![]()
Written by London swaminathan
Date: 9 August 2018
Time uploaded in London – 8-05 AM (British Summer Time)
Post No. 5302
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் – குறள் 305
பொருள்
‘ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பினால் கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அங்ஙனம் பாதுகாக்கத் தவறினால் கோபமே அவனைக் கொன்றுவிடும்’.
ஒருவருக்கு அஸாத்திய கோபம் வந்தது. அதிக முன்கோபம். எவர் மீதும் எரிந்து விழுவார்- அதி பயங்கர சிடுமூஞ்சி. அந்த ஊருக்கு ஒரு குரு வந்தார்.
குருவே! என் கோபத்தை அடக்க என்னால் முடியவில்லையே! சிலர் கோபம் வந்தால் 1 முதல் 100 வரை எண்ணிவிட்டுச் செயல்படு அல்லது பேசத் துவங்கு என்றனர். அதையும் செய்து பார்த்தேன்; பலிக்கவில்லை; நூறு எண்ணிய பிறகும் கோபம் வருகிறது! என்ன செய்வேன்?
இன்னும் சிலர் கோபம் வந்தால் வரக்கூடிய வசவுகளை எல்லாம் ஒரு தாளில் எழுது; ஒரு மணிநேரத்துக்குப் பின் வாசி; பின்னர் அதை பேச முயற்சி செய்; நீயே பயந்து விட்டு விடுவாய் என்றனர். அதையும் செய்து பார்த்தேன். பலன் இல்லை.
கோபம் வந்தால் கண்ணை மூடுகிறேன்; வாயைத் திறக்கிறேன்; என்ன பேசுகிறேன் என்ன செய்கிறேன் என்றே தெரியவில்லையே; என்னைக் காப்பாற்றுங்கள் என்றான்.

குரு சொன்னார்:
இனிமேல் கோபம் வந்தால் மெதுவாக பத்து அடி பின்னே நடந்து போ; பின்னர் கோபம் அடங்கிய பின்னர் முன்னே வா என்றார்.
அவனும் குருவுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு நடையைக் கட்டினான். ஒரு முறை இரண்டு நாள் வெளி யூருக்குப் பயணம் செய்துவிட்டு அர்த்த ராத்ரியில் வீடு திரும்பினான். மனைவியருகே வேறு ஒருவர் படுத்திருந்து அசைவது தெரிந்தது. உடனே மனைவி மீது அதி பயங்கர சந்தேஹமும் கோபமும் பொங்கியது ஒரேயடியில் மனைவியையும் கள்ளக் காதலனையும் சத்தமில்லாமல் அடித்து நொறுக்க அடுப்படியில் இருந்து குழவியையும் இரும்பு உலக்கையையும் கொண்டு வந்தான்.
திடீரென்று குரு சொன்னது நினைவுக்கு வந்தது. எதையும் கோபத்தில் செய்து விடாதே ‘பத்து அடி பின்னோக்கி நடந்து போ’ என்று சொன்ன அறிவுரையை நினைத்தான். மெதுவாக இருட்டில் பின்னால் பத்து அடி நடந்தான். பத்து அடிகள் நடப்பதற்குள் ஏதோ ஒரு பாத்திரத்தில் கால்பட்டு அது உருண்டு பெரிய சப்தத்தை எழுப்பியது.
அதைக்கேட்டு மனைவியின் பக்கத்தில் இருந்த உருவம் “அம்மா, அம்மா வீட்டில் யாரோ திருடன் வந்திருக்கிறான் போல இருக்கிறது” என்று கூச்சலிட்டாள். உண்மையில் அவனது மனைவி, அடுத்த தெருவில் (கணவனுடன்) வசிக்கும் மகளை அன்றிரவு துணைக்கு படுத்துக்கொள்ள அழைத்திருந்தாள். இவன் மட்டும் கோபத்தில் உலக்கை அடி கொடுத்திருந்தால் மனைவியும் மகளும்– ஒரு பாவமும் அறியாத இரண்டு உயிர்கள் மேலுலகம் சென்றிருக்கும்!
அவன் அதை எண்ணி எண்ணி வருதினான். குருவுக்கு மானஸீகமாக மேலும் ஒரு கும்பிடு போட்டான்.

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும் -குறள் 303
பொருள்
கோபம், தீய விளைவுகளை உண்டாக்குவதால் யாரிடத்திலும் கோபப்படுவதை அறவே மறக்க வேண்டும்.
—SUBHAM–