
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7979
Date uploaded in London – 15 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
பொய்கை ஆழ்வாரின் அற்புத சொல்வீச்சு

சம்ஸ்க்ருதத்தில் பாணினி என்ற இலக்கண வித்தகனும் தமிழில் தெய்வப்புலவர் திருவள்ளுவனும் சொற்களைக் குறைவாகப் பயன்படுத்தி நிறைய பொருள்களை வழங்கினர்.
‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ (Brevity is the soul of wit) என்ற கலையில் வல்லவர்கள் . அவ்விருவரும் . அவர்களுக்குப் போட்டியாக வருகிறார் பொய்கை ஆழ்வார். இவர் கி.பி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் . அவர் பாடிய ஒரு பாடலில் கிருஷ்ண பரமாத்மாவின் பத்து லீலைகளை அடுக்கி, அந்த பத்து லீலைகளுக்கும் விளக்கம் தரும் வினைச் சொற்களை (Verbs) தனியே அடுக்குகிறார்
ஒரு சிறுவனுக்கு அவனது பாட்டியோ, அம்மாவோ கிருஷ்ணனின் பத்து லீலைகளையும் விவரித்துக் கூறு வதற்கு சிலமணி நேரமாவது ஆகும். ஆனால் பொய்கையை ஆழ்வாரோ ஒரே மூச்சில் சொல்லி விடுகிறார். வானவில்லின் ஏழு நிறங்களை நினைவிற் வைத்துக்கொள்ள, பள்ளிக்கூட விஞ்ஞான ஆசிரியர்கள் ‘விப்ஜியார்’ VIBGYOR என்ற ஆங்கில (Acronym) எழுத்தை சொல்லித் தருவார். அதிலுள்ள ஒவ்வொரு எழுத்துமொரு வண்ணத்தைக் குறிக்கும். அதேபோல பொய்கை ஆழ்வார் சுருக்கெழுத்தில் பத்து வினைச் சொற்களைத் தொடுக்கிறார். இதோ முதல் திருவந்தாதியில் வரும் அந்தப் பாசுரம் :–
அரவம், அடல் வேழம் ,ஆன் , குருந்தம், புள் வாய்,
குரவை, குடம், முலை, மல், குன்றம் – கரவு இன்றி
விட்டு, இறுத்து , மேய்த்து,ஒசித்து , கீண்டு, கோத்து , ஆடி, உண்டு,
அட்டு, எடுத்த – செங்கண் அவன்
நாலாயிர திவ்ய பிரபந்தம் – பாடல் 2135
பொருள் —

கொம்பை முறித்து , பசுக்கள் மேய்த்து, குருந்த மரத்தை முறித்து, புல்லின் வாய் பிளந்து, குரவை கோத்து குடக் கூத்தாடி, , பூதனையின் முலையை உண்டு, மல்லர்களைக் கொன்று , மலையை எடுத்துப் பிடித்து அரியன செய்தவன் திருமால்.
விளக்க உரை
செந்தாமரைக் கண்ணனாகிய அவன் மறைவு இன்றி காளிய நாகத்தை விட்டடித்தும் ,ஏவி விடப்பட்ட குவளயா பீடம் என்ற யானையின் தந்தத்தை முறித்து அதைக் கொன்றும் , பசுக்களை மேய்த்தும், குருந்த மர வடிவில் வந்த அசுரனை ஒடித்து அழித்தும், பகாசுரன் வாயைப் பிளந்தும், இடையர் குலப் பெண்களோடு கை கோர்த்து குரவை ஆடியும் , குடங்களை தலையில் வைத்து ஆடியும், கொல்ல வந்த பூதனையின் முலையை உறிஞ்சி அவளைக் கொன்றும் , கம்சனால் ஏவப்பட்ட மல்லர்களைக் கொன்றும் , இடைக்குல மக்களை பெரும் மழையிலிருந்து காப்பாற்ற கோவர்த்தன மலையையே குடையாகப் பிடித்தும் அருள் பாலித்தான் .
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
ஈற்றடியில் ‘எடுத்த’ என்றது –’ அன்’ சாரியை பெறாத பலவின் பாற்பெயர்; சாரியை பெறின் ‘எடுத்தன’ என நிற்கும். இப் பாட்டில், அரவு முதலிய பெயர்ச்சொற்கள் ‘விட்டு’ முதலிய வினைச் சொற்களை முறையே சென்று இயைதலால் முறை நிரனிறையாம்; இதை வடமொழியில் ‘யதாஸங்க்யாலங்காரம்’ என்றும், தென்மொழியில்’ நிரனிறையணி’ என்றும் அலங்கார சாஸ்திரிகள் கூறுவர்.
English Translation
The Lord reveals himself in his various acts; he let go the snake kaliya, killed the elephant kuvalayapida, graced the cows, broke the kurundu trees, ripped the bird’s beaks, danced the kuravai with Gopis, played with pots as an acrobat, drank the poison breast, wrestled with killers, and lifted the mount, Out senkammal Lord is he !”
Source :-
நாலாயிர திவ்ய பிரபந்தம்

பாணினியுடன் ஒப்பீடு
பாணினி சூத்ரம் ஒன்றை எடுத்துகாட்டக பார்ப்போம் :_
அஷ்டாத்யாயி 2-3-16
நமஹ ஸ்வஸ்தி, ஸ்வாஹா ஸ்வதா அலம் வஷட் யோகாத்ச
பிற் காலத்தில் வந்த விளக்க உரை –
நமஹ, ஸ்வஸ்தி, ஸ்வாஹா, ஸ்வதா, அலம், வஷட் ஆகிய சொற்களோடு
நிற்கும் பெயர்ச் சொல்லோடு நான்காம் வேற்றுமை உறுப்புகளை இணைக்கவேண்டும்
எடுத்துக் காட்டுகள் —
நமோ தேவேப்யஹ – வணக்கம் தேவர்களுக்கு
சுவாஹா அக்நயே – அர்ப்பணம் அக்கினிக்கு
ஸ்வஸ்தி ப்ரஜாப்யஹ – நன்மை குடிகளுக்கு = குடிகளுக்கு நன்மை உண்டாகட்டும் .
ஸ்வதா பித்ருப்யஹ – அர்ப்பணம் பித்ருக்களுக்கு
அலம் , பிரபு, க்தஹ – மல்லோ மல் லாய= மல்லனுக்கு மல்லன் ஏற்றவன்- சரியான ஜோடி
வஷட் அக்நயே – அக்கினிக்கு இது
Source book
பாணினியின் அஷ்டாத்யாயி, பகுதி 1, முனைவர் கு.மீனாட்சி , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 600 113

tags — பாணினி பொய்கை ஆழ்வார் , சொல் வீச்சு ,