DONT REBLOG IT AT LEAST FOR A WEEK. DONT USE PICTURES.
Compiled by S NAGARAJAN
Date: 16th September 2015
Post No: 2162
Time uploaded in London :– 8-20 am
(Thanks for the pictures)
ச.நாகராஜன் நீலகண்ட தீக்ஷிதரின் கலி விடம்பனா பாடல்களில் நையாண்டிப் பாடல்கள் தனி ரகம். அதைப் பாட தனித் திறமை வேண்டும். கூடவே தைரியமும் வேண்டும்.ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும் அபரிமிதமாக இருக்கும் போது இப்படிப்பட்ட பாடல்களை இயற்றுவது சுலபமான விஷயம்.ஆனால் பழைய கால மன்னர் ஆட்சியில் இப்படிப்பட்ட கவிதைகளை ஒருவர் இயற்றியுள்ளார் என்றால் அது ஆச்சரியமான விஷயம் தானே.17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நீலகண்ட தீக்ஷிதர் அற்புதமான கலி விடம்பனா என்ற நூலை இயற்றியுள்ளார். நூறு பாடல்களைக் கொண்ட இதில் நையாண்டிக்குப் பஞ்சமே இல்லை. (சில பிரதிகளில் 102 பாடல்களும் உள்ளன)இவர் மதுரையில் திருமலை நாயக்கர் அரசவையில் மந்திரியாக இருந்தவர். (இவரைப் பற்றி எனது சம்ஸ்கிருதச் செல்வம் தொடரில் நான்காம் அத்தியாயத்தில் படித்திருப்பதை இங்கு நினைவு கூரலாம்) நையாண்டிப் பாடல்கள் ஜோதிடர், மருத்துவர், கவிஞர், மனைவியின் பிறந்தக உறவினர் என்று அனைவருமே இவரது பாடல்களுக்குத் தப்பவில்லை.சில நையாண்டிப் பாடல்கள் இதோ:- आयुस्प्रश्ने दीर्घमायुर्वाच्यं मौहूर्तिकैर्जनैस् ।जीवन्तो बहुमन्यन्ते मृताः प्रक्ष्यन्ति कं पुनस् ॥ १६ ॥
ஜோதிடர் ஒருவரிடம் ஒருவர் தன் வாழ்நாளைப் பற்றி ஜோதிடம் கேட்டால், அவர் நீண்ட நாள் வாழ்வார் என்று சொல்ல வேண்டும். அவர் நீண்ட நாள் வாழ்ந்தால் ஜோதிடரைப் பற்றி உயர்வாக நினைப்பார். அவர் செத்து விட்டாலோ கேள்வி கேட்க அவர் உயிருடன் இருந்தால் தானே! (பாடல் 16)
भैषज्यं तु यथाकामं पथ्यं तु कठिनं वदेत् ।आरोग्यं वैद्यमाहात्म्यादन्यथात्वमपथ्यतस् ॥ २५ ॥
ஒரு மருத்துவர் தனது இஷ்டம் போல தனது நோயாளிக்கு மருந்து கொடுக்கலாம். ஆனால் உணவை எப்படி உட்கொள்ள வேண்டும் எதையெல்லாம் சாப்பிடலாம், எதையெல்லாம் சாப்பிடக் கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளையும் கூடவே சொல்லி விட வேண்டும். நோயாளி ஒரு வேளை குணமாகி விட்டால் அதற்கான புகழை மருத்துவரின் திறமையே காரணம் என்று சொல்லிப் பெற முடியும். ஒருவேளை நோயாளி குணமடையாவிட்டால் அவர் சொன்னபடி பத்தியமாக இருக்க வில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம்! (பாடல் 25)
लिप्समानेषु वैद्येषु चिरादासाद्य रोगिणम् ।दायादाः संप्ररोहन्ति दैवज्ञा मान्त्रिका अपि ॥ २९ ॥
ஒரு மருத்துவர் தொடர்ந்து தன்னிடம் சிகிச்சை பெறும் நீடித்த நோயுடைய ஒருவரிடமிருந்து பணம் பெற நினைக்கும் போது அவர் இன்னும் இரண்டு பேரை நோயாளியிடமிருந்து பண வசூல் செய்வதைப் பார்ப்பார். ஒருவர் ஜோதிடர். இன்னொருவர் மந்திரவாதி! (பாடல் 29)
स्तुतं स्तुवन्ति कवयो न स्वतो गुणदर्शिनस् ।कीतः कश्चिदलिर्नाम कियती तत्र वर्णना ॥ ३५ ॥
ஒரு கவிஞர் தனது சொந்த கவித்வம் இல்லாமல், பல விஷயங்களைப் பற்றி தனக்கு முன்னால் இருந்த கவிஞர்களால் வர்ணிக்கப்பட்டவற்றையே வர்ணிப்பார். தேனீ என்ற ஒரு பூச்சி வகை இருக்கிறதல்லவா! அதைப் பற்றித் தான் எவ்வளவு பிரம்மாண்டமான விவரங்களைப் பார்க்க முடிகிறது! (பாடல் 35)
गृहिणी भगिनी तस्याः श्वशुरौ श्याल इत्यपि ।प्राणिनां कलिना सृष्टाः पञ्च प्राणा इमेऽपरे ॥ ४१ ॥
இந்தக் கலியுகத்தில் வாழ்வை நீட்டிக்கும் ஐந்து பிராண சக்திகள் – மனைவி, மனைவியின் சகோதரி, மனைவியின் சகோதரர், அவளது பெற்றோர் ஆவர் (பாடல் 41)
ज्ञातेयं ज्ञानहीनत्वं पिशुनत्वं दरिद्रता ।मिलन्ति यदि चत्वारि तद्दिशेऽपि नमो नमस् ॥ ९७ ॥ உறவினர்கள், ஞானஹீனர்கள், வம்பு பேசுபவர்கள், தரித்திர நிலையில் உள்ளவர்கள், ஆகிய இந்த நால்வரின் கூட்டு இருக்கும் திசைக்கே நமஸ்காரம் நமஸ்காரம். (பாடல் 97)
நூறு பாடல்களையும் படித்தால் அது எந்தக் காலத்திற்கும் பொருந்துவதாக இருப்பதைக் கண்டு வியக்கலாம்.
சம்ஸ்கிருதத்தில் பாடலைப் பார்க்க விரும்புவோர் https://docs.google.com/viewer?url=http://www.sanskritworld.in/public/assets/book/book_50dd30263ad34.txt
என்ற தளத்தை அணுகலாம்.
ஆங்கில மொழிபெயர்ப்புடன் கலி விடம்பனாவைப் படிக்க விரும்புவோர் http://www.vidyavrikshah.org/literature/kalividambana/kalint.html என்ற தளத்தை அணுகலாம். நன்றி கூறலாம்.
*********


You must be logged in to post a comment.