
WRITTEN BY S NAGARAJAN
Date: 6 November 2016
Time uploaded in London: 6-14 AM
Post No.3323
Pictures are taken from various sources; thanks. This picture is from a Facebook friend.Thanks.
Contact: swami_48@yahoo.com
.பாக்யா 4-11-2016 தீபாவளி இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
பந்தரைத் தந்த மஹாராஜா
ச.நாகராஜன்
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடந்த உண்மையான சம்பவம் இது!
பிரிட்டிஷாரின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட் சில மஹாராஜாக்கள் இங்கிலாந்து மேலிடத்தை ஏளனம் செய்த நிகழ்ச்சிகள் ஏராளம் உண்டு.அவற்றில் இதுவும் ஒன்று.
குஜராத்தில் ஜுனாகத் போர்ட் ஆஃப் பந்தர் ஒரு முக்கியமான துறைமுகம். ஜுனாகத்தை எப்படியாவது பிரிட்டிஷாரின் வசம் கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய இங்கிலாந்து அதன் அரசியல் பிரதிநிதியாக் இந்தியாவில் இருந்த ரெஸிடெண்டிற்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.
“என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் போர்ட் ஆஃப் பந்த்ரை ஜுனாகத் நவாபிடமிருந்து பெறுங்கள்” என்ற உத்தரவைக் கண்ட ரெஸிடெண்ட் தீவிரமாகச் சிந்தித்தார்.
நவாபை ராஜ்கோட்டிற்கு வரவழைத்த ரெஸிடெண்ட் அந்தக் காலத்தில் பிரிட்டிஷாரின் உயரிய விருதான க்னைட் க்ராண்ட் கமாண்டர் எனப்படும் G.C.I.E என்ற விருதை அவருக்கு அளித்தார்.
பிரம்மாண்டமான விழாவில் மஹாராஜாவிடம் எப்படிப்பட்ட உயரிய விருதை விக்டோரியா மஹாராணியார் அளித்துள்ளார் என்பதை நன்கு விளக்கினார்.
நவாபிற்கு ஆங்கிலம் தெரியாது; மிகவும் அப்பாவி என்று எடை போட்ட ரெஸிடெண்ட் மொழி பெயர்ப்பாளர் மூலம் நவாப் இங்கிலாந்து ராணியாருக்கு தம் நன்றியைத் தெரிவிக்கும் வண்ணம் ஏதாவது செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
“என்ன செய்ய வேண்டும்?” அப்பாவியாக நவாப் கேட்டார்.
“ஒன்றுமில்லை. பந்தரைக் கொடுத்து விட்டால் போதும்:
நவாப் அப்பாவியாக, “பந்தரையா கேட்கிறீர்கள்?” என்றார்.
மிகவும் மனம் மகிழ்ந்த ரெஸிடெண்ட் தன் வேலை சுலபமாக முடிந்தது என்று எண்ணியவாறே, “ப்ந்தரைக் கொடுத்தால் போதும்” என்றார்.
அதை ஆமோதித்த நவாப் ஊர் திரும்பினார்.
ரெஸிடெண்ட் இங்கிலாந்திற்குத் தனது வெற்றியைப் பற்றிப் பெரிய தந்தி ஒன்றை அடித்தார்.பாராட்டும் வந்து சேர்ந்தது.
ஊருக்குத் திரும்பிய நவாப் பெரிய தங்கத்திலான கூண்டு ஒன்றையும் வெள்ளியிலான கூண்டு ஒன்றையும் செய்யச் சொன்னார். அவற்றில் நன்கு வளர்ந்த நான்கு குரங்குகளை அடைத்தார்.
பெரிய மேள தாளத்துடன் அவற்றை ராஜ்கோட்டிற்கு ரெஸிடெண்டிடம் அனுப்பி வைத்தார்.
“நீங்கள் கேட்ட பந்தரை அனுப்பி வைத்துள்ளேன். இவ்வளவு சின்ன கோரிக்கையை உடனே நிறைவேற்ற முடிந்ததை என் பாக்கியமாகக் கருதுகிறேன்” என்ற நவாபின் கடிதத்தைப் பார்த்த ரெஸிடெண்ட் கூடவே வந்த கூண்டுகளையும் உள்ளே இருந்த குரங்குகளையும் பார்த்தார்.
பந்த்ர் என்றால் குரங்கு என்று தானே ஹிந்தியில் அர்த்தம்.
மஹாராஜாவுக்குத் தான் ஆங்கிலம் தெரியாதே!அப்பாவி ஆயிற்றே!!
ரெஸிடெண்ட் முழித்தார்.
அவரை உடனே ஊர் திரும்புமாறு இங்கிலாந்து மேலிடம் தந்தியை அனுப்பியது. அங்கு சென்றவுடன் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.
இங்கோ நவாப் சிரித்தார். ஆங்கிலேயரின் சூழ்ச்சியையும் தங்கள் நவாப் போர்ட் பந்தருக்கு பதில் நிஜ ‘பந்தரைக்’ கொடுத்து அதை முறியடித்த விதத்தையும் அறிந்த மக்களும் சிரித்தனர்!
ஆங்கிலேயரை இப்படி ஏளனம் செய்திருக்கும் – நமக்குத் தெரியாத, பிரபலமாகாத – சம்பவங்கள் நமது சரித்திரத்தில் ஏராளம் உண்டு!
**********