
Compiled by London swaminathan
Date: 22 December 2015
Post No. 2414
Time uploaded in London:- காலை 8-01
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
இந்தக் கதை — பழைய கால தமிழ்நடை, நகைச்சுவை, சமுதாய நிலையைப் பிரதிபலிப்பதால் இங்கே இடப்படுகிறது.
பழைய கால நகைச் சுவை நூலான — பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.
நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

நூறு ஆண்டு பழமையான ‘ஜோக்’குகள்
ஒரு ஊரில் தையனாயகி என்ற தாசி ஒருத்தி உண்டு. அவளை ஒரு செட்டியாரும், அவர் மகனும், கணக்குப்பிள்ளையும், அகுதாரும் வைப்பாக ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வைத்திருந்தார்கள். ஒரு நாள் செட்டியார் மகன் சரச சல்லாபமாகப் பேசிக்கொண்டிருக்கும் சமயம், தகப்பன் செட்டியார் வந்துவிட்டார். மகன், தன்னை ஒளித்துவைக்கும்படி தாசியை வேண்ட, இருட்டாயிருக்கும் சேந்தியிலிருக்கும்படி செய்து, செட்டியாருடன் பேசும் முன்பு, கணக்குப் பிள்ளை வந்துவிட்டார். இதுசெய்தி செட்டியாரறிந்து தன்னை ஒளித்துவைக்கும்படி வேண்டினார். அவரையும் அவ்வாறே சேந்தியிலேற்றினாள்.
பின்னர் கணக்குப்பிள்ளை பேசிக்கொண்டிருக்கும் போது அகுதார் வந்துவிட்டார். தற்சமயம் தன்னை ஒளித்துவைக்கும்படி கணக்குப்பிள்ளை வேண்ட, அவரையும் சேந்தியிலேற்றிவிட்டாள். இவர்கள் மூவரும் ஒரே காபி கிளப்பில் உப்பு ஜாஸ்தியாகப் போட்ட உப்புமா சப்பிட்டுவந்தபடியாலே தாகம் அதிகரித்து, ‘தண்ணீர், தண்ணீர்’ என்று கூவினார்கள். உடனே அகுதார் இது என்ன கூப்பாடு? எங்கிருந்து வருகிறது? என்று கேட்டார். அதற்கு தாசி “பிரபுவே, எங்கள் குலதெய்வத்துக்கு வருஷவாரி நேத்திக்கடன் செய்வது வழக்கம். அது இந்த வருஷம் நின்றுவிட்டது. அதனால்தான் தாகம், தாகம் என்று கூவுகிறது. கொல்லையில் இருக்கும் மரத்தில் இரண்டு இளநீர் வெட்டிப் போட்டாற் கூவாது” என்றாள்.
உடனே வேலையாளை ஏவி, இரண்டு, மூன்று இளநீர் வெட்டி மேலே எறியப்பட்டது. இளநீர் சேந்தியில் விழவே மூவரும் அதை இருட்டில் தடவி எடுத்துக்கொண்டு உடைப்பதற்கு கல்லைத் தேடினார்கள். “இறப்பில் செருகிவைத்த சூரியன் குஞ்சைத் தேடின”. நாட்டுப்புறத்தானைப் போல மூவரும் தேட, மூவர் தலையும் மொட்டையாகவும், அன்று சவரம் செய்துகொண்டதால் தலை மொண்ணையாயுமிருந்தது. அதை குத்துக் கல் என்றெண்ணி ஒருவர் தலைவர் மீது மற்றொருவர் இளநீரை ஓங்கி அடித்தனர். அவர்கள் மூவருக்கும் அதிர்ச்சி தாளாமல் மயக்கம் வந்தது. குய்யோ முறையோ என்ற கூக்குரலுடன் கீழே குதித்தனர்.
குலதேவதைதான் கீழே குதிக்கிறது என்று நினைத்த, அகுதார், அந்த தேவதையைச் சாந்தம் செய்யும்படி கூறிவிட்டு ஓட்டம்பிடித்தார். மற்ற மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் மூடிக்கொண்டு இல்லங்களுக்கு விரைந்தேகினர்.
நீதி: எப்போதும் தாசியின் வலையில் அகப்படுவோருக்கு இந்த கதிதான் ஏற்படும். அவர்களால் தொல்லையே தவிர சுகமில்லை.

-சுபம்-
You must be logged in to post a comment.