சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்
- எவ்வழி உலகம் அவ்வழியே அனைவரின் வழியும்!
ஆய்வுக்கட்டுரை எண்: 1646; தேதி 13 பிப்ரவரி 2015
எழுதியவர் ச.நாகராஜன்
நியாயங்களைத் தொகுக்கப் போனால், தொகுப்பானது சுமார் 900 நியாயங்களையும் தாண்டி விடும். பல்வேறு நூல்களில் மேற்கோள்களாக எடுக்கப்பட்டவைகளைத் தொகுத்தாலோ அது ஒரு பெரிய நூலாக ஆகி விடும். மேலும் சில முக்கியமான நியாயங்களை
ப் பார்ப்போம்:-
खलमैत्रीन्यायः
khalamaitri nyayah
கலமைத்ரி நியாயம்
மைத்ரி – நட்பு
ஒரு வில்லனை- அயோக்கியனை- நண்பனாகக் கொள்வது பற்றிய நியாயம் இது.
ஒரு அயோக்கியனின் நட்பு ஆரம்பத்தில் பிரமாதமாக இருக்கும். போகப்போக அதன் தீவிரம் குறைவு படும். ஒரு கெட்டவனின் சிநேகம் மண்ணாங்கட்டி போல நம்புதற்கு உரியது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட வரும் நியாயம் இது.
தேய் பிறை நிலவின் படம்
திருக்குறளில் இதே கருத்தைக் காணலாம்:
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு – திருக்குறள் 782
நாலடியாரில் 125 பாடல் இதனுடன் ஒப்பு நோக்குதற்கு உரியது:
“பெரியவர் கேண்மை பிறை போல நாளும்,
வரிசை வரிசையா நந்தும் – வரிசையால்
வான் ஊர் மதியம் போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு” – நாலடியார் பாடல் 125
खलेकपोतन्यायः
khalekapota nyayah
கலேகபோத நியாயம்
தானியக்களஞ்சியமும் புறாக்களும் என்ற நியாயம் இது.
ஒரு தானியக் களஞ்சியம் இருந்தது. பெரிய புறாக்களும் குஞ்சுப் புறாக்களும் அங்கு சென்று வேண்டியபோதெல்லாம் வயிறு முட்ட தானியங்களைச் சாப்பிட்டுக் காலம் கழித்தன.அதன் அடிப்படையில் எழுந்த நியாயம் இது.
ஆக இது போல நல்ல மனமுடைய ஒரு பெரும் தனவந்தன் இருந்தால் அவனை அண்டி தங்கள் தேவைகளை ஏழை எளியோர் பூர்த்தி செய்து கொள்வர்.
அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் சொல்லப்படும் நியாயம் இது..
.
விளாம் பழம்
गजभुक्तकपित्थन्यायः
gajabhuktakapittha nyayah
கஜபுக்தகபித்த நியாயம்
கஜம் – யானை கபித்தம் – விளாம்பழம்
யானை சாப்பிட்ட விளாம்பழ நியாயம் இது.
யானை சாப்பிட்ட விளாம்பழக் கதை அனைவரும் அறிந்த ஒன்று தான். யானை விளாம்பழத்தைச் சாப்பிட்டால் அது உள்ளே இருக்கின்ற பழத்தைச் சாப்பிட்டு விடும். ஆனால் வெளியே பார்த்தால் ஓட்டுடன் பழம் முழுவதுமாக அப்படியே இருக்கும். ஆகவே யானை சாப்பிட்ட விளாம்பழம் போல என்ற பழமொழி வழக்கில் உள்ளது.
பார்வைக்குப் பெரிதாகத் தோன்றும் ஒருவன் உள்ளீடற்று இருக்கும் போது, இந்த நியாயத்தைச் சொல்லி அவன் சுட்டிக் காட்டப்படுகிறான்.
गतानुगतिको लोकःन्यायः
gatanugatiko lokah nyayah
கதானுகதிகோ லோக: நியாயம்
குருட்டுத்தனமாக ஒரு விஷயத்தைப் பின்பற்றுவதைக் குறிக்கும் நியாயம் இது.
ஒரு லேடஸ்ட் ஃபாஷன் சிலரால் பின்பற்றப்படுகிறது என்றால் ஏன், எதற்கு என்றெல்லாம் தெரியாமல் அதை அப்படியே குருட்டுத்தனமாகப் பின்பற்றுவது உலக வழக்கமாகி விட்டது. அது சரியா தவறா என்ற ஆராய்ச்சியெல்லாம் எழுவதில்லை. உலகம் எவ்வழி அவ்வழி நம் வழி என்ற நிலைப்பாடில் எழும் நியாயம் இது. லோகம் என்ன செய்கிறதோ அதை அனுசரி என்ற இந்த நியாயத்தைச் சாதாரணமாக அன்றாட வாழ்க்கையில் பார்க்கிறோம்!
குருடன் குருடனைப் பின்பற்றுதல்
गोबलीवर्दन्यायः
gobalivarda nyayah
கோபலிவர்த நியாயம்
பசு மந்தையும் காளையும் என்னும் நியாயம் இது.
சாதாரணமாக பசு என்ற வார்த்தை இலக்கண ரீதியாக ஆண் மாட்டையும் குறிக்கும்; பெண் மாட்டையும் குறிக்கும். ஆனால் பசு என்றால் பெண் மாட்டையே நாம் குறிப்பிடுகிறோம். ஆண் மாட்டை காளை என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறோம்.
இதே போல ஒரு வார்த்தையை நாம் வழக்கில் ஒத்துக் கொண்டாலும் கூட அது எதை நிஜமான பொருளாகக் கொண்டிருக்கிறதோ அந்தப் பொருளால் வழங்கப்படுவதில்லை.
இது போன்ற தகுந்த சந்தர்ப்பத்தில் இந்த நியாயம் கையாளப்படுகிறது.
பசுவும் காளையும் படம்
***************








You must be logged in to post a comment.