ராமகிருஷ்ண கதாம்ருதம்
Written by S NAGARAJAN
Post No.2228
Date: 9 October 2015
Time uploaded in London: 9-20 AM
Thanks for the pictures.
Don’t use pictures. Don’t reblog for at least a week.
By ச.நாகராஜன்
பரமஹம்ஸர் கூறிய மூன்று மந்திரங்கள்
தர்மம் மிக நுட்பமானது. சூட்சுமமானது. பெரியோர்கள் கூட தர்ம விஷயத்தில் திகைக்கின்றனர்.
அயோக்கியர்கள் நிறைந்த உலகம் இது, அடிக்கடி வந்து தொந்தரவு செய்கின்றனர். அஹிம்சை வழியைப் பின்பற்றி பேசாமல் நடந்து சென்றால் கலி யுகத்தில் நம் பிழைப்பு ஓடுமா? அவர்களை அடிப்பதா? அல்லது நாம் ஓடி வந்து விடுவதா?
ஆகவே தான் இந்த மாதிரி சந்தேகங்களைத் தீர்க்க பெரியோர்களை நாடுங்கள், அவர் கூறுவதே தர்மம் எனத் தெளியுங்கள் என நமது அற நூல்கள் கூறுகின்றன.
இந்த வகையில் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் போகிற போக்கில் ஏராளமான ரகசியங்களைக் கூறிக் கொண்டே வந்திருக்கிறார். அதை நல்ல வேளையாக விவேகானந்தர், மகேந்திரநாத் குப்தா (எம்), பரமஹம்ஸரின் இதர சீடர்கள் வரி வரியாகத் தொகுத்து நம்மிடம் தந்துள்ளனர்.
மகேந்திரநாத் குப்தா அவற்றையெல்லாம் தம்மிடம் நாடி வந்த பக்தர்களுக்கு அவ்வப்பொழுது தெளிவாகச் சொல்லி வந்துள்ளார்.
ஒரு நாள் தன் சீடர்களிடம் அவர் கூறியது பரமஹம்ஸரின் மூன்று மந்திரங்களைப் பற்றி!
பக்தர் ஒருவர் பரமஹம்ஸரிடம், “என்ன பாவம் செய்தேன் நான்! என்னுடைய தட்டில் இருந்த மீனை பூனை கவ்விக் கொண்டு சென்று விட்டது. அதை என்னால் தடுக்கவே முடியவில்லை” என்றார். அதைக் கேட்டு உறுதியான குரலில் பரமஹம்ஸர் கூறினார்:” அது ஏன் அப்படி இருக்க வேண்டும்? ஒரே ஒரு தடவை அதை அடி! உன் அடி ஒன்றும் பூனையைக் கொன்று விடாது!”
பக்தர் தன்னை பரமஹம்ஸர் வெகுவாகப் பாராட்டுவார் என்று நினைத்திருந்தார். பாவம், அவர் ஏமாந்தே போனார்!
மோசமான நபர்கள் உள்ள உலகத்தில் வாழ பரமஹம்ஸர் மூன்று தாரக மந்திரம் போன்ற வழிகளைச் சொல்லி உள்ளார்.
அனுமதி; சீறு; தள்ளி நில்!
அதை பரம(ஹம்ஸ) ரகசியம் என்றே சொல்லலாம்! 1) முதலில் கொஞ்சம் சலுகை கொடு, அதாவது அனுமதி! 2) அப்புறம் சீறு 3)தள்ளி நில் இவையே அந்த மூன்று ரகசியங்கள்.
நல்லதும் கெட்டதும் கலந்ததே உலகம். அதில் வாழும் மனிதர்களும் அப்படியே தான். அவர்களிடம் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். முதலில் எதைச் செய்யவும் அனுமதி அல்லது சலுகை தரலாம். ஆனால் அது தீமை பயக்கும் விதத்தில் இருக்குமானால் சீறத்தான் வேண்டும். அடிதடி போன்ற வன்முறை இல்லாவிட்டாலும் கூடச் சீறித்தான் ஆக வேண்டும். அப்படிச் செய்ய பிடிக்கவில்லை எனில் மரத்தடியில் சென்று உட்கார்ந்து ஹரி நாமம் ஜெபிக்க வேண்டியது தான்! ஆனால் உலகத்தில் வாழ வேண்டுமென்றால் சீறினால் தான் முடியும்.
மூன்றாவதாக, “ஒரு மனிதனிடம் ஏராளமான குறைகளைக் கண்டால் என்ன செய்வது? அவனைத் தூர இருந்து சல்யூட் செய்! டைகர் நாராயணனுக்கு எப்படி மனிதர்கள் வணக்கம் செலுத்துகிறார்களோ, அதே போல! அந்த நாராயணனுக்கும் நமஸ்காரம் செய்ய வேண்டியது தான் – ஆனால் தூரத்திலிருந்தே செய்ய வேண்டும். அது உன்னை அடித்து முழுங்கி விடாத தூரத்தில் நீ இருக்க வேண்டும்! அதாவது தள்ளி நில்!” என்கிறார் அவர்!
இதைச் சொன்ன மகேந்திரநாத் குப்தா, பரமஹம்ஸர் இதையெல்லாம் ஏன் சொல்ல வேண்டும் என்று கேட்டு விட்டு, அப்போது தான் தன்னை அண்டிய பக்தர்கள் அமைதியாக வாழ்க்கையைக் கழிக்க முடியும், அமைதியாக இருக்கும் வாழ்க்கையில் தான் கடவுளைப் பற்றி அதிகமாகச் சிந்தித்து துதிக்க முடியும் என்பதனால் தான் அவர் இப்படி அருளியுள்ளார் என்று கூறினார்.
“The first thing necessary is a quiet and peaceful life. If I have to go about the world the whole day to make a living, it is hard for me to attain anything very high in this life”” என்று ஸ்வாமி விவேகானந்தரும் இதையே வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இப்படி எல்லாம் வழி காட்டி வந்ததால் தான் பரமஹம்ஸரை கருணா சமுத்திரம் என்று அழைக்கிறோம் என்று மகேந்திரநாத் குப்தா உணர்ச்சி பொங்கக் கூறினார்.
அவருடைய சீடர்களுக்கு உலகியல் வழியில் தெளிவு ஏற்பட்டது. நமக்கும் தான்!
***********


You must be logged in to post a comment.