
Written by S.NAGARAJAN
Date: 26 September 2017
Time uploaded in London- 5-16 am
Post No. 4243
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
13-9-20̀17 அன்று வெளியான கட்டுரை எண் 4207இல் கண்ணழகை வர்ணிக்கும் சொல்லழகுப் பாடலை இயற்றிய நமச்சிவாயப் புலவரைப் பற்றிப் பார்த்தோம். அவரது இன்னொரு பாடல்!
கோபாலன் ஆன குணம் போகுமா, பாண்டியா?
ச.நாகராஜன்
கண்ணழகை வியந்து சொல்லழகு ததும்பிய நமச்சிவாயப் புலவரின் பாடலைப் பார்த்தோம்.
அவரது இன்னொரு பாடல்.
ஒரு நாள் பாண்டிய மன்னனின் அவைக்குச் சென்றார் புலவர்.
அங்கே அவர் பாண்டியன் கோ துரத்தும் வேலையைச் செய்திருப்பதைக் கண்டார்
கோ என்ற வார்த்தை அரசர்களையும் குறிக்கும்; பசுக்களையும் குறிக்கும்.
மன்னன் பகை அரசரையும், பசுக்களையும் துரத்திக் கொண்டிருப்பதைக் கண்ட புலவர் உடனே ஒரு பாடலைப் பாடினார் இப்படி:
கோலெடுத்துக் கோத்துரத்துங் கோப்பாண்டி மன்னன் வடி
வேலெடுத்துக் கோத்துரத்தல் விட்டிலனே! – சால்படுத்த
பூபால னானாலும் போமோ புராணத்திற்
கோபால னான குணம்.
போட்டார் ஒரு போடு.
புராண காலத்தில் கிருஷணனாக இருந்தவன் நீ; உன் பிறவிக் குணம் போகுமா என்று.
கவிதையின் பொருளைப் பார்ப்போம்.
கோல் எடுத்து – செங்கோலைக் கையில் எடுத்துக் கொண்டு
கோ துரத்தும் – பகை அரசர்களை ஓட்டுகின்ற
கோப் பாண்டி மன்னன் – அழகிய பாண்டிய ராஜன்
வடிவேல் எடுத்து – வடிவேலைத் தாங்கி
கோ துரத்தல் விட்டிலனே – பசுக்களைத் துரத்தும் தொழிலை விடவில்லையே
சால்பு அடுத்த – பெருமை பொருந்திய
பூபாலன் ஆனாலும்- பூமியை ஆளும் பூபதி என்றாலும் கூட
புராணத்தில் – முன்பொரு காலத்தில்
கோபாலன் ஆன குணம் – கோபாலன் என்ற கிருஷ்ணராக இருந்த குணம்
போமோ – நீங்குமோ?!
கோபாலன் -பசுக்களைக் காப்பவன் ; கிருஷ்ண பகவான்
பாண்டிய ராஜனை கிருஷ்ணனுக்கு நிகர் என்று கூறிய கவிஞருக்குப் பரிசு கிடைத்தது என்று சொல்லவும் வேண்டுமோ!
***