ஆரியம் முதல் பதினெண் பாடையில்…… கம்பன் மொழி (Post No.3130)

tamil-alphabet

Written by London swaminathan

 

Date: 7 September 2016

 

Time uploaded in London: 8-23 AM

 

 

Post No.3130

 

Pictures are taken from various sources; thanks.

 

பழங்கால இந்தியாவில் பதினெட்டு மொழிகள் பெரிய அளவில் பேசப்பட்டன என்பதை கம்பனும் பாரதியும் நமக்கு சொல்லும் அழகே தனி!

 

பம்பை நதியின் இயற்கை அழகை கம்பன் வருணிக்கும் அழகு படித்து இன்புறத் தக்கது. முதலில் பம்பை என்னும் நதி பற்றி ஓரிரு வார்த்தை; இது பழங்காலச் சொல். கேரளத்தில் ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் வழியில் ஒரு பம்பை நதி உளது; தென் அமெரிக்காவில் ஒரு பம்பை நதி உளது; கிஷ்கிந்தா காண்டத்தில் ராம பிரான் கண்ட பம்பை நதி வட இந்தியாவில் உளது!

 

ஆரியம் முதலிய பதினெண் பாடையில்

பூரியர் ஒரு வழிப்புகுந்தது ஆம் என

ஓர்கில கிளவிகள் ஒன்றொடு ஒப்பில

சோர்வில விளம்பு புள் துவன்றுகின்றது

 

பொருள்:–

அந் நீர் நிலை சம்ஸ்கிருதம் முதலான பதினெட்டு மொழிகளில் நல்ல தேர்ச்சி பெறாத அற்பப் புலமை உடையவர்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து ஆரவாரம் செய்வது போல இன்ன இன்ன பறவையின் ஒலி இது இது என்று ஆராய்ந்து அறிய மாட்டாதவைகளும், ஒன்றுடன் ஒன்று ஒத்திராதவைகளுமாய் உள்ள ஒலிகளை ஓய்வின்றி ஒலிக்கும் பலவகைப்பட்ட பறவைகள் கூடி நெருங்கி இருக்கப்பெ ற்றதாகும்.

 

இதிலிருந்து தெரிவதென்ன?

sanskrit_vwl

1.இந்தியாவில் பதினெட்டு மொழிகள் பெரிய மொழிகளாகக் கருதப்பட்டன. அதில் சம்ஸ்கிருதமே முதலிடம் பெற்றது

2.ஆரியம் என்றால் ரிஷி முனிவர்கள், வடக்கில் வாழும் பண்பாடுமிக்கோர் என்னும் பொருள், சங்க இலக்கியம் முதல் கம்பன் காலம் வரை இருந்தது. அதாவது மாக்ஸ்முல்லர்களும், கால்டுவெல்களும் “சிவபூஜையில் கரடி புகுந்தது போல” புகும் வரை ஆரிய என்ற சொல்லுக்கு இனத் துவேஷப் பொருள் இல்லை. கால்டுவெல்களும் மாக்ஸ்முல்லர்களும் இன வெறியைப் பரப்பியதால் ஹிட்லர் தன்னை ஆரியன் என்று சொல்லி மற்றவர்களைக் கொடுமைப்படுத்தியதை வரலாறு படித்தோர் அறிவர் (விவரங்களை எனது பழைய கட்டுரைகளில் காண்க)

 

  1. ஆரியருக்கு எதி ர்ப்பதம் பூரியர் என்பதாலும் இது உறுதியாகிறது அதுவே ஆங்கிலத்தில் இன்றும் ஸ்பூரியஸ் (Spurious = false, fake, illegitimate) என்று வழங்கப்படும்

 

4.கம்பன் பல்வேறு மொழிகளைப் பயின்றான் அவனே வால்மீகி புகழைப்பரப்ப அவனுடைய ராமாயணத்தை மொழிபெயர்ப்பதாக பால காண்டத்தில் கூறியதையும் அகத்தியனையும் தமிழையும் வானளாவப் புகழ்வதையும் எனது முந்தைய கட்டுரைகளில் காண்க

 

5.பறவைகள் பற்றிய தமிழனின் அறிவையும் இப்பாடல் விளக்கும். ஒவ்வொரு பறவையையும் அதனுடைய ஒலியைக்கொண்டே அறிவான் தமிழன்.ஆனால் பம்பை நதிக்கரையிலோ எல்லாப் பறவைகளும் சேர்ந்து ஒலித்தது “குறை குடம் தழும்பியது போல” இருந்தது!

 

பாரதி மொழியில்

முப்பது கோடி முகமுடையாள் உயிர்

மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்

செப்பு மொழி பதினெட்டுடையாள்- எனிற்

சிந்தனை ஒன்றுடையாள் (பாரதியார் படல்)

 

என்று பாரத தேவியைப் பாரதி புகழ்வதையும் ஒப்பிட்டுப் பார்ப்பது பேரின்பம் தரும்.

 

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு

இறுதியாக ஒவ்வொரு மொழியும் அவரவர் காதுக்கு இனிமையானது என்பதை உணர்தல் வேண்டும். பார்லிமெண்டில் பேசிய சேத் கோவிந்த தாஸ், தமிழ் மொழி என்பது தகர டப்பாவில் கற்களைப் போட்டுக் குலுக்கினால் எப்படி ஒலி வருமோ அது போலக் கடூரமானது என்று கிண்டல் செய்தார். உடனே தி.முக. உறுப்பினர்கள், இந்தி மொழியில் உள்ள மிகப்பெரும் இலக்கியம் டெலிபோன் டைரக்டரிதான் என்றும் செப்பினர். இரண்டும் மொழிப்பற்றினாலும், அறியாமையினாலும் வெளிப்பட்ட கூற்றுகள்!

 

பி.பி.சி. தமிழோசையில்…………

 

லண்டனில் புஷ் ஹவுசில் (Bush House, London) ஏழாவது மாடியில் நான் B.B.C. தமிழோசை ஒலிபரப்பளராக வேலை பார்த்த காலத்தில் நானும் சங்கர் அண்ணாவும் ஏதேனும் ஒரு விஷயம் பற்றி விவாத்தித்துக் கொண்டிருப் போம். அடுத்த அறையிலுள்ள நேபாளி ஒலிபரப்பாளர்கள் வந்து ஏன் இப்படிச் சண்டை போடுகிறீர்கள்?  என்று சிரித்துக்கொண்டே சொல்லுவர். அவர்களுக்குத் தெரியும் நாங்கள் சுவையான விவாதத்தில் இருக்கிறோம் என்பது. ஆயினும் தமிழ் மொழியின் குரல் அவர்களுக்குச் சண்டை போடுவது போலக் கடூரமாக இருப்பதை அவர்கள் சொல்லாமல் சொல்லுகின்றனர் என்பது எங்களுக்குப் புரிந்து விடும். இதே நேரத்தில் எம்.எஸ். சுப்புலெட்சுமி, .சுசீலா, ஜானகி போன்றோரி ன் பாடல்களைக் கேட்டிருந்தால் அவர்கள் கருத்து வேறு மாதிரி இருந்திருக்கும்!

 

–Subham–