இளமையும் முதுமையும் சேர்ந்து இருக்க முடியுமா!

blind and lame

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

Nyayangal Part 16

Written by S Nagarajan

Article No.1667; Dated 22 February 2015.

by ச.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

अन्धपंगुन्यायः

Andha pangu nyayah

அந்த பங்கு நியாயம்

அந்தகன் – குருடன் பங்கு – முடவன்

குருடனும் முடவனும் பற்றிய நியாயம் இது.

நடக்க முடியாத முடவன் குருடனின் தோள்களின் மீது ஏறி உட்கார்ந்து கொள்ள, பார்க்க முடியாத குருடனுக்கு அந்த முடவன் வழி காட்டிச் சென்றான்.

 

நல்ல ஒற்றுமையுடன் இணைந்து வாழக் கற்றுக் கொண்டால் குறைகளை எல்லாம் வென்று வெற்றி பெறலாம் என்பதை வலியுறுத்த வந்த நியாயம் இது!

 

பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டைப் புலவர்கள் நிஜமாகவே இந்த நியாயத்திற்கான சரியான உதாரணமாகத் திகழ்கின்றனர். இவர்களில் ஒருவர் குருடர். இன்னொருவர் முடவர். முடவர் குருடரின் தோள்களில் அமர்ந்து வழிகாட்டுவார். வெண்பா பாடுவதில் வல்லவர்களான இவர்களில் ஒருவர் முதல் இரண்டு அடிகளைப் பாட அடுத்தவர் அடுத்த இரண்டு அடிகளைப் பூர்த்தி செய்வது வழக்கம். அருமையான பாடல்களை இவர்கள் இயற்றியுள்ளனர்!

BurundiBlindLame

  अर्दधजरतान्यायः

arddha jarata nyayah

 

அர்த்த ஜரதா நியாயம்

இரண்டு எதிரிடையான நிலைகள் – எடுத்துக்காட்டாக இளமையும் முதுமையும் – ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும் நியாயம் இது.

இரண்டு எதிரெதிர் விஷயங்கள் ஒரே ஒரு இடத்தில் இருக்க முடியாதல்லவா! சில பேர்களிடத்தில் அபூர்வமாக இரு எதிரெதிர் நிலைகள் இருந்தால் இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும். ஆனால் அதே சமயத்தில் இளமையும் முதுமையும் நிச்சயமாக ஒருவரிடத்தில் இருக்கவும் முடியாது. ஆக, அதையும் இந்த நியாயம் சுட்டிக் காட்டுகிறது!

अर्दधवैशसन्यायः

 

arddha vaisasa nyayah

அர்த்த வைஷச நியாயம்

ஒரு மிருகத்தை இரண்டாக வெட்டுவது பற்றிய நியாயம் இது.

ஒரு  மனிதன் கோழி ஒன்றின் தலையையும், கழுத்தையும், கால்களையும் வெட்டினான். ஆனால் அதன் வயிற்றை மட்டும் அப்படியே வெட்டாமல் விட்டிருந்தான். ஏனெனில் அது தானே முட்டையிடும் பகுதி! முட்டை வெளியில் வர வேண்டும் என்பதற்காக அதை மட்டும் வெட்டவில்லை!

 

எள்ளி நகைப்பதற்குரிய விஷயம் அல்லவா இது! அப்படிப்பட்ட முட்டாளின் புத்தியை என்னவென்று சொல்வது! இப்படி முட்டாள்தனமான, அபத்தமான, விநோதமான, விஷயத்தை ஒருவன் செய்யும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

boat best

अहिभुक्-कैवर्तन्यायः

ahibhuk kaivarta nyayah

அஹிபுக் கைவர்த நியாயம்

 

அஹிபுக்கும் படகோட்டியும் என்னும் நியாயம் இது.

இந்த நியாயத்திற்குப் பின்னால் ஒரு குட்டிக் கதை உண்டு.

அஹிபுக் என்ற ஒருவன், ஆற்றைக் கடந்து எதிர்க்கரைக்குச் செல்வதற்காக படகு ஒன்றில் ஏறினான்.

 

படகிலோ ஏராளமான பேர்கள் இருந்தனர். அஹிபுக்கிற்கு பயம் வந்து விட்டது. படகில் செல்லும் போது தான் வேறு யாராவது ஒரு ஆளாக மாறி விட்டால் என்ன செய்வது. தன்னை எப்படி அடையாளம் கண்டு பிடிப்பது என்ற பயம் அவனுக்கு! ஆகவே “புத்திசாலித்தனமாக” ஒரு  கயிறை எடுத்துத் தன் காலில் கட்டிக் கொண்டான். ஆஹா, கயிறு காலில் இருந்தால் அது அஹிபுக்! தன்னைத் தானே மெச்சிக் கொண்டவன் தூங்க ஆரம்பித்தான். படகும் நகர ஆரம்பித்தது.

படகோட்டி விசித்திரமான செய்கைகளை உடைய அஹிபுக்கை ஆரம்பத்திலிருந்தே கவனித்து வந்தான். அவன் தனக்குத் தானே புலம்புவதையும் கயிறு கட்டித் தனக்கென்று ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொள்வதையும் கண்டு புன்முறுவல் பூத்தான். படகு நகரத் தொடங்கியதும் அஹிபுக் தூங்குவதைப் பார்த்த அந்தப் படகோட்டி, அஹிபுக்கின் காலில் கட்டி இருந்த கயிறை அவிழ்த்துத் தன் காலில் கட்டிக் கொண்டான். படகு கரை சேர்ந்தது. அஹிபுக்கும் விழித்தான். என்ன ஆச்சரியம்! படகோட்டியின் காலில் கயிறு கட்டி இருந்தது. தான் ‘படகோட்டியாக’ மாறி விட்டதைக் குறித்து அவன் மனமகிழ்ந்தான்.

இப்படிப்பட்ட முட்டாள்களைக் குறிக்க – அஹிபுக்குகளைக் குறிக்க –  இதை விட வேறு எந்த நியாயம் தான் பொருத்தமானதாக இருக்க முடியும்!

boat1

अग्न्यानयनन्यायः

agnyanayana nyayah

அக்ந்யானயன நியாயம்

அக்னியைக் கொண்டு வரச் சொல்லும் நியாயம் இது.

ஒருவன் அக்னியை எடுத்துக் கொண்டு வா என்று சொல்லும் போதே அந்த அக்னியை ஒரு பாத்திரத்தில் அல்லது பானையில் வைத்து எடுத்துக் கொண்டு வா என்று சொல்வதாகத் தானே அர்த்தம். அக்னியை பாத்திரத்தில் வைத்துக் கொண்டு வா என்று ஒவ்வொரு முறையும் சொல்வது அவசியமுமில்லை; பழக்கமும் இல்லை, அல்லவா!

homa agni

அது போல ஒரு விஷயத்தைக் குறிப்பிடும் போது இயல்பாகவே அதைச் சார்ந்த இன்னொரு விஷயமும் அதில் அடங்கி இருந்தால் இந்த நியாயம் அப்போது அங்கு பயன்படும்!

 

camphor_burning

***********