
Written by S NAGARAJAN
Date: 13 July 2017
Time uploaded in London:- 5-44 am
Post No.4076
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
பாரதி இயல்
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 34
பாரதியாரின் தம்பி – பரலி சு.நெல்லையப்பரின் வாழ்க்கைச் சித்திரம்
ச.நாகராஜன்
பாரதியாருடன் தொடர்பு கொண்டவர்களில் குறிப்பிடத்தகுந்தந்தவர் பரலி.சு.நெல்லையப்பர்.
இவரைப் பற்றிய இந்த நூல் சிறிதென்றாலும் (80 பக்க நூல்) சிறப்பானது. பல முக்கிய விஷயங்களைத் தரும் அரிய நூலாக அமைகிறது.
இதை எழுதியவர் பாரதி அன்பர் எதிரொலி விசுவநாதன் (திருவாரூர் சு.விசுவநாதன்)
பரலி சு.நெல்லையப்பர் வாழ்ந்த காலத்தில் வெளிவந்த நூல் இது.செப்டம்பர் 1969இல் முதல் பதிப்பைக் கண்டது.
18 அத்தியாயங்களில் பாரதியார் பற்றிய பல முக்கிய செய்திகளை அறிந்து கொள்கிறோம்.
நூலில் வரும் சில முக்கிய செய்திகளைப் பார்ப்போம்.
மகாகவி பாரதியார் பிறந்து ஏழு வருடங்களுக்குப் பின் அம்மகாகவியின் பெருமையை நாட்டிற்குணர்த்த இருவர் அடுத்தடுத்துத் தோன்றினர். ஒருவர் வ.ராமசாமி ஐயங்கார். 1889 செப்டம்பர் 17ல் தோன்றியவர்.அடுத்தவர் பரலி.சு.நெல்லையப்பர் 1889 செப்டம்பர் 18ல் தோன்றியவர்.
என்ன ஒரு அதிசயம். இருவரும் அடுத்தடுத்த நாளில் பிறந்திருக்கின்றனர்!
1908ஆம் ஆண்டு ஒரு நாள் காலை பத்து மணிக்கு வ.உ.சிதம்பரனாரின் வீட்டுக்கு வந்த பாரதியார் எதிர்பாராதவிதமாக பிள்ளையார் வீட்டின் முன் பகுதியில் அமர்ந்திருந்த நெல்லையப்பரின் கையைப் பற்றி ‘ஓய்- நம்மோடு வாரும்’ என்றவாறு வெளியே இழுத்துக் கொண்டு சென்றார்.
இது தான் அவரது முதல் சந்திப்பு!
*
சிதம்பரனார் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டித்து நெல்லையப்பர் ஒரு கட்டுரையை பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு அனுப்ப அது இந்தியாவில் பிரசுரிக்கப்பட்டு அதன் பிரதி ஒன்று அவர் வீட்டிற்கு வந்தது
*
புதுவைக்குச் சென்ற நெல்லையப்பர் அங்கு சூரியோதயம் பத்திரிகையில் வேலை செய்ய ஆரம்பித்தார். பாரதியின் வீட்டிலேயே (கலவை பங்களாவை விட்டு) தங்க ஆரம்பித்தார்.
*

அரவிந்தர் புதுவைக்கு டூப்ளே என்ற கப்பல் மூலம் பகல் ஒரு மணிக்கு வந்த போது பாரதியார் சீனுவாசாச்சாரியோரோடு நெல்லையப்பரும் அவரை வரவேற்கும் பேறு பெற்றார். நெல்லையப்பர் குடை பிடித்தார். பாரதியாரும் சீனுவாசாச்சாரியாரும் அரவிந்தர் பக்கத்தில் வந்தார்கள்.
அரவிந்தரும் பாரதியாரும் ஆங்கிலத்திலேயே உரையாடுவார்கள்.இடையிடையே எழும் சிரிப்பொலிகள் அவர்களின் தோழமையை எடுத்துக் காட்டும். அரவிந்தருக்குப் பிறகே வ.வே.சு. அய்யர் புதுவை வந்து சேர்ந்தார்.
*
திருப்பள்ளி எழுச்சி சூரியோதயம் பத்திரிகையில் வெளியானபோது முதற் பாட்டில் இரண்டாவது அடியாக,
எழும் பசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியத றிவெனும் பரிதி
என்பதில் கடைசியான பரிதி என்ற சொல்லை மாற்றி இரவி என்ற சொல்லைப் போட்டால் அழகாக இருக்குமென்றும், மேலே பரவி என்றிருப்பதால் அதனையடுத்து இரவி என்றிருந்தால் ஓசைநயம் சிறப்பாக இருக்குமென்றும் பாரதியாரிடம் நெல்லையப்பர் சொன்னார். பாரதியார் உடனே இரவி என்ற சொல்லை ஏற்றுக் கொண்டார். இப்படி ஏற்றுக் கொண்டதன் மூலம் பாரதியார் நெல்லையப்பருக்கு தமிழ் ஆர்வத்தையும், ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தினார்.
*
1917ம் ஆண்டில் கண்ணன் பாட்டு இரண்டாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டது. அச்சிட்ட கண்ணன் பாட்டுப் புத்தகங்களில் ஒரு பகுதியை நெல்லையப்பர் புதுச்சேரியிலிருந்த பாரதியாருக்கு அனுப்பி வைத்தார்.
பாரதியாரின் முழுநூல் ஒன்று புத்தக வடிவம் பெற்று முதன் முதலில் வெளிவந்தது குறித்து பாரதியார் பரமானந்தம் அடைந்தார். ஏதோ செயற்கருஞ்செயல் செய்த தீரனாக நெல்லையப்பரைப் போற்றினார்.
கண்ணன் பாட்டுக்கு அடுத்தபடியாக நாட்டுப் பாட்டு,முரசுப் பாட்டு, பாப்பாப் பாட்டு என்ற மூன்றும் நெல்லையப்பரால் பதிப்பிக்கப்பட்டது. 12 பக்கங்கள் கொண்ட முரசுப் பாட்டின் விலை அரையணா தான்.
**
நெல்லையப்பர் பதிப்பித்த நூல்களின் விவரங்களை விளக்கமாக இந்த நூலில் காணலாம்.
பாரதியாரின் கடைசி நாளான 1921ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியன்று தான் பாரதியார் நோய்வாய்ப்பட்டிருந்த விஷயம் நெல்லயப்பருக்கு எட்டியது. நெல்லையப்பர் திருவல்லிக்கேணி மாடவீதியில் குடியிருந்த டாக்டர் ஜானகிராம் என்பவரை அழைத்துக் கொண்டு வந்து பாரதியாரின் உடல் நிலையைக் கவனித்தார். ஆனால் பாரதியார் தனக்கு எந்த மருந்தும் வேண்டாமென்று டாக்டரிடம் கண்டிப்பாகக் கூறிவிட்டார். அன்றிரவெல்லாம் பாரதியார் மயக்க நிலையிலேயே கிடந்தார். நெல்லையப்பரும் அவருடைய நண்பர் லட்சுமண அய்யர் என்பவரும் இரவு முழுவதும் பாரதியார் பக்கத்திலேயே அமர்ந்திருந்தார்கள். பாரதியார் படுக்கையிலிருந்து அடிக்கடி எழுவதும் மீண்டும் படுப்பதுமாக எமனுடன் போராடிக் கொண்டிருந்தார். பின்னிரவு சுமார் ஒன்றரை மணிக்கு பாரதியாரின் மூச்சு அடங்கியது.
பாரதியாரின் பொன்னுடலை நெல்லையப்பர், லட்சுமண் அய்யர், ஆர்யா, ஹரிஹரசர்மா ஆகியவர்கள் சுமக்கும் பேறு பெற்றார்கள்
பாரதியாரை மிகச் சரியாகக் கணித்தவர் நெல்லையப்பர்.
“இந்த ஆசிரியன் காலத்திற்குப் பின், எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின், இவர் பாடல்களை தமிழ்நாட்டு மாதர்களும், புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை நான் இப்பொழுதே காண்கிறேன்” என்று இவ்வாறு நெல்லையப்பர் பாரதியாரைப் பற்றி எழுதியிருப்பதே அவர் பாரதியாரின் கவிதா சக்தியை எப்படித் திறம்பட மதிப்பீடு செய்திருந்தார் என்பதற்குச் சரியான சான்று.
*
இந்த சிறிய அழகிய நூலுக்கு நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை முன்னுரை அளித்துள்ளார்.
நாரண துரைக்கண்ணன் சிறப்புரை, வெ.சாமிநாத சர்மா அறிமுக உரை, பாரதியாரின் புதல்வியார் சகுந்தலா பாரதி வாழ்த்துரை, ம.பொ.சி., ராய.சொக்கலிங்கம் வாழ்த்துரை ஆகியவை நூலுக்குப் பெருமை சேர்க்கிறது..
1969ல் வானதி பதிப்பக வெளியீடாக ஒண்ணரை ரூபாய் விலையில் வெளியிடப்பட்ட அரிய நூல் இது.
பாரதி அன்பர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய நூல்களுள் இதுவும் ஒன்று.
எதிரொலி விசுவநாதன் பாரதி இயலுக்குப் பெருமை சேர்த்த பாரதி அன்பராகிறார்.
****
அடுத்து இன்னொரு பாரதியார் பற்றிய நூலைக் காண்போம்.