Article written by S NAGARAJAN
Post No. 1779; Date 6th April 2015
Uploaded from London at 7-20 am
சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்
28. கொக்கின் தலையில் வெண்ணையை வைத்துப் பிடிக்கலாமா?
ச.நாகராஜன்
நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:
पञ्जरमुक्तपक्षिन्यायः
panjaramuktapaksi nyayah
பஞ்சர முக்த பக்ஷி நியாயம்
கூண்டிலிருந்து விடுதலையாகும் பறவை பற்றிய நியாயம் இது.
இறப்பின் போது உடலிலிருந்து ஆன்மா, கூண்டிலிருந்து விடுதலையாகிப் பறந்து வானில் செல்லும் பறவையைப் போல பறந்து செல்கிறது என்பதை இந்த நியாயம் சுட்டிக் காட்டுகிறது.
கூண்டுக் கிளி பறந்தது (குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே
உடம்போடடு உயிரிடை நட்பு – குறள் 338)
प्रथममल्लन्यायः
prathanamalla nyayah
பிரதம மல்ல நியாயம்
மல்யுத்த வீரர்களின் தலைவனைத் தோற்க அடிப்பது குறித்த நியாயம் இது.
பல பேரை எதிர்க்க வேண்டியுள்ள ஒருவன் எதிர்ப்பவர்களில் வலிமையாக இருக்கும் தலைவனைத் தோற்க அடித்து விட்டால் ஏனையோரைப் பற்றிக் கவலையே பட வேண்டாம், இல்லையா! அது போல, பல வித கொள்கைகளை எதிர்த்து தன் கொள்கையை ஸ்தாபிதம் செய்ய நினைக்கும் ஒருவர் ஒவ்வொரு கொள்கையாக எடுத்து எதிர்த்து தன் கொள்கையாக நிர்ணயிக்காமல், பிரதானமாக இருக்கும் கொள்கையை எதிர்த்து தன் கொள்கையை ஸ்தாபித்து விட்டால் ஒவ்வொரு கொள்கைக்கும் பதில் சொல்ல வேண்டாம். இதைச் சுட்டிக் காட்டும் ‘வலியவனை வெல்’ என்னும் நியாயம் இது.
குஸ்தி, மல்யுத்தம் படம்
बकबन्धनन्यायः
bakabandhana nyayah
பக பந்தன நியாயம்
கொக்கின் தலையில் வெண்ணையை வைத்துப் பிடிக்கும் நியாயம் என்ற இந்த நியாயம் பிரசித்தி பெற்ற ஒன்று. சாதாரணமாக வழக்கில் இருந்து வரும் ஒன்றும் கூட!
கொக்கைப் பிடிக்க ஒருவன் நினைத்தான். அதற்கு அவன் கண்டு பிடித்த வழி, அதன் தலையில் முதலில் வெண்ணெய் வைக்க வேண்டும். அது சூரிய வெப்பத்தில் உருகி கொக்கின் கண்ணை மறைத்தவுடன், கொக்கு குருடாகி விடும். அப்போது அதை சுலபமாகப் பிடித்து விடலாம். எப்படிப்பட்ட யோசனை! இப்படி முட்டாள்தனமான யோசனைகளை ஒருவர் கூறும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.
கொக்கின் தலையில் வெண்ணை?
बधिरकर्णजपन्यायः
badhira karnajapa nyayah
பதிர கர்ண ஜப நியாயம்
செவிடன் காதில் முணுமுணுப்பது பற்றிய நியாயம் இது.
ஒன்றுமே காதில் விழாத ஒரு செவிடனிடம் முணுமுணுப்பதால் என்ன பிரயோஜனம்? வீணான ஒரு வேலையை ஒருவர் மேற்கொள்ளும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.
செவிடன் காதில் – ஊதிய சங்கு
बहूनामनुग्रहो न्यायः
bahunamanugraho nyayyah
பஹுனாமனுக்ரஹோ நியாயம்
பலர் ஒன்று கூடி சேர்ந்திருப்பதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது. தன் பந்து மித்திரர்களுடன் – உற்றார் உறவினருடன் – சேர்ந்து இருந்து அவர்களின் ஆதரவைப் பெற்றால் அது மிகவும் நல்லது, அல்லவா! அனைவரது ஒத்துழைப்பும் நல்லாசிகளும் கிடைக்கும். இந்த ஒற்றுமையைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.
நல்ல குடும்பம், பெரிய குடும்பம்
*****************






You must be logged in to post a comment.