முருகனைப் புகழ்ந்த பிரிட்டிஷ் ராணுவ தளபதி ! (Post No.7380)

Written by lodon swaminathan

Post No.7380

Date uploaded in London – 25-12-2019

Swami_48@yahoo.com

Pictures  are taken by London swaminathan

லண்டனில் டிசம்பர் 23ம் தேதி (2312-2019) சைவ ஆகம ஆய்வரங்கமும் ,ரௌரவ ஆகம புஸ்தக வெளியீடும் நடந்தது. லண்டன் ஸ்ரீ முருகன் கோவிலில் நடந்த

இந்த நிகழ்ச்சிக்கு கோவிலின் தலைமை குருக்களும் ஐரோப்பா முழுதும் புகழ்பெற்றவருமான திரு நாகநாத சிவம் தலைமை தாங்கினார். வேத ஆகம அகாடமி நிறுவனரும், உலக இந்து மகா சங்க ட்ரஸ்டியுமான திரு.கல்யாண சுந்தர குருக்கள் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியின் முக்கியத்வத்தை விளக்கினார். அண்மையில் சென்னையில் காஞ்சி சங்கராச் சார்ய சுவாமிகளைச்  சந்தித்தபோது வெளிநாடு வாழ் குழந்தைகளுக்கு வேதம் , புராண, இதிஹாசம் ஆகியவற்றோடு நல்ல கடவுள் துதிகளைக் சொல்லித் தரும்படி சொன்னதாகவும் அதை அகாடமி செய்து வருவதாகவும் சொன்னார்.

இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ கல்பகா, வேதாகம அகாடமி, சைவ வேதாகம ட்ரஸ்ட், உலக இந்து மகா சங்கம் இணைந்து நடத்தின.

திருமதிகள் கீதா கல்யாண சுந்தரம், ஸ்ரீதேவி சந்திரசேகரன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தனர். அகாடமியில் வேதம் பயிலும் மாணவர்கள் இறைவணக்கம் பாடினர்

தலைமை உரையில் திரு நாகநாத சிவம் பல சுவையான சம்பவங்களை எடுத்துரைத்தார்.

“நாங்கள் ஆண்டுதோறும்  பிரிட்டிஷ் ராணுவத்தின் அழைப்பின்பேரில் ராணுவ தலைமை அலுவலகத்துக்குச்

சென்று பிரார்த்தனை செய்வோம். நாங்களும் அவர்களைக் கோவிலுக்கு அழைப்போம். பிரிட்டிஷ் ராணுவத்தின் தலைமை தளபதி (ஆங்கிலேயர்) கோவிலுக்கு வருகை தந்தார். பிரதான சந்நிதியில் உள்ள முருகனைப் பற்றி வினவியபோது அவர்தான் இந்து சேனாதிபதி, ராணுவத்தின் கமாண்டர் இந் ஸீFப்  Commander in Chief என்று சொன்னேன்.

உடனே அவர் மகிழ்ந்து, உளம் குளிர்ந்து He is our man ‘ஹீ இஸ் அவர் மேன்’ – அவர் நம்ம ஆளு — என்று செப்பினார். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் நாம்  புராணக் கதைகளைச்  சொல்லுவதற்கு முன்னர், இக்கால மக்களுக்கு புரியுமாறு நாம் சொல்ல வேண்டும். கோவிலுக்கு இளைஞர்கள் வருவார்கள். இந்த சாமிகள்  (deities) யாரு?  என்று வினவுவர். நன் உடனேயே எத்தனை சாமிகள் இருக்கு? என்று கேட்பேன். அவர்கள் மூன்று என்பர். அவர்கள் தான்  இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி Thinking, Planning, and Doing (திங்கிங், பிளானிங், அண்ட் டூயிங்) என்பதன் அடையாளம் என்பேன். உடனே அவர்களுக்கு ஆர்வம் பிறக்கும் . காலத்துக்கு ஏற்றபடி நாம் இளைஞர்ளுக்குக் கற்பித்தல் அவசியம். மேலும் அவர் பேசுகையில் வேத, ஆகம ,திருமுறைகளை பிரித்து பார்க்க முடியாது. அண்மையில் சிவபதம் சேர்ந்த காலஞ்சென்ற தருமை ஆதீனகர்த்தர் அழகாக வரிசைப் படுத்துவார் .வேத, ஆகம, சாஸ்திர, திருமுறை என்பதில் முதலில் உள்ளதை அடுத்தது குறிப்பிடும். இதிலிருந்தே அதன் வரிசை  ஏற்றுக்கொள்வது புரிபடும் என்றார் . நகைச்  சுவை ததும்பப் பேசுகையில் கிறிஸ்தவர்கள் இன்று நாம் பயன்படுத்தும் வேத , ஆகம சொற்களை பயன்படுத்தி த்வஜ ஸ்தம்பம், உற்சவம் வரை வந்துவிட்டனர். ஆகையால் நம்மவர்களுக்கு சரியான பொருளைக் கற்பிப்பது இன்றியமையாத தேவை என்றார் . திரு கல்யாண சுந்தரம் ஆற்றிவரும் இடையறாத சேவையைக் குறிப்பிட்டு அவர் வெளியிடும் நூல்களை வாங்கி ஆதரவு தரவேண்டும் என்றார் . அண்மையில் வெளியான ருத்ராக்ஷ மஹிமை என்னும் நூல் அரிய பெரிய விஷயங்களை எடுத்து இயம்புவதையும் சுட்டிக்காட்டினார்.

திரு. வசந்தன் குருக்கள் எதையும் நகைச்சுவை ததும்ப எடுத்துரைப்பதில் வல்லவர். அவர் தனக்கே உரிய பாணியில் ஆறு அத்வாக்களின் (ஷடாத்வா)  சிறப்புகளை விளக்கினார். அத்வா என்பது வழி , வழிமுறை எனப்பொருள் படும். இவை கும்பாபிஷேகம் மட்டுமின்றி அன்றாடச் சடங்குகளிலும் இடம்பெறுகின்றன. யாக யக்ஞங்களிலும் ‘அத்வர்யு’ என்பவர் வழிநடத்துவத்தைக் காண்கிறோம். சைவ சித்த்தாந்தம் என்ற பதமே அதுதான் “முடிவு, துணிபு” என்பதை ‘சித்தாந்தம்’ என்ற சொல் மூலம் காட்டும். ஆதற்கு மேல் எதுவும் இல்லை என்றார் . மந்திரம், பதம், வர்ணம் என்பதை சொல்லி, சொல்லுக்கு மேல் எதுவுமிலை , இறைவனையே நாம் ‘சொற்றுணை வேதியன்’ – சொல்லுக்குத் துணையானவர் என்போம் என்றார் . பஞ்ச பிரம்மம், ஷடங்க மந்திரம் ஆகிய 11-ன் சிறப்பை விளக்கிவிட்டு நியாசம் முதலியாவற்றையும் விளக்கினார். திருமந்திரத்தில் ஒரே பாட்டில் திருமூலர் தத்துவம் 36 முதலியனவற்றை அற்புதமாகப் பாடியிருப்பதை விளக்கினார். தத்துவம் இன்றி இறைவன் இல்லை. தத்துவம் இல்லாத இடத்துக்கு கடவுள் வருவதில்லை என்று சொல்லி முடித்தார்.

பர்மிங்ஹாம் நகரிலிருந்து வந்த காஞ்சிபுரம் திரு சந்திர சேகர குருக்கள் ‘சிவ தீக்ஷை’ பற்றி மிக விரிவாகப் பேசினார். சிவ தீக்ஷை பெறுவது எல்லா வர்ணத்தாருக்கும் பொதுவானது. இது மிகவும் விரிவானது. இதைப் பெற்ற பின்னர்தான் சிவாசார்யர்களுக்கு தகுதி வருகிறது. மற்ற பண்டிதர்களைப்  போலப் பயப்படாமல் எல்லோரையும் கைதூக்கி விடும் தன்மை  வருகிறது. சிவ தீக்ஷை பெற்றோருக்கு அச்சம் என்பதே இல்லை.

சிவ நாம உச்சாடனம் அவர்களுக்கு சக்தி அளிக்கிறது. வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா விஷயங்களையும் கற்று தருவது  இது. கடவுளுக்கு உஷத் காலம் முதல் பள்ளியறை  தீபாராதனை வரை நாம் செய்யும் சடங்குகள் நமக்கு பல விஷயங்களைக் கற்பிக்க ஏற்படுத்தப்பட்டவை. எடுத்துக் காட்டாக பள்ளியறையில் எந்தக் காலத்தில் இறைவன் இறைவிக்கு எந்த விதமான கட்டில்  அமைக்க வேண்டும் என்பதைக் கூட ஆகமங்கள் கற்பிக்கின்றன. உஷத் காலமான மார்கழியில் துவங்கி விளக்கு ஏற்றும்  கார்த்திகையில் எல்லாம் முடிவது சிறப்பானது. பல் தேய்ப்பது எப்படி எனபது முதல், மீண்டும் பிறவாமை வேண்டும் என்ற நிலை வரை அறிய உதவுவது தீக்ஷை முறை. சாயுஜ்ஜிய நிலையை அடைய உதவுவது. இதில் குருவுக்கு மிகவும் முக்கியத்துவம் தருகிறார்கள். குருவுக்குப் பணி விடை செய்து திருப்தி செய்யவேண்டும் லிங்கம், அக்கினி, கலசம் முதலிய 4 ரூபங்களில் இறைவன் வெளிப்படுகிறார். பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்காகவும் ஒரு பூணுல் அணியும் வழக்கம் இருக்கிறது. அவர்களுடைய  மேம்பாட்டுக்கும் கணவன் இதன்முலம் உதவுகிறான். தீட்சைகள் நயன, ஸ்பர்ச, வாசக பாவனா, சாஸ்திர, யோக என்று பல வகைப்படும் என்று விரிவாக உரையாற்றினார் .

சென்னையிலிருந்து வந்த வேத பண்டிதர் திரு ராம் சாஸ்திரிகள் உரையாற்றுகையில் வேத ஆகம மந்திர தொடர்புகளை எடுத்துக் காட்டினார். மார்ச் மாதம் வரை  லண்டனில் இருப்பதால் முருகன் கோவிலில் வேத வகுப்புகளை நடத்தி சூக்தங்கள் முதலியவற்றைக் கற்பித்து இப்போது உதக சாந்தி பற்றி வகுப்பு நடத்துவதாகவும் அனைவரும் இதை பயன்படுத்தி பயனுற வேண்டும் என்றும் வேண்டினார். சந்துரு குருக்கள் சொன்ன சிவதீட் சைக்கு அபர காரியங்களிலும் எவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை எடுத்துக் காட்டினார்.

வெளிநாட்டில் செய்யும் சிரார்த்தங்களுக்குப் பலன் உண்டா என்று ஒருவர தன்னிடம் கேட்டதாகவும் கட்டாயம் உண்டு. காலதேச வர்த்தமானத்தை அனுசரித்தே பலவகை சிரார்த்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. எங்கு அழைத்தாலும் அங்கு வந்து ஆசி வழங்குவோம் என்று பித்ருக்கள் சொல்கின்றனர். அவர்களை நினைத்து ஓ என்னு கதறும் இடத்துக்குக் கூட அவர்கள் வந்து ஆசி வழங்குவர் என்றும் ராம்  சாஸ்திரிகள் குறிப்பிட்டார்.

உடல் நலம் சரியில்லாதபோதும் கருமமே கண்ணாயினார் என்ற பொன்மொழிக்கேற்ப வந்திருந்த திரு கமலநாத குருக்கள் ஒரு சிற்றுரை ஆற்றினார். சிவகாம பத்ததிகள் என்ற தலைப்பில் பேசிய அவர் ஆபஸ்தம்ப சூத்திரம், சதபத பிராஹ்மணம் முதலியவற்றை எடுத்துக்காட்டி பெண்கள் சொல்வதையும் கருத்திற்கொள்க  என்பதை சூத்ரகாரர்கள் வலியுறுத்துவதை மேற்கோள் காட்டினார். 18 பத்ததிகள் தந்த சிவாகம மரபுகள் பற்றி பின்னொரு கருத்தரங்கில் விளக்குவதாவும் சொன்னார்.

பேச்சாளர்கள் அனைவரும், சிறுவர்களும் இளைஞர்களும் இந்த கருத்தரங்கு விஷயங்களை உன்னிப்பாகக் கேட்பது மகிழ்ச்சிக்குரியது என்று உரைத்தனர் .

திரு. கல்யாண சுந்தர குருக்கள் நன்றி உரையில் 28 ஆகமங்களின்  சிறப்பு 18 பத்ததிகளின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லி, இது போன்ற கருத்தரங்குகளுக்கு ஆதரவு பெருகிவருகிறது என்றார். சிறுவர்கள் அதிக ஈடுபாட்டுடன் துதிகளைக் கற்பதை பாராட்டினார். வந்திருந்த சிவாச்சாரியார்கள் அனைவருக்கும் சிறப்பு விருதுகள் வழங்கி பொன்னாடை போர்த்துவித்தார். லம்போதர குருக்கள், கோபி குருக்கள் முதலானோர் அவருக்கு உறுதுணையாக நின்று நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர். ரௌரவ ஆகம நூல் வெளியீட்டுடன் விழா நிறைவு பெற்றது. திரு. நாகநாத சிவம் எல்லோருக்கும் புதிய நூலை அளித்தார்.

Tags –   சைவ ஆகம கருத்தரங்கு, ரௌரவ ஆகமம், நூல் வெளியீட்டு விழா  

–subham–