
WRITTEN BY S NAGARAJAN, BANGALORE
Date: 13 January 2016
Post No. 2484
Time uploaded in London :– 6-36 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
ஆன்மீக இரகசியம்
காரண காரிய தொடர்பு அறிவது கஷ்டமான ஒன்று!
ச.நாகராஜன்
நல்லதும் கெட்டதும் ஏன் ஏற்படுகிறது?
மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான அனுபவங்கள். ஆயிரக் கணக்கான சிந்தனைகள்.
எதிர்பாராமல் ஒருவரைச் சந்திக்கிறோம். அந்தச் சந்திப்பு வாழ்க்கையையே மாற்றி விடுகிறது. உயரத்தில் ஏற்றி விடுகிறது.
ஒரு சிறிய சறுக்கல். சின்ன விபத்து. அது வாழ்க்கையையே ஏமாற்றி விடுகிறது. ஒரு அங்கம் பழுதானால் வாழ்க்கையே ப்ழுதாகி விடுகிறது.
இந்த நல்லதும் கெட்டதும் எதனால் ஏற்படுகிறது.
இது யாருக்கும் தெரிவதில்லை; புரிவதில்லை.
முற்றும் துறந்த மகான்கல் சிலருக்கே இந்த மர்மம் புரிகிறது. ஆனால் அவர்களும் தன்னை தரிசிக்கும் சிலருக்கே, இந்த காரண காரிய தொடர்பினால் அவர்கள் துயருறும் போது, உரிய நிவாரணத்தை வழங்குகின்றனர்.
எல்லோருக்கும் எப்பொழுதும் துயரை உடனே போக்கி விடுவதில்லை.

Good versus bad crossword concept on white background
நல்லதையே செய்: எளிய விதி
இந்த புண்ய பாப கர்ம பலன் மிகவும் சிக்கலானது. எளிதில் அறிந்து கொள்ள முடியாதது.
ஆனால் இதை அறிந்து கொள்ளத் தேவை இல்லை என்று பெரியோர் முடிவு கட்டினர். தபஸ்விகளினாலேயே முடியாததை சாமான்யனால் எப்படி அறிய முடியும்?
ஆகவே தான் சுலபமாக இந்த கர்ம பலன்கள் தரும் புண்ய பாவ சுழற்சியிலிருந்து மீள சுலபமான வழியைச் சொல்லி வைத்தனர்.
இறைவனை வழிபடு; நல்லதைச் செய்; அதையும் அவனுக்கே அர்ப்பணித்து விடு!
கர்மண்யேவாதிகாரஸ்தே; மா ஃபலேஷு கதாசன;
கர்மம் செய்தற்குத் தான் உனக்கு அதிகாரம்; அதன் பயனில் ஒரு பொழுதும் (கதாசன) இல்லை.
சிங்–காங்கும் ஆமையும்
இதை விளக்க புத்த மதத்தில் அற்புதமான சம்பவம் ஒன்று உண்டு.
சிங்-காங் ஒரு நாள் வீதி வழியே சென்று கொண்டிருந்தார். மீனவன் ஒருவன் ஆமை ஒன்றைக் கடலிலிருந்து பிடித்து வீதி வழியே நடந்து வந்து கொண்டிருந்தான். அதை சந்தையில் விற்பதே அவனது எண்ணம். சந்தையில் யாரோ ஒருவர் வாங்கி விட அந்த ஆமை உணவாக சமைக்கப்படப் போவது நிச்சயம்.
உயிர் மீது கருணை கொண்ட சிங்-காங் பரிதாபப்பட்டார். அதை மீனவனிடமிருந்து தானே வாங்கினார். நேராகக் கடலுக்குப் போனார். அதைக் கடலில் தூக்கிப் போட்டார்.
கடலில் தூக்கிப் போடும் போது ஆமை தன் தலையை இடது புறமாகத் திருப்பி சிங்- காங்கை நன்றாகப் பார்த்தது. இப்படி மூன்று முறை பார்த்தது.
பின்னர் வெகு வேகமாகக் கடல் நீரில் பாய்ந்து விரைந்து சென்றது.
சிங்-காங் வீடு திரும்பினார். இந்தச் சம்பவத்தை அவர் மறந்தே போனார்.
காலம் சென்றது. சிங்-காங் அவர் இருந்த நகரில் மேயரானார்.
சின்ன நகரம் அது. அந்த நகரத்தின் சம்பிரதாயப்படி மேயரான ஒருவர் தனக்கான இலச்சினையை தானே வடிவமைத்துக் கொண்டு உபயோகிக்கலாம். (சீனாவிலும் ஜப்பானிலும் இது ஒரு சம்பிரதாயம். மரத்திலோ அல்லது கல்லிலோ செய்து கொள்வார்கள்.)
சிங்-காங் வாழ்ந்த நாளில் வழக்கமாக தங்கத்தில் இலச்சினையைச் செய்து அதன் மேல் ஆமையின் உருவத்தைப் பொறிப்பார்கள்.
சிங்-காங் பொற்கொல்லர் ஒருவரைக் கூப்பிட்டுத் தனக்கான இலச்சினையைத் தந்து அதை செய்யச் சொன்னார்.
பொற்கொல்லந்னும் அதைச் செய்து சிங்-காங்கிடம் கொண்டு வந்து காண்பித்தான். எல்லாம் சரியாக இருந்த போதிலும் ஒரு சின்ன மாறுதல் அதில் இருந்தது.
சின்னத்தின் மேல் இருந்த ஆமையின் தலை இடது பக்கம் பார்த்துக் கொண்டிருந்தது.
தவறைச் சுட்டிக் காட்டிய சிங்-காங் அதைச் சரி செய்யுமாறு பொற்கொல்லனிடம் கூறினர். பொற்கொல்லன் தான் சரியாகத் தான் செய்ததாகவும் ஆமை எப்படியோ திரும்பி இருக்கிறது என்று கூறி விட்டு மீண்டும் அதைச் செய்தான்.
இரண்டாம் முறையும் அது தலையை இடது புறம் பார்த்துத் திரும்பி இருந்தது.
மூன்றாம் முறையாக பொற்கொல்லன் அதை செய்தான்.
என்ன ஆச்சரியம்,இந்த முறையும் ஆமையின் தலை இடது புறம் பார்த்தே திரும்பி இருந்தது.
பொற்கொல்லனிடம் மூன்றாம் முறையாக இலச்சினையைப் பெற்ற சிங்-காங் திகைத்தார். ஒரு நிமிடம் சிந்தித்தார்.
அவருக்கு எல்லாம் புரிந்து விட்டது.
அந்த ஆமையின் தலை இடது புறம் பார்த்து திரும்பியே இருக்கட்டும் என்று கூறி அதையே தன் இலச்சினையாகக் கொண்டார்.
அவர் புரிந்து கொண்டது- உலகின் எல்லா விஷயங்களும் சும்மா நடப்பதில்லை. ஒரு காரண-காரியத் தொடர்புடன் தான் நடக்கிறது.
அசைவற்றதும், அசைவுள்ளதும், உயிருள்ளதும் இல்லாததும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பின்னப்பட்டிருக்கிறது.
மூன்று முறை இடது புறம் தலையைத் திருப்பித் தன்னைப் பார்த்த ஆமை அல்லவா மேயர் என்ற உயர்ந்த அரியணையில் தன்னை உட்கார்த்தி வைத்திருக்கிறது! கர்ம பலன் விதியை சிங்-காங் நன்றாகவே புரிந்து கொண்டார்.
(for more articles go to tamilandvedas.com OR swamiinology.blogspot.com)
![]()
சிக்கலானது கர்ம பலன் விதி
சிறிய நல்ல விஷயமும் பெரிய நல்ல பலனைத் தரும்.
சாமானிய எளிய மனிதர்களால் இதைப் புரிந்து கொள்ள முடியாது. சிக்கலான விதிகள் மகான்களுக்கே புரிவது கஷ்டம் எனில் சாமானியர்களுக்கு எப்படி விளங்கும்?
ஆனால் இவை விளங்கித் தான் ஆக வேண்டுமென்பதில்லை.
நல்ல காரியங்களை எப்போதும் எங்கும் எல்லோருக்கும் செய்வோம். நல்லதைப் பெறுவோம்.
ஆமை உரிய நேரத்தில் நம்மை உயர்த்தி வைத்து இடது புறம் தலையைத் திருப்பிப் பார்க்கும்.
காரண காரியத் தொடர்பை விளக்கும் அபூர்வமான இந்த சீனக் கதை விளக்குவதோ, பெரிய யோகிகளாலும் எளிதில் அறிய முடியாத காரண காரிய கர்ம பலனின் விதியைப் பற்றி!
ஆகவே தான் புத்தர் தனது எட்டு விதிகளில் நல்ல பார்வை, நல்ல நோக்கம், நல்ல பேச்சு, நல்ல செயல் ஆகியவற்றை முதல் நான்கில் வைத்தார்.
(நல்ல வாழ்க்கை முறை, நல்ல முயற்சி, நல்ல மனம், நல்ல மனக் குவிப்பு ஆகியவை அடுத்த நான்காக இடம் பெறும்)
விஞ்ஞான ரீதியாக பட்டர் ஃபிளை எபெக்ட் இதைத் தானே இன்று விளக்குகிறது!!!
*******
(இந்தக் கட்டுரையாளர் எழுதிய பட்டர் ஃப்ளை எபெக்ட், டைம் ட்ராவல் ஆகியவை பற்றிய ஆன்மீக இரகசியங்களை விளக்கும் கட்டுரைகள் ஹ்யூ எவரெட் போன்ற விஞ்ஞானிகளின் விதிகளோடு எழுதப்பட்டதை நேயர்கள் படிக்க விரும்பலாம். படியுங்கள்)
contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.