
Written by S Nagarajan
Date: 20 November 2018
GMT Time uploaded in London –5-28 am
Post No. 5680
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
ஆங்கில இலக்கியம்
‘ஷேக்ஸ்பியர் ஷேக்ஸ்பியரில் பெயிலான கதை’ என்ற இதற்கு முந்தைய கட்டுரையைப் படித்து விட்டீர்களா?
ஷேக்ஸ்பியரின் இலக்கியத்தின் மீது எழுந்த திரைப்படங்கள் 525!
ச.நாகராஜன்
ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியரின் படைப்புகளாக உள்ளவை 37. இவற்றை அடிப்படையாகக் கொண்டு 410 திரைப்படங்கள் உருவாகி இருப்பதாக விக்கிபீடியா கூறுகிறது.
ஆனால்
IMDb, 1095 தயாரிப்புகள் ஷேக்ஸ்பியரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறது. இவற்றில் சினிமா, தொலைக்காட்சிக்கான படைப்புகள், சில விளையாட்டுகள் உள்ளிட்டவை அடங்கும். ஷேக்ஸ்பியரின் படைப்புகளை நேரடியாக அப்படியே கொண்டுள்ள படைப்புகளோடு அவரது சானெட் உள்ளிட்டவையும் சேர்த்துக் கணக்கிட்டால் 525 என்று கணக்கிடலாம் என ஷேக்ஸ்பியர் ஆர்வலர் ஒருவர் தெரிவிக்கிறார்.
இதை ஒரு படமாகவே புள்ளி விவரங்களுடன் அவர் தருகிறார் இப்படி:
ஆக உலக வரலாற்றில் ஷேக்ஸ்பியருக்குள்ள ஒரு தனி இடம் மறுக்க முடியாத இடமாக ஆகிறது. இப்படி ஒரு தொகுப்பைத் தந்துள்ள www.stephenfollows.com/blog ற்கு நமது நன்றியை இங்கு பதிவு செய்கிறோம்.
ஷேக்ஸ்பியரின் இலக்கியப் படைப்புகளை ஆய்வு செய்தோர் தரும் விவரங்கள் ஏராளம்.
மேலே கூறிய 525 படங்களில் சிலவற்றை, எடுத்துக்காட்டிற்காக, இங்கு பார்க்கலாம்:

மேலை நாட்டு ஆங்கிலப் படங்கள்:
West Side Story (Robert Wise and Jerome Robbins) – Romeo and Juliet
Kiss Me, Kate (Geroge Sidney) – The Taming of the Shrew
Forbidden Planet (Nicholas Nayfack) – The Tempest
My Own Private Idaho (Gus Van Sant) – Henry IV parts 1 and 2
Gnomeo and Juliet (Kelly Asbury) – Romeo and Juliet
Looking for Richard (Al Pacino) – Richard III

ஹிந்தி திரைப்படங்கள்
Omkara, Maqbool, Haider ( by Bhardwas) – Othello, Macbeth, Hamlet
Golioyon ki Rasleela : Ram – Leela (Sanjay Leela Bhansali) – Romeo and Juliet
ஜப்பானியத் திரைப்படங்கள்
Throne of Blood (Akira Kurosawa) – Macbet Ran (Akira Kurosawa) – King Lear
கடந்த 18 ஆண்டுகளில் ஷேக்ஸ்பியரின் படைப்புகள் தொலைக்காட்சியில் பயன்படுத்தப்பட்டு காட்டப்பட்டுள்ளன.
ஜப்பான், இந்தியா, ஃபிரான்ஸ், அர்ஜெண்டினா, ஜெர்மனி, தாய்லாந்து, இத்தாலி, சீனா, போலந்து, ருஷியா, தென்னாப்பிரிக்கா, திபத், நெதர்லாந்து, வியட்நாம், இஸ்ரேல், சிலி, எஸ்டோனியா, பிரேஜில், ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் இந்தப் படைப்புகளை மிக்க ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
118 மொழிகளில் ஷேக்ஸ்பியரின் படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஒரு ஆண்டுக்கு ஒரு கோடி என்ற கணக்கில், ஷேக்ஸ்பியர் இயற்றிய படைப்பிலக்கியப் புத்தகங்கள் உலகெங்கும் விற்கப்படுகின்றன. இதுவரை எத்தனை கோடி விற்றன என்பதை யாராலும் சொல்ல முடியாத நிலையில் பல கோடி என்று சொல்லி முடிப்பதே சிறந்த விடை ஆகும்!.

LOVE என்ற சொல்லை 2191 முறை ஷேக்ஸ்பியர் பயன்படுத்தியுள்ளார்.அவரது கதாபாத்திரங்களில் வரும் பெயர்களில் உலக மக்கள் பெரும்பாலானோரால் விரும்பப்படும் பெயர் ஒலிவியா.
ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரங்கள் சுமார் 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவரது படைப்புகளில் செக்ஸ், அரசியல் சூழ்ச்சி, வன்முறை (இன்றைய நோக்கில் ஒரு திரைப்படத்திற்கான மூன்று முக்கிய அம்சங்கள் இவை தானே!) ஆகிய மூன்றும் உண்டு என்பதால் அவை அனைவரையும் கவரும் திறன் வாய்ந்தவை.
அடுத்து ஷேக்ஸ்பியர் பிறந்த தேதி :
23-4-1564 என்ற தேதி ஷேக்ஸ்பியரின் பிறந்த தேதி. ஆனால் ஜூலியன் காலண்டர் என்ற பழைய காலண்டரின் அடிப்படையில் இந்தத் தேதி தரப்படுவதால் அதை மாற்றி இந்தக் காலத்திய க்ரெகோரியன் காலண்டர் படி பார்த்தால் வரும் தேதி 3-5-1564!
ஷேக்ஸ்பியருக்கு ஏழு உடன்பிறந்தோர் உண்டு.
ஜோன் (இரண்டு மாதமே வாழ்ந்த குழந்தை; பிறந்த ஆண்டு 1558)
மார்கரெட் (1562)
கில்பர்ட் (1566)
இன்னொரு ஜோன் (1569)
ஆன்னி (1571)
ரிச்சர்ட் (1574)
எட்மண்ட் (1580)
ஷேக்ஸ்பியருக்கு 18 வயது ஆகும் போது 26 வயதான ஆன்னி ஹாத்வேயை மணந்தார். மணமான போது ஷேக்ஸ்பியரின் குழந்தையை மூன்று மாதக் கருவாகக் கொண்டிருந்தார் அவர்.
இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உண்டு.ஒரு மகன் ஹாம்னெட் இரு பெண்கள் – சூசன்னா, ஜூடித்.
ஷேக்ஸ்பியர் ஒரு நாடக நடிகரும் கூட.
இங்கிலாந்தின் ராணி முதலாம் எலிஸபத் முன்னாலும் மன்னர் முதலாம் ஜேம்ஸ் முன்னாலும் அவர் நடித்திருக்கிறார்!
அவர் ஒரு நல்ல வியாபாரி. செல்வந்தரும் கூட. ஒவ்வொரு படைப்புக்கும் சன்மானமாக அவருக்கு நிறையப் பணம் வந்தது!
ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் வரும் பாத்திரங்களின் பெயர்களை,1852ஆம் ஆண்டு, ‘தி இண்டர்நேஷனல் அஸ்ட்ரானமி யூனியன்’, யுரேனஸ் கிரகத்தின் 27 துணை நிலாக்களில் பலவற்றிற்கு சூட்டியது. இந்தத் துணை நிலாக்களுக்கு அலெக்ஸாண்டர் போப்பின் ‘தி ரேப் ஆஃப் தி லாக்’ -இல் வரும் பாத்திரங்களின் சில பெயர்களையும் ஷேக்ஸ்பியரின் பாத்திரங்களுடன் கூடச் சேர்த்துச் சூட்டியது.
ஷேக்ஸ்பியரைப் பற்றிய மேலும் சில விவரங்களை இன்னுமொரு கட்டுரையில் தொடர்ந்து பார்ப்போம்.
TAGS– ஷேக்ஸ்பியர், திரைப்படங்கள்.
****

