
Written by London swaminathan
Date: 20 APRIL 2017
Time uploaded in London:- 21-55
Post No. 3835
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் தமிழனுக்கு நிகர் தமிழனே! தமிழ் வேதமாகிய திருக்குறள் இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. இதே போல நாலு வரிப் பாடல்களிலும் – வெண்பாக்களிலும்- அரிய பெரிய கருத்துகளைக் காணலாம். நீதி வெண்பா என்றதோர் நூலை எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை. ஆனால் நல்ல கருத்துகள் அதில் இடம்பெற்றுள்ளன.
நல்ல நண்பர்களுக்கும் கெட்ட நண்பர்களுக்கும் வேறுபாடு என்ன? அவர்களால் என்ன நேரிடும் என்ற கருத்தை விளக்க இரண்டு கதைகள் உள்ளன. நான்கு வரிகளேயுள்ள ஒரு வெண்பாவில் அந்த இரண்டு கதைகளையும் புகுத்திவிட்டார் இந்த நூலை யாத்த ஆசிரியர்.

அறிவன் பகையேனும் அன்புசேர் நட்பாம்
சிறுவன் பகையாம் செறிந்த- அறிவுடைய
வென்றி வனசரன்றான் வேதியனைக் கத்தான் முன்
கொன்றதொரு வேந்தைக் குரங்கு
–நீதிவெண்பா
பொருள்:-
முன்னொரு காலத்தில் நல்லறிவு படைத்த வேடன் (வனசரன்) ஒருவன், வேதியனை (பிராமணனைக்) காப்பாற்றினான். குரங்கு ஒரு அரசனைக் கொன்றது. அறிவுடைய ஒருவன் பகைவனானாலும் அன்போடு கூடிய நண்பனாகிவிடுவான். அறிவில்லாதவன் (சிறுவன்) நண்பனாக இருந்தாலும் பகைவனாக ஆய்விடுவான்.
பிராமணன் கதை
ஒரு வேதியனுக்கு அரசன் மாணிக்கக் கல்லைப் பரிசாகக் கொடுத்தான். அவரோ நெடுந்தொலைவு செல்ல வேண்டி இருந்தது. காட்டு வழியாக தனது சொந்த கிராமத்திற்குப் போக வேண்டி இருந்ததால் இதை இப்பொழுது விழுங்கி விடுவோம். ஊருக்குப் போய் வாந்தி எடுக்கும் மருந்தைச் சாப்பிட்டு, வெளியே எடுத்துவிடலாம் என்று எண்ணி அதை வாய்க்குள் போட்டு விழுங்கி விட்டார். இதை மரத்தின் மீதிருந்த ஒரு வேடன் பார்த்துவிட்டான். உடனே அந்தப் பிராமணனைப் பின்பற்றி நடந்து போய், நடுக்காட்டுக்கு வந்தவுடன் பிராமணனை மிரட்டி ரத்தினக் கல்லைக் கேட்டான். அந்தப் பிராமணனோ தன்னிடம் ரத்தினக் கல் எதுவும் இல்லை என்று சாதித்தான். இருவரும் மாணிக்கக் கல் பற்றி பேசியதை ஒரு வழிப்பறிக்கும்பல் கேட்டுவிட்டது
வேடனையும், வேதியனையும் தடுத்து நிறுத்தி மாணிக்கக் கல் எங்கே? என்று கேட்டனர். அவர்கள் தங்களிடம் இல்லை என்று சாதித்தனர். “ஓஹோ, அப்படியா இருவர் வயதையும் கீறிப் பார்த்துவிடுவோம் என்று பெரிய பட்டாக் கத்தியை உருவினர். உடனே அறிவும் அன்பும் மிக்க அந்த வேடன், ஐயோ பாவம்; அந்த மாணிக்கக்கல் உண்மையில் அந்த வேதியனுடையது. அதைப் பெற நான் முயற்சி செய்தது தவறு என்று ஒரு யோஜனை செய்தான்.
அந்த வழிப்பறிக் கும்பலை அணுகி, “ஐயன்மீர்! நாங்கள் நீண்ட கால நண்பர்கள் –ஆதலால் விளையாட்டாக மாணிக்கக் கல் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால் இதோ என் வயிற்றைக் கிழித்துப் பாருங்கள்; இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்; இல்லை என்றால் என் வாக்கை நம்பி அந்த நண்பனையாவது போக விடுங்கள் என்றான். இப்படிச் சொன்ன மாத்திரத்தில் கத்தியை வைத்து வேடன் வயிற்றைக் கீறினர் வழிப்பறிக் கும்பல். ஒன்றும் காணததால் அந்தப் பிராமணனை விட்டுவிட்டனர். அந்த அறிவுள்ள வேடனின் உயிர்த் தியாகத்தை மெச்சியவாறே பிராமணனும் வழிநடைப் பயணத்தைத் தொடர்ந்தான். நல்ல அறிவுள்ளவர்களருகில் இருந்தால் நன்மை கிட்டும்

குரங்கு கதை
ஒரு அரசன் ஒரு குரங்கை தனது பிள்ளைபோல வளர்த்து வந்தான். அதுவும் அரசன் என்ன செய்யச் சொன்னாலும் செய்துவிடும். ஒருமுறை அரசன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். மிகவு களைப்பாக இருந்ததால் ஒரு மரத்தடியில் தூங்கச் சென்றான் அப்போது காவலுக்காக குரங்கின் கையில் கத்தியைக் கொடுத்துவிட்டுத் தூங்கினான்.
அந்த நேரத்தில் அரசன் மீது ஒரு ஈ வந்து உட்கார்ந்தது. அரசனைக் காவல் காத்த குரங்குக்கு ஒரே கோபம். அரசன் வயிற்றில் உட்கார்ந்த ஈயை விரட்ட கத்தியால் ஓங்கி ஒரு போடு போட்டது. ஈ பறந்தோடிப் போனது; அரசனின் வயிறு இரண்டு துண்டு ஆனது. அறிவற்றவரை நண்பனாக வைத்திருந்தால் நாம் வம்பில் மாட்டிக்கொள்வோம்
சுபம்–