
Written by S NAGARAJAN
Date: 13 JULY 2018
Time uploaded in London – 6-51 AM (British Summer Time)
Post No. 5213
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
பாக்யா 13-7-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு பத்தொன்பதாம் கட்டுரை
செயற்கை அறிவுடன் கூடிய நவீ ன சாதனங்கள் மனித குல எதிரிகளா? – 1
ச.நாகராஜன்
இயந்திர யுகம் முடிவுக்கு வந்து விட்டது. அறிவில்லாத ஜடங்கள் என்று விமானத்தையும், காரையும், ஸ்கூட்டரையும் இதர மெஷின்களையும் ஏசித் தூற்றிய காலம் முடிவுக்கு வந்து விட்டது.
சற்று அறிவுடன் கூடிய இயந்திரங்கள் – ரொபாட்டுகள் உள்ளிட்டவை – இப்போது உருவாக்கப்பட்டு விட்டன. இவை மனிதர்களைப் போல யோசிக்கும்; நிலைமைக்கு ஏற்ப தக்க முடிவுகள் எடுக்கும்.
இவற்றின் பயன்களைச் சொல்லப் போனால அயர்ந்து போய் விடுவோம்.
சாக்கடையில் ஓடும் கழிப்பறை நீரில் அடைப்புகள் ஏற்பட்டு விட்டனவா? அருவருக்கத்தக்கும் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியை சாக்கடையில் இறங்கி ரொபாட்டுகள் செய்து முடித்து விடும் – சில நிமிடங்களில்.
அடுக்கு மாடிக் குடியிருப்பாக இருக்கும் வானளாவிய கட்டிடத்தில் தீ விபத்தா? உள்ளே பெண்கள், குழந்தைகளை தீ ஜுவாலைகளின் உள்ளே சென்று பத்திரமாக மீட்க வேண்டுமா?
ரொபாட்டுகள் ரெடி. அறிவுடன் கூடிய இவை புகையை விலக்கி, தீயை அணைத்து தனக்கான வழியை உருவாக்கிக் கொண்டு கட்டிடத்தில் சிக்கிக் கொண்டோரை பத்திரமாக மீட்கும்.
ஆழ்கடலில் விபத்தா? நீரில் மூழ்க அச்சமான சூழ்நிலையா? ரொபாட்டுகள் ஆழ்கடலில் மூழ்கி டைவ் அடித்து செய்ய வேண்டிய பணியைச் செய்து முடித்து விடும். இது போல அடர்ந்த காடுகளிலும் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு குறிக்கப்பட்ட பணியை முடித்து விடும்.
இது மட்டுமல்ல, உடல் வலிக்கிறதா? இதமாக மசாஜ் செய்ய உயிருள்ளது போலவே உள்ள ரொபாட் பணியாளர்கள் ரெடி.
பல வீ டுகளில் இப்போது நடைமுறையில் தரையைச் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும் ரோபாட் கிளீனரை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். சென்ஸர் மூலமாக ஒவ்வொரு இடமாக மூலைமுடுக்குகளில் எல்லாம் தானே சென்று தூசு தும்பை அகற்றி விடும்.
ஆக செயற்கை அறிவு ஊட்டப்பட்ட இவற்றின் எண்ணிக்கையும் பயன்பாடும் இப்போது அதிகரித்து வருகிறது.
ஜப்பானில் ஏராளமான கம்பெனிகள் செயற்கை அறிவுள்ள பல சாதனங்களைச் செய்து விற்கின்றன.
இப்போது ஜப்பானில் உருவாக்கப்பட்ட கே கம்ப்யூட்டர் ஒரு வினாடிக்கு 10,000,000,000,000,000 கணக்குகளைப் போட்டு முடித்து விடுகிறது. ஒரு வினாடிக்குள் இது செய்வதை மனிதர்கள் செய்வதாக வைத்துக் கொள்வோம். அப்போது இப்போது உலகில் உள்ள 700 கோடி பேர்களும் ஆளுக்கு ஒரு கணக்கை எடுத்துக் கொண்டால் தொடர்ந்து 17 நாட்கள் முயன்றால் கே கம்ப்யூட்டர் ஒரு வினாடியில் செய்வதை முடிக்க முடியும்!
மனித உயிருக்கு அபாயம் ஏற்படும் பணிகளில் செயற்கை அறிவு ஊட்டப்பட்ட சாதனங்கள் ஈடுபட்டு அரிய செயலை ஆற்றி வருகின்றன.
ஆனால் இவற்றின் அறிவு கூடக் கூட, செயல் திறன் கூடக் கூட அது மனிதர்களை விடத் திறம்பட சிந்தித்து, யோசித்து, செயலாற்றும் போது என்ன நடக்கும்?
தன்னைப் படைத்த மனிதனுக்கே சவால் விடுமா? அபாயத்தை ஏற்படுத்துமா?
இப்போதே இண்டர்நெட்டில் உலா வரும் ஜோக் ஒன்று உண்டு. இந்த ஏஐ – ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் – மெஷின்களின் திறன் அதிகரிக்கும் போது மனித குலம் ரொபாட் ஜமீந்தார்களை – ரொபாட் மன்னர்களை அடிபணிய வேண்டி வரும் என்பது தான் அந்த ஜோக்!
எதிர்கால யுத்தங்களில் நாடுகள் தங்கள் ராணுவ வீரர்களை அனுப்பாமல் ரொபாட் வீரர்களை அனுப்பி யுத்தம் செய்தால்?

நினைக்கவே பயமாக இருக்கிறது. செயற்கை அறிவுடன் கூடிய அபாயகரமான ஆயுதங்கள் பல்வேறு நகர்களை நோக்கி வீசப்பட்டால்?
மனித குலமே இல்லாமல் போய்விடும்! இது போன்ற ஏராளமான நியாயமான பயங்கள் செயற்கை அறிவு பற்றி உண்டு!
2001: எ ஸ்பேஸ் ஒடிஸி மற்றும் அவெஞ்சர்ஸ் – ஏஜ் ஆஃப் யூனியன் (2001: A Space Odyssey – 1968) (Avengers: Age of Ultron – 2015) ஆகிய இரு திரைப்படங்கள் செயற்கை அறிவு மனித அறிவை மிஞ்சி விட அதை உருவாக்கியவர்களின் எதிர்பார்ப்புகளை மீறி, அவர்களுக்குக் கீழ்ப்படியாமல் அவர்களின் கட்டுப்பாட்டை மீறி, மனித குலத்தை அழிக்க முயற்சிப்பதைச் சித்தரிக்கின்றன.
இப்போது அமெரிக்காவில் மூன்றாவது சீஸன் தொடங்கி சக்கை போடு போடும் ஹ்யூமன்ஸ் என்ற தொலைக்காட்சித் தொடரும் கூட பிரக்ஞையுடன் கூடிய செயற்கை அறிவு படைத்த ஜீவன்கள் தங்களது அடிப்படை உரிமைகளுக்காக மனிதர்களுடன் போராடுவதைச் சித்தரிக்கிறது.
கணினி உலகத்தில் விஞ்ஞானிகள் செயற்கை அறிவு சாதனங்கள் உருவாக்கப் போகும் பிரம்மாண்டமான சீர் கேட்டை நினைத்து பயப்படுகின்றனர்.
ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை நிறுவிய இலான் மஸ்க் 2017 ஜூலையில் நேஷனல் கவர்னர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையில், “செயற்கை அறிவு என்னும் நவீன தொழில்நுட்பத்தை நன்கு அறிந்து கொண்டிருக்கும் நான் ,
அதைப் பற்றி மக்கள் மிகவும் கவலைப்பட வேண்டும் என்று கருதுகிறேன்” என்றார். ‘இப்போதே எச்சரிக்கை மணி அடிக்கிறேன் ‘என்று தொடர்ந்த அவர், “ஆனால் ரொபாட்டுகள் தெருவில் இறங்கி மனிதர்களைக் கொன்று குவிக்கும் வரையில் மனிதர்கள் அதை எப்படி எதிர்கொள்வது என்று அறிய மாட்டார்கள். ஏனெனில் இது புலன்களால் உணரப்படாத ஒன்றாக இருப்பதால் தான்!” என்றார்.
எல்லோரும் பயப்படுவது ஏன்? சூபர் இண்டெலிஜென்ஸான ‘ஏஐ’ –AI- சாதனங்கள் பிரக்ஞையை அடைந்து சிந்திக்கும் திறன் பெற்று மனிதர்களை தங்களை விட கீழான அற்ப ஜந்துக்களாக மதித்து, இப்போது குரங்குகளை நாம் எப்படி நடத்துகிறோமோ அதைப் போல நம்மை நடத்தி விடக் கூடும்” என்பதே விஞ்ஞானிகளின் பயம்!
மனிதர்களாகிய நமக்கு இது தேவையா என்பதே அவர்களின் கேள்வி!
- தொடரும்
அறிவியல் அறிஞர் வாழ்வில் …

அறிவியல் ரீதியாக ஏற்றம் இறக்கம் உடைய ஒரு மலைப் பகுதியை சரியாக அளந்து வரைபடம் தயாரிப்பது என்பது பிரம்மாண்டமான ஒரு விஷயம்.
பண்டிட் நயின் சிங் ராவத் (தோற்றம் 21-10-1830 மறைவு 1-2-1882) பத்தொன்பதாம் நூற்றாண்டில் இமயமலை பிராந்தியத்தை அடி அடியாக அளந்த மாபெரும் வீரர் ஆவார். குமாவுன் கிராமத்தில் ஒரு பள்ளியின் ஹெட்மாஸ்டராகப் பணி புரிந்த இவர் பிரிட்டிஷ் அரசால் திபத்தின் வரைபடத்தை உருவாக்க அங்கு அனுப்பப்பட்டார். திபத்தில் வசிப்பவர் போல உடையணிந்து ஒரு யாத்ரீகராகக் கிளம்பிய நயின் சிங் திபத்தை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து அதன் வரைபடத்தைத் தயாரித்தார். திபத்தியரைப் போலவே அவர்கள் மொழியில் இவர் பேசி அங்குள்ள கடும் குளிரையும் தாங்கி தனது பணியைத் திறம்பட முடித்தார்.
லாஸா இருக்கும் இடத்தையும் அது எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பதையும் சரியாக நிர்ணையித்தார்.பிரம்மபுத்திரா நதியின் பெரும் பகுதியின் வரைபடத்தையும் 33 இடங்களில் ஆய்வு செய்து தயாரித்தார். காங்டாக்கிலிருந்து லாஸா வரை 31 இடங்களில் ஆய்வு செய்தார். கண் பார்வையை இழந்ததால் வெற்றிகரமான தனது யாத்திரையை அவர் நிறுத்த நேரிட்டது. ஐரோப்பாவின் பல பூகோள ஆய்வு நிறுவனங்கள் அவரை கௌரவித்தன. பிரிட்டிஷ் அரசு அவருக்கு சி.ஐ.இ விருதை வழங்கியது. இந்திய அரசு 27-6-2004 அன்று அவர் நினைவாக தபால்தலையை வெளியிட்டு அவரை கௌரவித்தது. மலையேறி ஆய்வு செய்யும் உலக வீ ரர்களில் தனி இடத்தை வகிப்பவர் பண்டிட் நயின் சிங்.
***