Research paper No 1957
Written by London swaminathan
Date: 27 June 2015
Uploaded in London at 14-24
ரிக் வேதம் உலகின் மிகப் பழைய நூல்; இப்போது அமெரிக்கவிலுள்ள இந்து மத எதிரிகளும் இதன் நான்கு மண்டலங்களுக்கு கி.மு 1700 என்று தேதி குறித்துள்ளனர். ரிக் வேதத்தில் மொத்தம் பத்து மண்டலங்கள். இன்னும் சிறிது காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகரும் ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் சொன்னது போல ரிக்வேதம் 6000 ஆண்டுப் பழமையானது (கி.மு4000) என்று உலகம் ஒப்புக்கொள்ளும். அதாவது சிந்து சமவெளி நாகரீகத்துக்கும் முந்தையது! ஏனெனில் இதுவரை யாரும் மறுக்கவொணாத வானியல் குறிப்புகள் ரிக் வேதத்தில் உள்ளன. நிற்க.
ரிக்வேதத்தில் ஏராளமான மர்மங்கள் உள்ளன. எட்டாவது மண்டலம் முழுதும் ஈரான் நாட்டு (பாரசீகம்) அரசர் பற்றிய அதிசயக் குறிப்புகள், ஒட்டகங்களைப் பரிசு கொடுத்தது முதலிய விஷயங்கள் இருக்கின்றன. இதே போல ரிக் வேதத்திலும் பிற்கால வேத இலக்கியங்களான பிராமணங்கள், உபநிஷத்துக்களிலும் அடிக்கடி வரும் பஞ்ச ஜனாஹா — “ஐந்து மக்கள் குழு” யார் என்று இன்னும் முடிவகத் தெரியவில்லை.
ரிக்வேதத்துக்குக் குறைந்தது 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த சங்க தமிழ் இலக்கியத்துக்கே நச்சினார்க்கினியர் போன்ற உரையில்லாவிடில் பொருள் புரியாது. அதற்கு 500 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த திருக்குறளுக்கும் பரிமேலழகர் உரையின்றி பொருள் புரிவதில்லை.
இதே போல வடக்கில் வியாசர் என்ற ஒரு மகரிஷி நமக்கு வேதங்களைத் தொகுத்து, நான்காக வகுத்து, நான்கு சீடர்களை அழைத்து, பெரிய “அட்மினிஸ்ட்ரேட்டர்” போல செயல்பட்டிராவிடில் நமக்கு வேதங்கள் கிடைத்திரா!
வெளிநாட்டு அறிஞர்களுக்கு வேதங்கள் பற்றிப் புரிவதில்லை. ஏனெனில் அவர்கள் இந்த கலாசாரத்தில் ஊன்றியவர்களும் இல்லை. இதைப் போற்றும் நோக்கத்தோடு அதைப் படிக்கவுமில்லை தனி நபர் ஒழுக்கமும் அவர்களிட மில்லை. சுருக்கமாகச் சொன்னால்,இப்போது தமிழ்நாட்டில் ஒழுக்கங்கெட்ட பகுத்தறிவுத் திராவிடங்களும், ஜாதிக் கட்சித் தலைவர்களும் திருவள்ளுவர் குரல்(குறள்)வளையை தினமும் நெரித்து அவரை சித்திரவதை செய்வதைப் போன்றதுதான் இது.
பஞ்ச ஜனா: யார்?
யாஸ்கர் என்பவர் கி.மு 850-ல், அதாவது கிரேக்கர்கள் எழுதத் துவங்கியதற்கு முன், வாழ்ந்தவர். உலகில் முதல் சொல் ஆராய்ச்சி செய்து “லிங்குஸ்டிக்ஸ்” – என்னும் மொழியியல் ஆராய்ச்சியைத் துவக்கிவைத்தவர். அவர் சொல்கிறார்:– தேவர்கள், கந்தர்வர்கள், பித்ருக்கள் (உயிர்நீத்தார்), அசுரர்கள், ராக்ஷசர்கள் என்று.
நமக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாயணர் என்பவர், துணிச்சலாக வேதத்துக்குப் பொருள் எழுதினார். ஆனால் இதற்குள் வேதம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டதால், இந்துமத தலைவர்களே சாயணரின் உரையை அவ்வளவு பாராட்டுவதில்லை. மேலும் உலகில் முதல் முதல் மொழியியல் புத்தகத்தை எழுதிய யாஸ்கரே தனக்கு 600 சொற்களுக்கு பொருள் விளங்கவில்லை என்று 2850 ஆண்டுகளுக்கு முன்னரே திணறியிருக்கிறார் (காண்க அரவிந்தரின் வேதச் சொல்லடைவு).
அந்த சாயணர் சொல்கிறார்:
இது, நால் வருணத்தினரையும் புறம்பாக இருந்த நிஷாதர்களையும் குறிக்கும் என்று.
வேதத்தின் துதிப்பாடல்களைத் தொடர்ந்து எழுந்தது பிராமணங்கள் என்னும் நூல். அதற்குப் பின்னர் ஆரண்யகங்கள், உபநிஷத்துகள் வந்தன. ஐதரேய பிராமணம் என்னும் நூல், பஞ்ச ஜனா: என்பது தேவர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள்/அப்சரஸ்கள், நாகர்கள், பித்ருக்கள் (நீத்தார்) என்று மொழிகிறது. ( விசர்கம் : வந்தால் அதற்கு முன்னுள்ள ஒலியை நீட்டிச் சொல்ல வேண்டும்; ஜனா: = ஜனாஹா)
(கந்தர்வர்களை சிந்து சம்வெளி மக்களுடன் தொடர்புபடுத்தி இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளேன்)
வழக்கம்போல, வெள்ளைக்காரர்கள் நவக்கிரகங்கள் போல, பல திசைகளைப் பார்த்து நின்றுகொண்டு, பல்வேறு கருத்துக்களைப் பகர்வர். எங்கெங்கெல் லாம் முடியுமோ அங்கெங்கெல்லாம் ஆரிய-திராவிட இனவெறி விஷ விதைகளை ஊன்றுவர். இந்த தொனியில், கெல்ட்னர், ராத் ஆகிய இருவரும் சொல்வது யாதெனின் “இது உலகின் நான்கு மூலையில் வசிக்கும் மக்களையும், அதற்கு நடு நாயகமாக விளங்கும் ஆரியரையும் குறிப்பதாகும்.”
இதற்கு மறுப்பு விடுக்கும் ஸிம்மர் என்பார், ஆரியர்கள்- தாசர்கள் என்று பிரித்துப் பேசும் மக்கள்; அவர்கள் இப்படி உலகையே வளைத்துச் சொல்லியிருக்க முடியாது. இது அனு, புரு, த்ருஹ்யு, துர்வாசு, யது என்ற ஐந்து குலங்களையே குறிக்கும் என்பார். இதற்கு ஆதரவாக ரிக்வேதத்தில் இந்த ஐந்து இன மக்களையும் சேர்த்துக் குறிப்பிடும் இரண்டு துதிப்பாடல்களை எடுத்துக் காட்டுவார்.
அவருக்கு மறுப்பு விடுக்கும் ஹாப்கின்ஸ் என்பார், துர்வாசு என்று ஒரு இனமே இல்லையே! அது யது குல அரசனின் பெயரன்றோ! என்று வியப்பார்.
எனது கருத்து: காலத்தினால் முந்திய யாஸ்கரின் கருத்தை அடியொற்றிச் செல்லுவதே சரி. பிற்காலத்திலும் இந்துக்கள் தினமும் செய்யும் பஞ்ச மஹா யக்ஞத்தில் – ஐவேள்வியில் — பிரம்ம யக்ஞம்/வேதம் ஓதுதல், தேவ யக்ஞம்/தெய்வங்க ளுக்குப் பூஜை செய்தல், மனுஷ யக்ஞம்/ விருந்தினருக்கு சோறிடுதல், பூத யஞம்/பிராணிக ளுக்கு உணவு படைத்தல், பித்ரு யக்ஞம்/நீத்தாரு க்கு நீர்க்கடன் செலுத்தல் என்று பிரித்துள்ளது இதற்கு நெருக்கமாக வருகிறது.
இதே போல, தமிழிலும் நான்கு பழைய ஜாதிகளைப் பற்றி மாங்குடிக் கிழார் பாடியுள்ளார் (புறம் 335). இவர்களை யார் என்று இனம் காணமுடியவில்லை.
“துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை”
தற்கால ஆராய்ச்சிகள்
பி.டி.சீனிவாச அய்யங்கார் ஆங்கிலத்தில் எழுதிய “தமிழ் வரலாற்றில்”, பஞ்ச ஜனா: என்பது ஆரியர் வருகைக்கு முந்திய பூர்வகுடிகளைக் குறிக்கும் என்பார்.
ஸ்ரீகாந்த் தலகரி எழுதிய “ரிக் வேதம் – ஒரு வரலாற்று ஆய்வு” என்ற ஆங்கில நூலில் பஞ்ச ஜனா: பற்றிக் குறிப்பிடாமல், சந்திர வம்சத்தில் யது, புரு, துர்வாசு, அனு, த்ருஹ்யூ என ஐந்து பிரிவுகள் இருப்பதைக் காட்டுவார்.
“ஆரிய தரங்கிணி” எழுதிய ஏ. கல்யாணராமன், பரத வம்சத்தோடு, புரு, த்ருஹ்யூ, அனு, யது/துர்வாசு என்பன ஐந்து மக்கள் என்பார்.
கல்ஹணர் எழுதிய ராஜதரங்கிணியில் (3-353) ஒரு செய்யுளுக்குப் பொருள் எழுதிய விமர்சகர், “இது மிகவும் சிக்கலான பொருளுடைத்து; நாம் இப்போது சொல்லும் பஞ்சாயத்து என்னும் பொருள் இருக்கலாம்; அல்லது நால் வருணத்தினரும் அதில் சேராத நாகரீகமற்ற கும்பலும் என்று பொருள் இருக்கலாம்; அல்லது தேவர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், பித்ருக்கள் (உயிர் நீத்த முன்னோர்கள்) என்று இருக்கலாம் என்பார்.
எனது கருத்து:
இது யாராக இருந்தாலும் ஐந்து குழுக்களை ஒன்று சேர்த்து ஒரு மரபுச் சொல்லை உண்டாக்க வேண்டுமானால் அந்த ஐந்து இனமும் அங்கு நீண்ட காலம் வாழ்ந்திருக்க வேண்டும். அல்லது இப்படி ஒரு சொற்றொடர் வர இயலாது. ஆகப் பாரதக் குடி—“பதியெழு அறியாப் பழங்குடி” என்பது தெளிவு.




You must be logged in to post a comment.