ஹிந்து மதம் கூறும் நாற்பது ஸம்ஸ்காரங்கள் – 2 (Post No.6309)

ஹிந்து மதம் கூறும் நாற்பது ஸம்ஸ்காரங்கள் – 2 (Post No.6309)

WRITTEN  by S NAGARAJAN

swami_48@yahoo.com


Date: 25 April 2019


British Summer Time uploaded in London – 16-34

Post No. 6309

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஹிந்து மதம் கூறும் நாற்பது ஸம்ஸ்காரங்கள் – 2

ச.நாகராஜன்

ஒரு மனிதன் தான் எடுத்த பிறவியில் முயன்று அடைய வேண்டிய ஆத்ம குணங்கள் எட்டு. அவற்றைச் சற்று விரிவாகப் பார்ப்போம் :

1)தயை

எட்டு ஆத்ம குணங்களில் முதலாவதாக் அமைவது தயை. எல்லா உயிர்களிடத்தும அன்பு பாராட்டி அவற்றிற்கு உதவும் குணம் மிக முக்கியமான ஒன்றாகும். பிறர் துன்பப்படுகையில் வருந்தி தன்னால் இயன்றவரை உதவி செய்யும் குணம் தயை. பிறர் வருந்தும் போது தான் வருந்துவது, பிறர் சந்தோஷப்படுகையில் தான் சந்தோஷப் படுவது என்பது அற்புதமான குணமாகும். அது தான் தயை.

2)க்ஷமா

நமக்கு யாரேனும் தீங்கு இழைத்து விட்டால் அதைப் பொறுத்து மன்னிக்கும் குணம் க்ஷமா. அப்படித் தீங்கு செய்தோர் மீது கோபம் கொள்ளாமை, அவர்களைத் திட்டாமை, அவர்களுக்கு உடனே தீங்கு செய்ய எண்ணாதிருத்தல், தீங்கு செய்யாதிருத்தல் அனைத்தும் க்ஷமா. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று எண்ணி மற்றவரை மன்னித்தல் சிறந்த குணம்.

3) அநஸூயா

பொறாமைப் படாமல் இருப்பது அநஸூயா. பிறர் செல்வத்துடன் இருப்பது, பிறர் சந்தோஷத்துடன் இருப்பது, பிறர் நல்ல அதிகார பதவியில் இருப்பது என்பன போன்றவற்றைச் சகிக்காமல் தனக்கு அப்படி இல்லையே என்று மனம் பொங்கிப் புழுங்குவது பொறாமை. இதனால் தனக்கே தீங்கு தான் விளையுமே தவிர ஒரு நன்மையும் ஏற்படாது. பிறரது வளம் கண்டு வாழ்த்த வேண்டுமே தவிர மனம் பொங்காமல் புழுங்காமல் வாழ்வதே சாலச் சிறந்தது.

4)ஸௌஸம்

ஸௌஸம் என்றால் சுத்தம் என்று பொருள். உடல், வாக்கு, மனம் ஆகிய மூன்றிலும் சுத்தம் வேண்டும். உடலில் உள்ள அழுக்கை நீக்கிச் சுத்தமாக இருப்பது உடல் சுத்தம். அதை துஷ்பிரயோகம் செய்யாமல் – குடி, அதிக போகம் போன்றவற்றை விலக்கி உடலை போஷிக்க சாத்விக உணவைத் தேவையான அளவு உண்ணுதல் உடலால் அடையும் சுத்தம். பிறரை தூஷிக்காமை, பொய் சொல்லாமை, சத்யம், ஹிதம், பிரியமான சொற்களைப் பேசுவது வாக் சுத்தம். பிறருக்கு மனதாலும் தீங்கு இழைக்காமல் இருத்தல், பிறர் பொருளை அபகரிக்க எண்ணாமை மனதால் அடையும் சுத்தம். இந்த மூன்று சுத்தங்களையும் ஒருவன் அடைய வேண்டும்.

5) அனாயாஸம்

சிரமம் இல்லாமை அனாயாஸமாகும். உடலுக்கு அதிக சிரமத்தைத் தரக் கூடாது. பொருளுக்காக மிகவும் அலையக் கூடாது. பிறருக்கும் சிரமத்தைத் தரக் கூடாது. உடலை மிகமிக வருத்தி உபவாஸம் இருப்பது, உடலை வருத்திப் பயிற்சிகள் செய்வது, கை கால் தளரும் படி வேலை செய்வது, ஓயாமல் உழைத்து மனதையும் உடலையும் வருத்துவது கூடாது. இந்த சிரமத்தை அளவோடு கொள்ளுதலே நலம் பயக்கும் வாழ்வாகும்.

6) மங்களம்

அழுக்கில்லாத, சுத்தமான, ஆடம்பரம் இல்லாத, பகட்டு இல்லாத ஆடை அணிதல், நெற்றிக்குத் திலகமிட்டு எப்போதும் மலர்ச்சியுடனும் சிரித்த முகத்துடனும் காட்சி அளிப்பது மங்களமாகும். கெட்ட சொற்களை மறந்தும் கூறாமல் நெகடிவ் சொற்களை விடுத்து பாஸிடிவ் சொற்களை மட்டுமே கூறுதல், சுப சொற்களைக் கூறுதல் மங்களமாகும்.ஐயோ, ஐயையோ, எழவு, சனியனே போன்ற அபஸ்வரமான அவலமான சொற்களை ஒருபோதும் கூறக் கூடாது. அவலமான காலங்களிலும் கூட சிவ சிவா, ராம ராமா, கிருஷ்ண கிருஷ்ணா என்று கூறுவது மரபு. ஈர வேஷ்டியைத் தரிக்கக் கூடாது. அழுக்கை அப்புறப்படுத்த வேண்டும். அனாவசியமான சொற்களைப் பேசக் கூடாது. இது மங்களத்திற்கான வழி.

7)அகார்ப்பண்யம்

கார்ப்பண்யம் இல்லாதிருப்பது அகார்ப்பண்யம். அதாவது எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும். எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். ஏழ்மையிலும் பிறருக்கு உதவுவது, பிறரிடம் கை ஏந்தாமல் இருப்பது, எந்த நிலையையும் தர்ம வழியில் எதிர் கொள்வது – இது அகார்ப்பண்யம். எடுத்த இந்த ஜென்மத்தில் ஆத்ம விசாரம் செய்வது,  ஜீவனுக்கு  முடிந்த வழிகளில் எல்லாம் நன்மை தேடுவது தான் அகார்ப்பண்யம்.

8) அஸ்ப்ருஹா

ஸ்ப்ருஹை என்றால் பற்று என்று பொருள். அஸ்ப்ருஹா என்றால் பற்றில்லாமல் இருத்தல் என்று பொருள். தன் பொருளிலும் பிறர் பொருளிலும் தன் உடமையிலும் பிறர் உடமையிலும் பற்றில்லாமல் வாழ வேண்டும். அடுத்தவரைப் பார்த்து அவரிடம் உள்ள அனைத்தும் தன்னிடம் இல்லையே என ஏங்குவது, அதற்காக ஆசைப்படுவது போன்றவற்றை விடுத்துத் தனக்கென உள்ளதை போதும் என்ற மனதுடன் அனுபவித்தல் அஸ்ப்ருஹா. தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்க்கையை சுகமாக அனுபவிப்பது அஸ்ப்ருஹா.

இந்த ஆத்ம குணங்களுடன் பகவத் கீதையில் பதினாறாம் அத்தியாயத்தில் தைவீக குணங்களாக கிருஷ்ணர் கூறும் குணங்களையும் இங்கு நினைவு கூறலாம்.

பயமில்லாமை, மனத்தூய்மை, ஞான யோகத்தில் நிலையாக இருத்தல், தானம், வெளியில் உள்ள புலன்களை அடக்குதல், வேள்வி செய்தல், வேதம் ஓதுதல், தவம் புரிதல், நேர்மை, அஹிம்ஸை, சத்யம், கோபமின்மை, தியாகம், புலனடக்கம், கோள் சொல்லாமை (புறங்கூறாமை), வஞ்சகமில்லாமை, தற்பெருமையில்லாமை, இவைகள் தெய்வ ஸம்பத்தை முன்னிட்டுப் பிறந்தவனுக்கு உடன் பிறந்த குணங்களாகும்.

 இந்த குணங்கள் இல்லாதவர் இவற்றை முயன்று அடைதல் வேண்டும்.

ஆக நல்ல மனிதனாக வாழ ஹிந்து மதம் கூறும் குணங்களின் பட்டியல் மனித குலம் முழுமைக்கும் பொதுவானதாக அமைவதைக் கண்டு இன்புறலாம்.

***