
Written by S NAGARAJAN
Date: 4 April 2016
Post No. 2692
Time uploaded in London :– 8-35 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் ஏப்ரல் 2016 இதழில் வெளி வந்துள்ள கட்டுரை
ச.நாகராஜன்

கிரகங்களை ஆக்டிவேட் செய்வதா?
ஆன்மீகத்திற்குச் சற்றும் சம்பந்தமே இல்லாத பத்திரிகைகள் மற்றும் தொலைக் காட்சி சானல்களில் நட்சத்திர ஸ்தலங்கள், நவக்கிரகங்கள் பூஜை செய்த ஸ்தலங்கள் என்று நாளுக்கு ஒரு பட்டியல் வருகிறது. நவக்கிரகங்களை ‘ஆக்டிவேட்’ செய்யும் மாயாஜால வேலைகளை சிலர் செய்வது கண்டு ஆன்மீக அன்பர்கள் மனம் நொந்தூ போகிறார்கள். இது இயல்பே.
நெட் உலகில் வைக்கோல்போரில் ஊசி தேடுவது போல உண்மையைத் தேட வேண்டியிருக்கிறது.
தமிழ்த்தாத்தாவும் தி.வே.கோபாலையரும்
இந்த வகையில் நவக்கிரகங்கள் பூஜித்த தலங்களைப் பற்றிய சரியான உண்மையைத் தேடுவோருக்கு தமிழ்த்தாத்தா மஹாமஹோபாத்யாய உ.வே.சாமிநாதையரின் குறிப்புகள் பேருதவியாக இருக்கும். ஊர் ஊராகச் சென்று அனைத்துச் சுவடிகளையும் சேகரித்து அவற்றிலிருந்து அவர் எடுத்த குறிப்புகள் ஏராளம். ஸ்தலங்களைப் பற்றி அவர் எடுத்த குறிப்புகள் இரு பாகங்களாகப் பல்லாண்டுகளுக்கு முன்னர் வெளி வந்துள்ளன.
இன்னொரு தமிழ் அறிஞர் தி..வே. கோபாலையர். வெளி உலக விளம்பரத்தை விரும்பாது பாண்டிச்சேரியிலிருந்து இவர் ஆற்றிய பணி மிகவும் அரிய் பணி. தேவார ஆய்வுத் துணை என்ற நூலில் ஸ்தலங்களைப் பற்றி இவர் சேகரித்த ஆய்வுக் குறிப்புகள் அற்புதமானவை.
அந்தக் குறிப்புகளிலிருந்து சில தகவல்களைக் கீழே வழங்குகிறோம். இந்தக் குறிப்புகளின் அடிப்படையில் அந்தந்த தலங்களுக்குச் சென்று குறிப்பிட்ட கிரகங்களை ப்ரீதி செய்யும் விவரங்களைக் கேட்டு உரியனவற்றைச் செய்யலாம். சில சமயம் நாம் அறிந்த தகவல்களைப் பற்றி விசாரிக்கும் போது அந்த தலத்தின் குருக்களே, ‘அப்படியா’ என்று வியப்படைவதைக் கண்டு நாம் வியப்படைய வேண்டியதாக இருக்கிறது!

சூரியன் பூஜித்த ஸ்தலங்கள் 12
- கேதாரம்: இமயமலையில் உள்ளது
- திருக்கோலக்கா: சூரிய புட்கரணி உள்ள ஸ்தலம். கார்த்திகை ஞாயிறு விசேடம்.
- திருவெண்காடு: சூரிய புட்கரணி.ஆவணி ஞாயிறு விசேடம்.
- சாயாவனம்: ஆதித்ய புட்கரணி உள்ள ஸ்தலம்.கார்த்திகை ஞாயிறு விசேடம்.
- கருங்குயில்நாதபுரம்: மித்திர புட்கரணி. காவேரியில் கார்த்திகை ஞாயிறு விசேடம்
- திருத்துருத்தி: ரவி தீர்த்தம். கார்த்திகை ஞாயிறு கார்த்திகையில் விசேடம்,
- ஸ்ரீ வாஞ்சியம்: பூஷண தீர்த்தம். குப்த கங்கை. கார்த்திகை ஞாயிறு விசேடம்
- திருநாகேஸ்வரம்: சக்தி தீர்த்தம். கார்த்திகை ஞாயிறு விசேடம்
- குடந்தைக் கீழ்க்கோட்டம்: காவேரியில் மரீசி தீர்த்தம். கார்த்திகை ஞாயிறு விசேடம்
- தேதியூர்: அர்க்க புட்கரணி. கார்த்திகை ஞாயிறு விசேடம்
- மீயச்சூர் : ரத ஸப்தமி
- திருவாவடுதுறை: ரத ஸப்தமி. மீயச்சூரிலும் திருவாவடுதுறையிலும் திதி விசேஷம். இந்த ஸப்தமியில் ஞாயிறு சேர்ந்தால் மஹாயோகம்
மேற்கண்டவற்றில் சூரியனுக்கு ஆலயங்கள் உள்ள இடங்களாவன: ,மீயச்சூர்,திரு நாகேஸ்வரம், குடந்தைக் கீழ்க்கோட்டம்,
சூரியன் பூஜித்த இதர ஸ்தலங்கள்; இன்னம்பர் (இனன் என்றால் சூரியன்), திருவையாறு,திருத்தாளமுடையார் கோயில், கழுக்குன்றம், பருதி நியமம் மற்றும் ஆடானை
சந்திரன் பூஜித்தவை:
- கேதாரம் 2) சோமநாதம் 3) கஞ்சனூர் 4) அச்சுதமங்கலம் 5) குடந்தைச் சோமேசம் 6) மானாமதுரை 7)திருவெண்காடு (சந்திர புட்கரணி) 8) பிரயாகை
சோமன் அதாவது சந்திரனால் பூஜிக்கப்பட்ட லிங்கங்கள் சோமேசுவரர் எனப் பெயர் பெறுவார்.
அங்காரகன் பூஜித்தவை
- கேதாரம் 2)வேளூர் 3)அத்திப்புலியூர் (தை செவ்வாய்) 4) இலந்துறை (கார்த்திகைச் செவ்வாய்) 5) மங்கலக்குடி (மார்கழிச் செவ்வாய்) 6) கச்சித் திருநெறிக்காரைக்காடு
புதன் பூஜித்தவை
- கேதாரம்
- வெண்காடு (சந்திர புட்கரணியில் புத தீர்த்தம். வடக்கே தரையில் புதன் இருக்கிறார் ஆனி, புரட்டாசி புதன்கிழமை விசேடம்
3) சீர்காழி
4) குருகாவூர்

குரு பூஜித்தவை
1.கேதாரம் 2) திருக்கொண்டீஸ்வரம் (கார்த்திகை வியாழன் விசேடம்)
3) பெருஞ்சேரி (மார்கழி வியாழன் விசேடம்)
4) மாங்குடி (பங்குனி வியாழன் விசேடம். இந்த ஊர் கொல்லு மாங்குடிக்கு மேல்புறம் உள்ளது)
5) சிதம்பரம்
சுக்கிரன் பூஜித்தவை
- கேதாரம் 2) வாஞ்சியம் (ஆடி வெள்ளி விசேடம்)
3)சிதம்பரம்: புரட்டாசி வெள்ளி விசேடம். 4)திருக்கோடிகா (வைகாசி வெள்ளி விசேடம்) 4) காஞ்சீபுரம் (தை வெள்ளி ஸ்நான விசேடம்) 5) கரையபுரம்
சனி பூஜித்தவை
- கேதாரம் 2) வழுவூர் (தை, மாசி சனி விசேடம்) 3) திருநள்ளாறு: (வைகாசிச் சனி விசேடம்) 4)வேதாரணியம் (கார்த்திகைச் சனி விசேடம்) 5)ஆரூர்: மேற்படி ஸ்நான விசேடம் 6) திருச்செங்காட்டங்குடி
ராகு பூஜித்தவை
- கேதாரம் 2) சீர்காழி
கேது பூஜித்தவை
- கேதீஸ்வரம் (இலங்கையில் உள்ளது)
சூரிய பூஜை ஸ்தலங்கள்
சூரியனின் கிரணங்கள் குறிப்பிட்ட நாளில் சிவலிங்கத்தின் மீது பட்டு சூரியன் பூஜை செய்வதை பல ஸ்தலங்களில் பார்க்கலாம். இப்படிப்பட்ட ஸ்தலங்கள் பாரதம் முழுவதும் ஏராளம் உள்ளன.
தமிழறிஞர் தி.வே.கோபாலையர் அவர்களின் குறிப்பின் படி:
- கண்டியூர் 2) குடந்தைத் திருக்கோட்டம் 3) தெளிச்சேரி 4) நெல்லிக்கா 5) புறவார் பனங்காட்டூர் 6) வேதிகுடி ஆகிய ஸ்தலங்கள் சூரிய பூஜை ஸ்தலங்களாகும்
திங்களூர் சந்திர பூஜை ஸ்தலமாகும்.
இந்தப் பேரறிஞர்களின் ஆய்வுக் குறிப்புகள் கூறும் ஸ்தலங்கள் ஆன்மீக பக்தர்களின் யாத்திரைக்கு உகந்தவை. இவையல்லாது நவக்கிரகங்களை ஆக்டிவேட் செய்பவர்க்ள் கூறும் ஸ்தலங்கள், அவர்களால் “ஆக்டிவேட்” செய்யப்படுபவையே என்று கொள்ளலாம்!
********
You must be logged in to post a comment.