Written by London swaminathan
Research Article No.1846; Date: 5 May 2015
Uploaded at London time: 8-55 am
(கர்நாடகத்திலலுள்ள கோவில்களில் காணப்படும் ராமாயண , மாபாரத சிற்பங்களின் படங்கள்– ஒரு ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை;நன்றி)
பரசுராமன் குழப்படி!
பரசுராமன், அனுமன் போன்ற சில கதா பாத்திரங்கள் ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரண்டு இதிஹாசங்களிலும் வருவதால் ராமன் கதையும் கிருஷ்ணன் கதையும் ஏக காலத்தில் அல்லது அடுத்தடுத்து நிகழ்ந்தது போலத் தோன்றுகிறது. பல அர்ஜுனன்கள், பல பரசுராமன்கள் இருந்ததால் இந்தக் குழப்பம். பரசுராமன் வென்றது கார்த்தவீர்ய அர்ஜுனன். மஹாபாரத அர்ஜுனனோ சுமார் 400 ஆண்டுகள் பின்னால் வாழ்ந்தவர். ஆகவே ராமாயண—மஹாபாரத இடைவெளி குறைந்தது 500 ஆண்டுகளாவது இருக்க வேண்டும். இந்துக்களின் யுகக் கணக்குப்படி பார்த்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். ஆக பலரும் பரசுராமன் போல க்ஷத்ரிய எதிரியாக இருந்ததால் அவரை பரசுராமன் என்று அழைக்கத் துவங்கிவிட்டனர் என்று கொள்வதே பொருத்தம்.
உண்மையில் ராமாயணம் முதலில் நிகழ்ந்தது மட்டுமல்ல. முதலில் எழுதப்பட்டதும் ராமாயணமே! இதோ இதற்கான ஆதாரங்கள்.
1.மஹாபாரதத்தில் சுருக்கமாக ராமாயணம் உள்ளது. ஆனால் ராமாயணத்தில் மஹாபாரதத்தின் சுவடே கிடையாது. ஆகையால் வால்மீகி எழுதிய பின்னர், அதைச் சுருக்கமாக மஹாபாரதத்தில் சேர்த்தாரென்பதே நமது முடிவு.
2.ராமாயணத்தில் ராமனை சீதை, “ஆரிய” (மதிப்பிற்குரிய ஐய) என்றும் ராவணனை அரண்மனைக் காவலர்கள் “ஆரிய” என்று அழைப்பதும் ராமாயணத்தின் பழமையைக் காட்டும்.
3.ராமாயணத்தில் குரங்கு மனிதர்கள் (அனுமன்), கரடி மனிதர்கள் (ஜாம்பவான்), கழுகு மனிதர்கள் (ஜடாயு) ஆகியோர் வருகின்றனர். இவை மஹாபாரதத்தில் இல்லை. உண்மையில் குரங்கு, கழுகு, கரடி என்பன அவர்கள் அணிந்த முகமூடி அல்லது பச்சை குத்திக் கொண்ட சின்னத்தையே குறிக்கும். ஆனால் அது நடந்து மிகவும் அதிக காலம் உருண்டோடிவிட்டதால், முதலில் வாய் மொழியாக ராமாயணத்தைப் பரப்பிய பௌராணிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதை மிகைப்படுத்தி பிராணிகளும் உதவி செய்ததாகச் சொல்லிவிட்டனர். எப்படியாகிலும் இத்தகைய சின்னங்களை அணிந்தோர் மாஹாபாரத காலத்தில் இல்லை! மாபாரத காலத்தில் நாகரீகம் வெகுவாக முன்னேறிவிட்டது.
3.லங்காதேவி, லங்கிணி, மைநாக பர்வதம் போன்ற குறுக்கீடுகளும் ராமாயணத்தின் பழமையைக் காட்டும். இது போன்றவை மஹாபாரதக் கதைகைளில் இரா.
- ராமாயணத்தில் அடிக்கடி 60,000 மனைவியர், 60,000 ஆண்டு தசரதர் ஆட்சி என்ற மரபுத் தொடர்கள் (Idioms and Phrases) இவை மஹாபாரதக் கதைகைளில் இரா.
“வனம் கண்ட வால்மீகி”, “ரணம் கண்ட வியாசர்”
5.ராமாயணத்தை எழுதியது “வனம் கண்ட வால்மீகி”, மாபாரதத்தை எழுதியது “ரணம் கண்ட வியாசர்” (ரணம்=போர்). அதாவது ராமாயணம் என்பது பொதுவாக இற்கையோடு இயைந்த வாழ்வு. மாபாரத காலமோ போட்டி, பொறாமை மிகுந்த நகர வாழ்வு.
6.ராம-ராவண யுத்தத்தில் வியூஹம் போன்ற ராணுவ முன்னேற்றங்களைக் (Military Formations) காண முடியாது. மாபாரதத்தில் சக்கர, பத்ம வியூஹம், பட்டாளத்தை எண்ணிக்கை வாரியாகப் (divisions of Army) பிரிக்கும் (7 அக்ஷௌகிணி, 11 அக்ஷௌகிணி) முன்னேறிய உத்திகளைக் காணலாம். இப்படி மாறுவதற்கு இரண்டுக்கும் இடையே மிக அதிக காலம் ஆகி இருக்க வேண்டும். முப்பதுக்கும் மேலான தலைமுறை வித்தியாசம் இருப்பதாக புராணங்கள் பகரும்.
“பாடியது” (ballads) ராமாயணம், “எழுதியது” மாபாரதம்
7.குசனும் லவனும் “பாடியது” (ballads) ராமாயணம்; அவர்களுக்கு தனது ஆஸ்ரமத்தில் பாடக் கற்பித்தவர் குயில் எனப் புகழப்படும் வால்மீகி முனிவர் ஆவார் (“வந்தே வால்மீகி கோகிலம்”).
வியாசர் “எழுதியது” மாபாரதம். கி.மு.800 வாக்கில் எழுந்த ஹோமரின் இலியட், ஆடிஸிக்கு முன் பாடல் வடிவில் இருந்த கதைகளையே ஹோமர் (Homer) என்பவர் கிரேக்க மொழியில் முதல் நூலாக எழுதினார். அதற்கு முன்னரே நூறுக்கணக்கான நூல்களைப் பெற்றிருந்தது சம்ஸ்கிருதம்!! ஆகவே பாடல் வடிவ ராமாயணம் அதற்கும் முந்தையது! மாபாரதம் என்பது, அக்காலத்தில் வழங்கிய பல்வேறு விஷயங்கள் அழிந்து போய்விடக் கூடாதென்பதற்காக வியாசரால் (compiled) தொகுக்கப்பட்டது. வியாசர் என்றால் கட்டுரை (Essayist, Compiler) எழுதுபவர் என்று பொருள்.
8.வால்மீகி ராமாயணத்தில் சாதாரண தர்மத்தைக் காண்கிறோம். மாபாரதத்தில் பெரிய தத்துவ (கீதை) போதனைகளைக் காண்கிறோம். உபநிஷத காலத்தை ஒட்டி எழுந்த ராமாயணத்தில் இதைச் சொல்லத் தேவ எழவில்லை. திரேதா யுகத்தில் 50 சதவிகிதம் நல்லது இருந்தது. கலியுகத்துக்குச் சற்று முன்னர் இருந்த மாபாரத காலத்தில் அதர்மம் ஓங்கவே உபதேசம், தத்துவ போதனைகளைச் சொல்ல வேண்டி இருந்தது.
- ராமாயணத்தில் 24,000 ஸ்லோகங்களைக் காண்கிறோம் மாபாரதமோ உலகிலேயே பெரிய இதிஹாசம்; அதில் ஒரு லட்சம் ஸ்லோகங்கள் உள. “எழுதாமல்” இவ்வளவு பெரிய விடயங்கள் நீடித்திருக்க வாய்ப்பில்லை.
10.மாபாரதத்தில் தெளிவாக 29 நாடுகள் பிரிக்கப்பட்டிரு ப்பதைக் காண்கிறோம். மன்னர்களின் பெயர்களும் உள. ஆனால் ராமாயணத்தில் இப்படி இல்லை. இரண்டுக்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது.
11.பூகோள ரீதியில் கிஷ்கிந்தா போன்ற இடங்களும், பின்னர் இந்திய சரித்திரத்தில் அல்லது புவியியலில் இல்லை. ஆனால் மாபாரதம் குறிப்பிடும் இடங்கள் தொடர்ச்சியாகப் பேசப்படுகின்றன.
12.ராமாயணம் அளிக்கும் செய்தி எளிமையானது: “சத்தியத்தைக் கடைப்பிடி, அடுத்தவன் மனைவி மீது கைவைக்காதே”. மாபாரதத்தில் ஏராளமான மோதல்கள், போட்டி, பொறாமைகள், சூழ்ச்சிகள் முதலியவற்றைக் காண்கிறோம் அதாவது தர்மம் மிகவும் கீழ் நோக்கிச் செல்வதைக் காண்கிறோம்.
13.மாபாரதத்தில் பழமையான சொற்கள் இருப்பதைக் கொண்டும், ராமாயணத்தில் எளிமையான சொற்கள் இருப்பதைக் கொண்டும் சிலர் மாபாரதமே பழையது என்பர். உண்மையில் வியாசர் வேதத்தைக் கரைத்துக் குடித்தவர். அதைத் தொகுத்தவர்; நான்காகப் பகுத்தவர். ஆகையால் வேத காலச் சொற்கள் அவர் நாவில் நடமாடியதில் வியப்பதற்கொன்றும் இல்லை. மேலும் பழைய காலத்தில் இருந்த பல விஷயங்கள் அழியக் கூடாதென்பதற்காக அவர் காலத்தில் நிலவிய அத்தனை விடயங்களையும் மாபரதக் கதையில் பின்னிப் பிணைந்தவர் வியாசர். ஆகையால் பழமையையும் புதுமையையும் ஒருங்கே காணலாம்.
14.மாபாரதத்தில் ஆக்கியானம், உபாக்கியானம் எனப் பிரிவுகள் உண்டு. ராமோபாக்கியானமும் அதில் ஒன்று. இது போல ஏராளமான கதைகள் சொருகப்பட்டுள்ளன. ஆனால் ராமாயனத்திலோ உப கதைகள்— வேறு கதைகள்– சொருகப்படவில்லை. காண்டம், சர்கம் என்று பிரித்து சொல்லவந்த ஒரே காவியத்தை மட்டும் வரைந்தார் வால்மீகி.
- மாபாரதத்தில் ஜோதிஷம், வைத்தியம்,வானசாத்திரம், தனுர்வேதம் முதலியன வளர்ச்சி அடைந்த நிலையில் காணப்படுகின்றன.. இது தவிர பல நுணுக்கமான விஷயங்கள் உள்ளன. அவைகளை இன்னொரு கட்டுரையில் காண்போம்.






