
தமிழ் நாழிகை வட்டில் இது போல இருந்திருக்கும்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்.1855; தேதி 10 மே 2015
எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
லண்டனில் பதிவு ஏற்றிய நேரம்- 14-53
Compiled by London swaminathan
Article No.1855; Dated 10 May 2015.
ஒரு சமுதாயம், நாகரீக வளர்ச்சியில் முன்னேறியதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? அவர்களுக்கு நேரம் ,காலம் பற்றிய அறிவும் உணர்வும் இருக்கிறதா? என்பதைக்கொண்டு கண்டுபிடிக்கலாம்.
முதலில் நேரத்தைக் காலத்தை அறிய ஒரு கருவி இருக்க வேண்டும். அதாவது கடிகாரமோ அல்லது அதற்கு இணையான மணி காட்டும் கருவியோ இருக்கவேண்டும்
இரண்டாவதாக, காலம் காட்டும் கருவி இருந்தாலும் நேரத்தின் அருமை பெருமையை உணர்ந்து அதை மதித்து நடக்க வேண்டும்.

பாரசீக நீர்க் கடிகாரம்
இந்த இரண்டும் தமிழர்களிடம் இருந்ததா? இரண்டும் இருந்தன. ஒன்றிரண்டு எடுத்துக் காட்டுகளைக் காண்போம். கிராமத்தார் பேச்சு வழக்கில் கூட ‘உச்சில’ (பகல் 12 மணி), ‘விடியல’ ( சூரிய உதயத்துக்கு முன்), ‘கருக்கல்ல’ (இரவு) என்று கொச்சைத் தமிழில் பேசிக்கொள்வார்கள்.
பிராமணச் சிறுவர்களுக்கு “காணாமல், கோணாமல், கண்டு கொடு” என்று கற்றுத் தருவார்கள். அதாவது ஒரு நாளைக்கு மூன்று முறை இறைவனைத் தொழுவதற்கு விதிக்கப்பட்டாலும் அதைச் சரியான நேரத்தில் செய்ய வேண்டும் அல்லவா? காலையில் சூரியனைக் ‘காணாமல்’, அதாவது சூரிய உதயத்துக்கு முன்னர், பகலில் நிழல் “கோணாமல்” —அதாவது உடலின் நிழல் கீழே விழாமல் இருக்கும் உச்சிப் பொழுதில், சந்தியா வந்தனம் செய்ய வேண்டும். மாலையில் ‘கண்டு’ —அதாவது சூரியன் மலை வாயில் விழுந்து மறைவதற்குள், சூரியனைக் “கண்டு” சந்தியாவந்தனம் செய்யவேண்டும் .
இவையெல்லாம் கடிகாரமின்றி சூரியனைக் கொண்டே நேரம் கணக்கிட உதவின. பெரிய அரண்மனைகளில் நாழிகைக் கணக்கர் என்போர் சரியாக நேரத்தைக் கணக்கிட்டு மணி ஓசை மூலம் அறிவித்தனர். இதற்காக அவர்களிடம் நாழிகை வட்டில் என்னும் கண்ணாடிக் குடுவை இருந்தது. நாழிகைக் கணக்கர் என்பார் பழைய பாட்டில்களைக் கூர்ந்து கவனித்து ஒரு மணிக்கு ஒரு முறை மணி அடிப்பர். இந்தக் கருவி பற்றி சங்க இலக்கியப் பாடல்கள் சொல்லும்.
சீன சூரிய ஒளி கடிகாரம்
நிழல் மூலம் நேரம் அறிய ஒரு பாடலையும் கற்பித்தனர். கருவிகளே இல்லாமல் மணியை அறிய இது உதவியது.
“காட்டுத் துரும்பெடுத்துக்
கண்டம் பதினாறாக்கி
நீடிக் கடந்தது போக
நின்றது நாழிகை”
ஒரு நீளமான வைக்கோல் அல்லது கயிறு அல்லது ஓலையை எடுத்துக் கொண்டு அதில் 16 விரல் அளவு எடுத்துக் கொள்ளவேண்டும். மீதிப் பகுதியை வெட்டி எறிந்து விட்டு 16 விரல்கடை துரும்பை (கயிறு/ஓலை/வைக்கோல்) இரு பாகமாக்கி மடித்து, வெய்யிலில் ஒரு பகுதியின் நிழல் ஏற்படுமாறு உயர்த்திப் பிடிக்கவேண்டும். நிற்கும் பாகத்தின் நிழல் கீழேயுள்ள பகுதியின் நுனியோடு பொருந்தும் வகையில் நிறுத்த வேண்டும். இதற்கு தேவையான அளவைவிட மிச்சப் பகுதி உங்கள் கையில் இருக்கும். அது எத்தனை விரல் அளவு இருக்கிறது என்பதை அளந்து, அத்தனை நாழிகை நேரம் என்று சொல்லலாம்.
அதாவது காலையில் இப்படி எடுத்தால் சூரியன் உதித்து இத்தனை நாழிகை ஆயிற்று எனலாம். மாலையில் பயன்படுத்தினால், சூரியன் மறைய இன்னும் இத்தனை நாழிகை என்று சொல்ல வேண்டும். ஒரு நாழிகை என்பது 24 நிமிடம். ஒரு நாளைக்கு 60 நாழிகைகள். தமிழ் நாட்டில் வசிப்போருக்கு பொதுவாக சூரிய உதயம் காலை 6-30 மணி.
எ.கா.மாலையில் நின்ற பாகத்தின் அளவு ஏழரை விரல் அளவு.அப்படியானால் சூரியன் மறைய இன்னும் ஏழரை நாழிகை (7.5×24=180 நிமிடம்= 3 மணி நேரம்)
இன்னொரு முறை
சூரியனுக்கு முதுகைக் கட்டி நிற்க.தலையின் உச்சி நிழல் எங்கே விழுகிறதோ அங்கே ஒரு கோடு கிழித்தோ, ஒரு கல்லை வைத்தோ அடையாளம் செய்க. உங்கள் கால்கலைப் பய்ன்படுத்தி எத்தனை அடி (காலடி) என்று அளக்க. அந்த எண்ணுடன் 11ஐக் கூட்டுக. அனத எண்ணை 210ல் வகுக்கவும். இதில் வரும் ஈவு எண் (காலை நேரமானால்) உதயத்துக்குப் பின் உள்ள நாழிகை, அல்லது அஸ்தமனத்துக்கு முன் உள்ள நாழிகை (மாலை நேரமானால்).
எ.கா. நிழல் அளவு 31; 31+11+42
210/42=5; ஐந்து நாழிகை (5×24=120 நிமிடம்=2 மணி நேரம்)
எகிப்திய தண்ணீர்க் கடிகாரம்
இரவு நேரம்
இரவு நேரத்தில் சந்திரன் அல்லது நட்சத்திரங்களைக் கொண்டு நேரம் அறியலாம். ஆனால் இதற்கு நமக்கு முக்கிய நட்சத்திரங்கள் பற்றிய அறிவு வேண்டும். நிலவு, நட்சத்திரங்கள் ஆகியன ஒவ்வொரு நாளும் உதயமாகும் நேரம் குறிப்பிட்ட இடைவெளியில் தள்ளிக் கொண்டே போகும். இதைவைத்து நேரம் அறியலாம். இது பற்றி தனியே எழுதுகிறேன்.
நாழிகை வட்டில் (மதுரைக் காஞ்சி, வரி 671)
இது நாழிகை அளவைத் தெரிவிக்கும் கருவி. இது மெல்லிய தகட்டால் கிண்ணம் போல குழிந்து இருக்கும். அதில் ஊசி முனைத் துவாரம் இருக்கும். நீரில் மிதக்கவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உள்ளே வரும். அது நிறைந்தவுடன் மூழ்கும். அதற்கு ஆகும் நேரம் ஒரு நாழிகை (24 நிமிடம்).
![]()
மேலை நாடுகளில் இரண்டாகப் பிரிக்கப்பட்ட கண்ணாடிக் குடுவைகள் (Hour Glass) ஒன்றில் மணல் இருக்கும் அந்த மணல் கீழேயுள்ள குடுவையில் சேர்ந்தால் அரை மணி அல்லது ஒரு மணி என்று கணக்கிடுவர். உடனே அதைத் தலை கீழாகத் திருப்பி வைப்பர்.
சீன தண்ணீர்க் கடிகாரம்
-சுபம்-




You must be logged in to post a comment.