாயம் வெளிச்சம் வேண்டும். சூரிய ஒளிபடும்போது நாம் அவற்றின் பளபளப்பால் அறிகிறோம். இங்கு அந்த சூரியன்தான் பெருமாள்; இறைவனின் அருள் ஒளி இல்லாவிடில் எதுவும் பிரகாசிக்காது; அதை விளக்க வந்த பாசுரம்தான் இது.

Tamarind Tree under which Nammalvar got inspiration
இதோ பாடலின் பொருள்:
திருமகள் தங்கும் மார்பை உடைய திருமாலே, பெருமாளே! உன் திருமுகத்தின் அழகுதான் உன் தலை மீதுள்ள கிரீடத்தின் — திரு முடியின்- அழகு ஒளியாக பரவி இருக்கிறதோ?
உன் பாதாரவிந்தங்களின் ஒளி பரவிதான் தாமரையும் பிரகாசிக்கிறதோ?
(தாமரைதான் அதிகமான, பிரசித்தமான மலர்; அதனால்தான் இந்துப் பெண்கள் மலர், தாமரை, அம்புஜம், பங்கஜம், கமலம், அரவிந்தம் என்று தாமரையின் பெயர் சூட்டிக்கொண்டு பவனி வருகிறர்கள்)
உன் திருமேனியின் ஒளிதான் உனது ஆடைகளிலும், ஆபரணங்களிலும் பரவி பட்டொளி வீசுகிறதோ? இவ்வாறு உன்பால் ஒளிரும் அழகின் தன்மையை எனக்கு எடுத்துச் சொல்வாயாக” என்று நம்மாழ்வார் பாடுகிறார்.
நம்மாழ்வார், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். ஆழ்வார் திருநகரியில் அவதரித்தார்; அதன் மற்றொரு பெயர் திருக்குருகூர். இவருக்கு சடகோபன், மாறன், பராங்குசன் என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு. இவர் இயற்றிய நூல்கள்– திருவாய்மொழி, திரு விருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி.
மதுரகவி ஆழ்வார், இவரை வழிபட்டே பேரருள் பெற்றார்.
‘வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்’ என்பது பெரியோர் வாக்கு. திருவாய் மொழியில் ஆயிரம் பாசுரங்கள் உண்டு
இதற்கு ஐந்து உரைகள் இருக்கின்றன:
திருக்குருகை பிரான் பிள்ளை அருளிய ஆறாயிரப்படி,
நஞ்சீயர் அருளிய ஒன்பதினாயிரப்படி,
வாதி கேசரி அழகிய மணவாளச் சீயர் அருளிய பன்னீராயிரப்படி,
பெரியவாச்சான் பிள்ளை அருளிய இருபத்து நாலாயிரப்படி,
வடக்குத் திருவீதிப்பிள்ளை அருளிய முப்பதாறாயிரப்படி.
கம்பனும் சடகோபர் அந்தாதியில் நம்மாழ்வாரைப் பாடிக் கொண்டாடுகிறார்.
சேரா தனவுள வோ? பெருஞ்செல்வர்க்குவே தம் செப்பும்
பேராயிரம்திண் பெரும்புயமாயிரம் பெய்துளவத்
தாரார் முடியா யிரங்குருகூர்ச்சடகோபன் சொன்ன
ஆரா அமுதக் கவியாயிரமவ் வரியனுக்கே!
-கம்பர் பாடிய சடகோபர் அந்தாதி
திரு மறை என்று போற்றப்படும். திருவாய்மொழியைப் பாராட்டி மணவாள மாமுனிகள் ஒரு அந்தாதி பாடியுள்ளார்.
தகவல் தந்து உதவிய நூல்:- ஞானத் தமிழ், ரெ.முத்துக் கணேசன், காரைக்குடி, 1970
TAGS: நம்மாழ்வார், முகச் சோதி, திருவாய்மொழி
tamilandvedas.com/tag/nammalvar
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … later known as Nammazvar, … Bharati used it for political freedom as well.
–SUBHAM–



