நமசிவாய படகில் போகலாம்– மாணிக்கவாசகர் (Post No. 3473)

Written by London swaminathan

 

Date: 22 December 2016

 

Time uploaded in London:- 10-26 AM

 

Post No.3473

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

பிறப்பு-இறப்பு என்னும் பெருங்கடலில் இருந்து தப்பிக்க என்ன வழி என்று அப்பரும், மாணிக்க வாசகரும் சொல்லும் வழிகள் இலக்கிய நயம் படைத்த பாடல்கள் ஆகும். முதலில் மாணிக்க வாசகர், திருவாசகத்தில் கூறியதைப் பார்ப்போம்:-

 

தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்

தடத்திரையா லெற்றுண்டு பற்றொன்றிக்

கனியை நேர் துவர் வாயாரென்னும் காலால்

கலக்குண்டு காமவாள் சுறவின் வாய்ப்பட்

டினி யென்னே யுய்யுமாறென்றென்றெண்ணி

அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை

முனைவனே முதலந்தமில்லா மல்லற்

கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே (27)

திருவாசகம் திருச்சதகம்

 

 

பொருள்:

கடவுளே! நான் பிறவிப் பெருங்கடலில் (ஒப்பிடுக- குறள் “பிறவிப் பெருங்கடல் நீந்துவார்…..) விழுந்தேன்; துன்பங்கள் என்ற அலைகள் என்னை ஆட்டிப் படைக்கின்றன; கொவ்வைக்கனி போல சிவந்த வாயுடைய பெண்கள் என்ற புயற்காற்றும், காமம் என்னும் சுறாமீன்களும் (ஒப்பிடுக-ஆதிசங்கரரின் விவேக சூடாமணி ஸ்லோகம்  79, 141) என்னைப் பிடித்துவிட்டன. என்ன செய்வதென்று திகைத்தபோது ஐந்தெழுத்து என்னும் படகு கிடைத்தது. அதைப் பற்றிக்கொண்டு விட்டேன்; நீ என்னைக் காத்தருள்வாயாக.

பிறவிப் பெருங்கடல் என்பது கீதை முதலிய சம்ஸ்கிருத நூல்களில் காணப்படும் சம்சார சாகரம் என்பதன் தமிழ் வடிவமாகும்.

 

பக்தர்கள் இரண்டு வகை. பூனைக்குட்டி, குரங்குக் குட்டி போல இரண்டு வகையினர். ஆனால் மாணிக்க வாசகரும் அப்பரும் அதற்குப் பதிலாக ஏணியையும் தோணியையும் (படகு, தெப்பம்) பயன்படுத்துகின்றனர். ஐந்தெழுத்து என்பது நமசிவாய என்னும் அரிய பெரிய மந்திரம். யஜூர்வேதத்தில் ருத்ரம் என்னும் பகுதியில் அமைந்த மந்திரம் ஆகும்.

 

மற்கட நியாயம், மார்ஜர நியாயம்

இதை பல தருணங்களில் பல விஷயங்களை விளக்கப் பயன்படுத்தலாம். இருந்த போதிலும் பக்தர்களின் வகைகள் எத்தனை என்று விளக்க இதைப் பெரும்பாலும் பயன்படுத்துவர்.

பக்தி இலக்கியத்தைப் படைத்தவர்கள் பொதுவாக பக்தர்களை இரண்டு வகையாகப் பிரித்து இருக்கின்றனர். குரங்கு போன்ற பக்தர்கள், பூனை போன்ற பக்தர்கள் என்று.

குரங்குகள் என்ன செய்யும்? மரத்தை விட்டு மரத்துக்கு தாவிக் கொண்டே இருக்கும். அதனுடைய குட்டியும் கூடவே செல்ல வேண்டும்.. இதற்கு என்ன வழி? குரங்குக் குட்டி தனது தாயை இறுகக் கட்டிப் பிடித்துக் கொள்ளும். எத்தனை உயரத்தில் இருந்து குரங்குகள் கீழே குதித்தாலும், மேலே தாவினாலும் மிக மிக அபூர்வமாகவே குட்டி கீழே விழும். ஆக பக்தர்களில் குரங்கு போன்ற பக்தர்கள் தாமாகவே சென்று இறைவனைப் பிடித்துக் கொள்வார்கள். தமிழில் ‘குரங்குப் பிடி’ என்ற சொற்றொடரே இருக்கிறது.

 
மாணிக்கவாசகர் போன்ற அடியார்கள், “சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே” என்று பாடுவர்.

பூனைகள் என்ன செய்யும். குட்டி போட்ட பின்னர், தாய்ப் பூனை இடம் விட்டு இடம் போனால் குட்டியை தானே வாயில் கவ்விக் கொண்டு போகும். குட்டிகளோ வெறும் ஜடம் போல சும்மா இருக்கும். அதாவது எல்லாப் பொறுப்புகளையும் அம்மாவிடம் விட்டுவிட்டு அம்மாவே பார்த்துக்கொள்ளட்டும் என்று குட்டிப் பூனை பேசாமல் இருந்துவிடும். இது மற்றொரு வகை பக்தர்களுக்கு எடுத்துக்காட்டு.

சுருக்கமாக, நாமே சென்று கடவுளைச் சிக்கெனப் பிடித்தால் நாம் குரங்கு போன்ற பக்தர்கள். எதையுமே கேட்பதில்லை. கடவுள் விட்ட வழி என்று அவனைச் சரண் அடைந்து இருப்பவர்கள் பூனை போன்ற பக்தர்கள்.

இதே மற்கட, மார்ஜர நியாயத்தை அப்பர் பெருமான் தனக்கே உரிய பாணியில் வழங்குகிறார். அவர் பக்தர்களை 1.ஏணி வகை, 2.தோணி வகை என்று இரண்டாகப் பிரிக்கிறார்.

 

ஏணி என்ன செய்யும்? தாமாக மேலே ஏற முயன்றவர்களை மேலே ஏற்றிச் செல்லும். நாம் தான் ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். இது மற்கட நியாயத்துக்கு சமம். எப்படிக் குரங்குக் குட்டிகள் தாயை இறுகப் பற்றியதோ அப்படி நாமும் ஏணியைப் பிடிக்கவேண்டும். இது ஏணி நியாயம்.

தோணி (படகு) வகைப் பக்தர்கள் எப்படிப்பட்டவர்கள்? படகில் ஏறிவிட்டால், படகோட்டியே நம்மை அக்கரைக்குக் கொண்டு செல்லுவான். அதற்குப் பின்னர் நம் வேலை எதுவும் இல்லை. இது பூனை வகை பக்தர்களுக்குச் சமம். இறைவனைச் சரணடைந்துவிட்டு ஆண்டவனே நீயே என்னை அக்கரைக்கு கொண்டு செல் என்று அவன் கையில் பொறுப்பை ஒப்படைத்து விடும் பக்தர்கள் இந்த வகையில் வருவர். இது தோணி நியாயம்.

இதோ பாருங்கள், அப்பர் பெருமானின் ஆறாம் திருமுறை தேவாரப் பாடலை:–
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை
பித்தர் தம் அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை, இடர்க்கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு,
இளைகின்றேற்கு அக்கரைக்கே ஏற வாங்கும்
தோணியை, தொண்டனேன் தூய சோதிச்
சுலா வெண்குழையானை, சுடர் பொன்காசின்
ஆணியை, — ஆவடுதண்துறையுள் மேய
அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்தேனே (6—461)

 

பொருள்: பிறை சூடிய பெருமான் (சிவன்), அவனுடைய பக்தர்களை முக்தி பெற அழைத்துச் செல்லும் ஏணி ஆவான். பிறவிக் கடல் என்னும் துன்பக் கடலில் சிக்கித் தவிக்கும் என்னை அக்கரைக்கு , அதாவது, முக்திக்கு அழைத்துச் செல்லும் தோணி போன்றவன் அவன். காதில் ஆடும் அழகான வெள்ளை நிறக் குழை அணிந்தவன். பொற்காசை உரைத்து பார்க்கும் கட்டளைக்கல் போன்றவன். குளிர்ந்த ஆவடுதுறையில் வசிக்கும் அவனைக் கடையனுக்கும் கடையேனாகிய நான் அடைந்து உய்வுபெற்று விட்டேன்.

 

இவ்வாறு திருக்குறள், விவேக சூடாமணி, தேவாரம், திருவாசகம் ஆகிய பல நூல்களில் ஒரே கருத்து நிலவுவது பாரதீய அணுகுமுறை ஒன்றே என்பதை எடுத்துக்காட்டும்.

 

–Subahm–