கிணற்றுத் தவளை: அப்பரும் விவேகாநந்தரும் சொன்ன கதைகள்

snake frog1

கட்டுரையாளர் : லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:896 தேதி 8-2-14

அமெரிக்காவில் உலக சர்வமத மாநாட்டில் பேசி அனைவரையும் கவர்ந்த சுவாமி விவேகானந்தர், அற்புதமான ஆங்கிலத்தில், சொன்ன முதல் கதை கிணற்றுத் தவளைக் கதைதான். இந்தக் கதை பாரதத்தில் இமயம் முதல் குமரி வரை இருந்ததற்கு ஆதாரம் பழமொழி நானூறு நூலில் உள்ளது:–

உணற்கினிய வின்னீர் பிறிதுழியில் லென்னும்
கிணற்றகத்துத் தேரை போலாகார் – கணக்கினை
முற்றப் பகலும் முனியாது இனிதோதிக்
கற்றலிற் கேட்டலே நன்று – (பழமொழி நானூறு)

பொருள்: உண்ணுதற்குத் தகுந்த இனிய நீர் வேறிடத்தில் இருக்காது என்று என்னும் கிணற்றுத் தவளை போல இருக்காமல், நூலினை வெறுக்காமல் நாள் முழுதும் கற்பதைக் காட்டிலும் கேள்வி ஞானம் மிக்ச் சிறந்தது ஆகும்.

snakefrog2

சுவாமி விவேகாநந்தர் சொன்ன கதை

ஒரு கிணற்றில் ஒரு தவளை நீண்ட காலம் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் கடலில் வசித்து வந்த ஒரு தவளை அந்தக் கிணற்றில் விழுந்தது. உடனே அந்தத் தவளையைப் பார்த்து ‘’நீ எங்கிருந்து வருகிறாய்?’’ என்று கேட்டது. ‘’நான் கடலில் இருந்து வருகிறேன்’’ என்று சொன்னவுடன் கடல் எவ்வளவு பெரியது என்று கேட்டது. அது மிகப் பெரியது என்று கடல் தவளை சொன்னது. கிணற்றுத் தவளை, அந்தக் கிணற்றின் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்துக்குத் தாவியது. இவ்வளவு பெரிதாக இருக்குமா என்று கேட்டது. கடல் தவளை, ‘’கடல் என்பது மிகப் பெரியது’’ என்று சொன்னவுடன் மீண்டும் ஒருமுறை பழைய இடத்துக்குத் திரும்பித் தாண்டியது. இவ்வளவு பெரிதாக இருக்குமா? என்று கேட்டது.

கடல் தவளை, ‘’நீ என்ன முட்டாள் மாதிரி பேசுகிறாய்? கடல் மிக மிகப் பெரியது’’ என்று சொன்னது. உடனே என் கிணற்றை விடப் பெரியதாக ஒரு இடம் இருக்க முடியாது என்று சொல்லி அந்தத் தவளையைப் பொய்யன் என்று கூறி வெளியேறச் சொன்னது. இப்படித்தான் நாம் ஒவ்வொரு மதத்தினரும் இருக்கிறோம். அவரவர் கிணற்றுத் தவளையாக இருக்கிறோம். நான் இந்துக் கிணற்றிலும், கிறிஸ்தவர்கள் அவர்கள் கிணற்றிலும், முஸ்லீம்கள் அவர்கள் கிணற்றிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவரவர்கள் அவர்கள் கிணறே உலகம் என்றிருக்கிறோம். இந்தச் சிறிய உலகத்தின் தடைகளைத் தகர்த்தெரிய இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த அமெரிக்காவுக்கு நன்றி கூறுகிறேன். உங்கள் முயற்சிகள் வெற்றியடைய கடவுள் உதவட்டும்’’ என்றார் சுவாமி விவேகாநந்தர் 150 ஆண்டுகளுக்கு முன்.

இதையே நால்வரில் ஒருவரான அப்பர் பெருமான் ஆமையாக உருவகித்துச் சொல்லுகிறார்.

அப்பர் சொன்ன கதை
மேலே உள்ள கதையில் தவளை என்பதற்குப் பதிலாக கடல் ஆமை, கிணற்று ஆமையைச் சந்தித்ததாக அப்பர் பாடிய பாடல் இதோ:
கூவல் ஆமை குரைகடல் ஆமையைக்
கூவலோடு ஒக்குமோ கடல் என்றால்போல்
பாவகாரிகள் பார்ப்பதரிது என்பரால்
தேவதேவன் சிவன் பெருந்தன்மையே — (ஆதிபுராணத் திருக்குறுந்தொகை)
snakefrog3

கிணற்றில் வசிக்கும் ஆமை, கடல் ஆமையைப் பார்த்து உன் கடல் இந்தக் கிணறு அளவுக்குப் பெரிதாக இருக்குமா? என்று கேட்டது போல பாவம் செய்வோருக்கு சிவனுடைய பெரிய தன்மையை அறிய முடியாது.

பாம்பின் வாய் தேரை போல

அப்பர் (திருநாவுக்கரசர்) தேவாரத்தில் பாம்பின் வாய் தேரை போலக் கஷ்டப் படுகிறேனே என்று பாடுகிறார்.
அப்பர் கண்ட மற்றொரு காட்சி. பாம்புகள் சீறிப் பாய்ந்து தவளைகளப் பிடித்து தின்ற காட்சி. ‘’நுணலும் தன் வாயால் கெடும்’’ என்பர். தவளையே சப்தம் போட்டு பாம்புகளுக்குத் தாங்கள் இருக்கும் இடத்தைப் பறை அறிவிக்கின்றன. அவைகளின் வாயில் சிக்கிய தவளைகள் என்னதான் முயன்றாலும் பாம்பின் வாயில் இருப்து தப்பித்ததே இல்லை. அது போல,

ஓம்பினேன் கூட்டை வாளா
உள்ளத்தோர் கொடுமை வைத்துக்
காம்பிலா மூழை போலக்
கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின்வாய்த் தேரை போலப்
பலபல நினைக்கின் றேனை
ஓம்பிநீ உய்யக் கொள்ளாய்
ஒற்றியூ ருடைய கோவே (நாலாம் திருமுறை,454)

இதையே திருஞான சமபந்தப் பெருமான் இன்னும் கொஞ்சம் காட்சிகளைச் சேர்த்துப் பாடுகிறார்:
“செடிகொள் நோய் ஆக்கை ஐம்பாம்பின் வாய்த் தேரைவாய் சிறு பறவை கடிகொள் பூந்தேன் வைத்து இன்புறலாம் என்று கருதினாயே (இரண்டாம் திருமுறை, 860)

snake-frog

பாம்பின் வாய்க்குள் தவளை இருக்கிறது. தவளை வாய்க்குள் தேனீ அல்லது இருக்கிறது. அதன் வாய்க்குள் தேன் இருக்கிறது. அதைப் போய் சாப்பிட எண்ணுகிறதே தேனீ ! என்கிறார். எது உண்மை இன்பம் என்று அறியாது போலி இன்பங்களைக் கண்டு ஏமாறும் மனதையும் அதனால் ஏற்படும் துயரங்களையும் காட்டும் அருமையான சினிமாக் காட்சி இது. நம் ஊர் திரைப்பட டைரக்டர்கள் கூட ஒரு காட்சியை இப்படிக் காட்ட முடியாது!!

frogcrocodile

இப்படி எத்தனையோ காட்சிகள் ! உவமைகளைக் கையாளுவதில் உலகப் புகழ்பெற்ற உவமை மன்னன் காளிதாசனுக்கு மிக நெருங்கி வருகிறார் அப்பர் பெருமான்!

swami_48@yahoo.com