தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 4 (Post No.7258)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 25 NOVEMBER 2019

Time  in London – 5-55 AM

Post No. 7258

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம். அவரை வழிபட்டுத் துதிப்போம்!

உரையின் முற்பகுதி : கட்டுரை எண் 7241; வெளியான தேதி 21-11-2019 இரண்டாம் பகுதி கட்டுரை எண் 7245 வெளியான தேதி 22-11-2019 மூன்றாம் பகுதி கட்டுரை எண் 7250 வெளியான தேதி 23-11-2019 பார்க்கவும்.

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 4

ச.நாகராஜன்

அன்புத் திருவுருவங்களே!

இதயத் தூய்மையை அடைய முயலுங்கள். இதுவே உங்களது முக்கியமான முயற்சியாக இருக்கட்டும். இதய சுத்தியுடன் நீங்கள் எதையும் சாதிக்க முடியும். இதய சுத்தியை அடைய நீங்கள் புனிதமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். யார் சமைக்கிறாரோ அவருக்குப் புனிதமான உணர்வுகள் இருக்க வேண்டும்.பண்டைய காலத்தில் ஆசாரமான பிராமணர்கள் தங்கள் மனைவி சமைத்த உணவைச் சாப்பிடுவதையே வலியுறுத்துவர். இதற்குக் காரணம் என்னவெனில் இல்லத்தரசிகள் தங்கள் குடும்பம் முழுவதும் நலமாக இருக்க வேண்டுமெனபதற்காகவே உணவைச் சமைப்பர். இதற்கு மாறாக நீங்கள் சமையற்காரரை நியமித்தால், கடவுளுக்குத் தான் தெரியும் என்ன உணர்வுகளுடன் உணவை அவர்கள் சமைத்தார்கள் என்று! சமைப்பவரின் புனிதமற்ற எண்ணங்கள் உணவுக்குள் புகும், அது உங்கள் மனதை விஷமாக்கும்.

அன்னம் பிரம்மா.ஆகவே அது புனிதமான உணர்வுகளுடன் தயாரிக்கப்பட வேண்டும். உடல் சுத்தம் மட்டும் போதாது. மனதும் சுத்தமாக இருக்க வேண்டும். நீங்கள் தயாரிக்கும் உணவிற்கான காய்கறிகள் தர்மமான வழியில் வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும். உதாரணமாக கணவன் காய்கறிகளைச் சந்தையிலிருந்து கொண்டு வருகிறான். அவன் தனது பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பணம் தராமல் அதைக் கொண்டு வந்திருக்கலாம் அல்லது விற்பனை செய்பவர்களே தவறான வழியில் அதைப் பெற்று வந்திருக்கலாம். அப்படிப்பட்ட கறிகாய்களைச் சாப்பிடும் போது உங்கள் மனம் தூய்மையை இழக்கிறது. நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உங்களது உணவு தான் காரணம் என்பதை நீங்கள் உணர்வதில்லை. புனிதமற்ற உணவு உங்களைப் புனிதமற்ற செயல்களைச் செய்ய வைக்கிறது.

அன்புத் திருவுருவங்களே!

 உங்களது உணவை இறைவனுக்குச் சமர்ப்பித்த பின்னரே அதை நீங்கள் உண்ணுங்கள். அப்போது தான் உணவு புனிதமாகிறது. உங்கள் புத்தியைப் பிரகாசிக்க வைக்கிறது. ஒருசமயம் சிவானந்த ஆசிரமத்தின் அருகில் ஒரு ஆசிரமத்தில் ஒரு சந்யாசி வாழ்ந்து வந்தார். அவர் ஒரு பக்தியுள்ள ஆத்மா.ஒரு நாள் வயதான ஒரு வியாபாரி அவரது இளம் மனைவி இறந்த பதினோராம் நாள், அவரிடம் ஆசிரமத்தில் உள்ளவர்களின் உணவைத் தயாரிப்பதற்காக நன்கொடை அளித்தார்.

வியாபாரி பணக்காரர் என்பதால் பெண்ணின் தந்தையை பணம் காட்டி மயக்கி பெண்ணை மணந்து கொண்டார். தனது விதியை நொந்தவாறே அந்தப் பெண் அந்த வியாபாரியின் வீட்டில் வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் தான் வாழ்ந்து வரும் வாழ்க்கையின் மீது வெறுப்புற்று அவள் கங்கையில் குதித்துத் தன் உயிரை விட்டாள். வியாபாரி அவளது ஈமச் சடங்கைச் செய்வதற்காக பதினோராம் நாள் அதைச் செய்து கொண்டிருந்தார்.

ஆசிரமத்தில் சமைக்கப்பட்ட உணவை ஏற்கக்கூடாது என்ற பழக்கம் இருந்தது.ஆகவே அந்த வியாபாரி சமைப்பதற்கு ஆகும் செலவைக் கொடுத்தார்.ஆசிரமத்தின் இதர சகாக்களுடன் அந்த சந்யாசியும் உணவை உண்டார். அன்று அவருக்கு உறக்கம் சரியாக வரவில்லை. ஒரு இளம் பெண் அவரது கனவில் வந்தாள்.

அவர் தனக்குத் தானே சொல்லிக் கொண்டார் இப்படி: “ புலனின்பத்திற்காக நான் ஒருபோதும் ஏங்கியதில்லை, அப்படிப்பட்ட எண்ணமும் எனக்கு வந்ததில்லை. அப்படியிருக்க எனக்கு ஏன் கெட்ட கனவு வரவேண்டும்?”

அவரது தியானத்திலும் அதே காட்சியை அவர் கண்டார்.

ஆகவே சச்சிதானந்தம் என்ற பெயர் கொண்ட தன் குருவிடம் சென்று தனது பிரச்சினையைச் சொன்னார்.

“ஸ்வாமி! நான் ஏன் அப்படிப்பட்ட புனிதமற்ற காட்சிகளைக் கண்டேன்?”அவரது குரு அவரைக் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார்.

அவர் வியாபாரிக்குச் செய்தி அனுப்பி அவரை வரச் சொன்னார். அவரிடம் பேசினார். அவரது மனைவியின் அகால மரணத்திற்கான காரணத்தை அறிந்தார். ஈமச்சடங்கிற்காக சமைத்த உணவை அந்த சந்யாசி உண்டதாலேயே அவள் அவரது காட்சியில் தோன்றுகிறாள் என்பதை அவர் தெரிந்து கொண்டார்.

அன்றைய தினத்திலிருந்து அந்த சந்யாசி சமைத்த உணவைச் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு பழம் மற்றும் பாலை மட்டும் உண்டு வாழ ஆரம்பித்தார்.

பிக்ஷான்னம் தேஹ ரக்ஷணார்த்தம்!

( தேஹ ரக்ஷணத்திற்கு உணவு அவசியம்)

ஒரு கார் ஓடுவதற்கு பெட்ரோல் தேவை. அதே போல உடல் நன்கு இருக்க உணவு தேவை. சில சமயம் நீங்கள் கெட்ட கனவைக் காண்கிறீர்கள், தியானத்தின் போது கெட்ட காட்சியைக் காண்கிறீர்கள். இது புனிதமற்ற உணவின் விளைவு.

ஆகவே சமைப்பதற்கு முன்னர், அதற்கான சாமான்கள் நல்ல வழியில் பெறப்பட்டதா என்று விசாரிக்க வேண்டும்.

பின்னரே உணவு உண்ணத் தக்கதாக ஆகிறது.

உணவை உட்கொள்ளும் முன்னர் நீங்கள் பிரார்த்திக்க வேண்டும்.

ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்மஹவிர்

ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மணாஹுதம்

ப்ரஹ்மைவ தேன கந்தவ்யம்

ப்ரஹ்ம கர்ம சமாதினா

புனிதமான உணர்வுகளுடன் நீங்கள் பிரார்த்தித்தால் உணவு தூய்மையாகிறது.

ஒரு சமயம் விக்ரமாதித்த  மஹாராஜா ஒரு பெரிய சபையைக் கூட்டினார். அவர் ஒரு கேள்வியைக் கேட்டார்: “ புத்தி பெரிதா, மேதஸ் பெரிதா?”

சபையில் பங்கு கொண்டோர் மேதஸ் தான் பெரிது என்று கூறினர்.

 ஆனால் அவர்களின் கருத்தை விக்ரமாதித்தன் ஏற்கவில்லை. அவர் கூறினார், “புத்தியே பெரிது, ஏனெனில் அது ஆத்ம ஞானத்தைக் கொண்டிருப்பதால் அதுவே பெரிது.”

புத்திக்ரஹ்யமதிந்திரியம் (புத்தி மனத்தையும் புலனையும் கடந்திருப்பதாகும்)

***

உரை தொடரும்