ரா.பி.சேதுப்பிள்ளையின் பாரதி கட்டுரைகள்! (Post No.4198)

Written  by S.NAGARAJAN

 

Date: 10 September 2017

 

Time uploaded in London-5-29 am

 

Post No. 4198

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

பாரதி இயல்

செபடம்பர் 11 – பாரதியார் நினைவு தினம். அதையொட்டிய சிறப்புக் கட்டுரை!

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 38

ரா.பி.சேதுப்பிள்ளையின் பாரதி பற்றிய கட்டுரைகள்!

 

ச.நாகராஜன்

சிறந்த தமிழ் அறிஞரான ரா.பி.சேதுப்பிள்ளை (1896-1961) திருநெல்வேலியில் உள்ள ராஜவல்லிபுரத்தில் பிறந்தவர்.

சாஹித்ய அகாடமியின் விருதை முதன் முதலில் -1955ஆம் ஆண்டில் – பெற்ற தமிழர். ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை மிக்க அவர் ஒரு வக்கீலாக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிந்தார். பின்னர் மதராஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் பணியாற்றினார். அவரது உரை நடையில் தமிழ் விளையாடும். பல நூல்களைப் படைத்தவர் அவர்.

கடற்கரையிலே என்ற அவரது நூலில் தமிழ் அறிஞர்கள் கடற்கரையில் ஆற்றும் உரைகள் அற்புதமானவை. கடற்கரையிலே என்ற அவரது நூலில் பாரதியாரின் உரையும் ஒன்று..

அதிலிருந்து சில பகுதிகள்:

“நல்லோர் போற்றும் அல்லிக்கேணியே! உன் மலர்க்கேணியின் அழகைக் கண்டுதான் மாமுகில் வண்ணன் அதனருகே கோயில் கொண்டானோ? அன்று பஞ்சவருக்குத் துணை புரிந்த அஞ்சன வண்ணன் – பார்த்தனுக்குப் பாகனாகிய பரந்தாமன்- அறப்பெருந் துணைவன் – அடியார்க்கு எளியன் – நின்னகத்தே நின்று அருள் புரிகின்றான். அந்தக்

“கண்ணைக் கண்டேன் – எங்கள்
கண்ணனைக் கண்டேன் மணி
வண்ணனை ஞான மயிலினைக் கண்டேன்.”


“தொல்புகழ் வாய்ந்த அல்லிக்கேணியே! இந்நாளில் உன் அருமையை அறிவார் யார்? உன் கடற்கரையில் அன்று தமிழ்த் தென்றல் தவழ்ந்தது; இன்று மேல் காற்று வீசுகின்றது. அன்று உன் அரங்கத்தில் எங்கள் தமிழன்னை ஆனந்த நடனம் புரிந்தாள்; இன்று, ஆங்கில மாது களியாட்டம் ஆடுகின்றாள். அவளுடைய வெள்ளை நாவிலே தெள்ளிய தமிழ் வளம் ஏறுமா? அவள் இறுமாந்த செவியிலே தேமதுரத் தமிழோசை சேருமா? அந்தோ! திருவல்லிக்கேணியே! வேற்றரசின் கொடுமையால், நீ சீர் இழந்தாய்; பேர் இழந்தாய்; ‘திரிப்பளிக்கே’னாகத் திரிந்துவிட்டாய்!

“அல்லிக் கருங்கடலே! உன் அழகமைந்த கரையிலே, வெள்ளையர் விளையாடித் திரிகின்றார்; வெறியாட்டயர்கின்றார்; உலாவுகின்றார்; குலாவுகின்றார். அவரைக் கண்டு அஞ்சி, நம்மவர் நெஞ்சம் குலைகின்றாரே! சிப்பாயைக் கண்டால் அச்சம்; துப்பாக்கியைக் கண்டால் நடுக்கம்; சட்டைக் காரனைக் கண்டால் குட்டிக் காரணம். இப்படி வாழ்வதும் ஒரு வாழ்வாகுமா? பிறந்த நாட்டில் பிறர்க் கடிமை செய்தல் பேதைமை யன்றோ?

“அறப்பெருங் கடலே! வீர சுதந்தர வேட்கை இந் நாட்டிலே வேரூன்றி விட்டது. இனி அதை அசைக்க எவராலும் ஆகாது. வந்தேமாதரம் என்ற மந்திர மொழியால் பாரத நாட்டைத் தட்டி எழுப்பிய பாலகங்காதர திலகரை அரசாங்கத்தார் சிறையில் மாட்டலாம். தென்னாட்டுத் திலகர் என்று பேர் பெற்ற எங்கள் சிதம்பரனாரைச் சிறைக் கோட்டத் தில் அடைக்கலாம்; செக்கிழுக்க வைக்கலாம்; துச்சமாக எண்ணித் தூறு செய்யலாம். ஆயினும், அவர் மூட்டிய கனல் வெள்ளையர் ஆட்சியை வீட்டியே தீரும்!

“சொந்த நாட்டில் பிறர்க்கடி மைசெய்தே
துஞ்சிடோம – இனி அஞ்சிடோம்”

என்ற வீர சுதந்தர வேகத்தை நிறுத்த யாரால் முடியும்? எரிமலையைத் தடுக்க – அதன் வாயை அடைக்க – எவரால் இயலும்?

*

தமிழ் இன்பம் என்ற அவரது நூலில் எட்டாம் பகுதி பாரதியார் பாட்டின்பம் என்ற தலைப்பைக் கொண்டதாகும். இப்பகுதியில் செந்தமிழ் நாடு, முப்பெரும் கவிஞர், கலையின் விளக்கம், பண்டாரப் பாட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து ஆகிய ஐந்து கட்டுரைகள் உள்ளன. அனைத்துமே அருமையானவை.

சில பகுதிகளை இங்கு காணலாம்:

“செந்தமிழ் நாடு” என்ற கட்டுரையிலிருந்து :-

 

“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே”


என்று கவிஞர் அழகாக எடுத்துரைத்தார். செந்தமிழ் நாடு என்று சொல்லும்பொழுது தென் தமிழின் தீந்தேன் செவிகளில் விரைந்து பாய்ந்து நிரம்புகின்றது. தாயின் செவிகளில் விரைந்து பாய்ந்து நிரம்புகின்றது. தாயின் இனிமையும் அன்பும் செந்தமிழ் நாடு என்னும் பெயரில் அமைந்திருத்தலால், நம் செவியின் வாயிலாக இன்பத்தேன் வந்து பாய்வதாகும். இத் தமிழ் நாட்டில் வாழ்ந்த அறிஞர், இனிமையும் தமிழும் வேறென்று அறிந்தாரல்லர்; தமிழ் என்னும் பதத்திற்கே இனிமை என்ற பொருள் கண்டார்கள். இத் தகைய இனிமை வாய்ந்த தமிழ் ஒலி, இன்னொலியாய், இன்ப ஒலியாய், ஆனந்தத் தேன் சொரியும் அழகிய ஒலியாய் இனிமை பயப்பது இயல்பே யன்றோ? இன்னும், இந் நாட்டைத் தந்தை நாடென்று கருதும் பொழுது, அத் தந்தையின் மக்களாய்ப் பிறந்த நமது உரிமை, மனத்தில் முனைந்து தோன்றவதாகும். இவ்வுரிமைக் கருத்து உள்ளத்தைக் கவரும்பொழுது வீரம் கிளம்புகின்றது. தாயை அன்பின் உருவமாகவும், தந்தையை வீரத்தின் வடிவமாகவும் கருதிப் போற்றுதல் தமிழ் வழக்காகும். அந்த முறையில் தமிழ்நாட்டைத் தாய் நாடு என்று நினைக்கும் பொழுது அன்பினால் இன்பம் பிறக்கும்; தந்தை நாடு என்று கருதும்போது, ஆண்மையால் வீரம் பிறக்கும். இவ் வுண்மையை உணர்த்தக் கருதிய பாரதியார், முதலில் தாயன்பை அமைத்து, பின்பு தந்தையின் வீரத்தைப் பேசும் முறை, அறிந்து போற்றுதற்குரியதாகும்.

*

தமிழ்த் தாய் வாழ்த்து என்ற கட்டுரையின் இறுதிப் பகுதி இது:-

ஆங்கிலம் முதலிய மேலை நாட்டு மொழிகளையறிந்த மாணவர் கடமையைப் பாரதியார் பண்புறக் கூறுகின்றார்; பிற நாட்டு நல்லறிஞர் இயற்றிய புத்தம் புதிய கலைநூல்களைத் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும். அக் கலைகளிலமைந்த புதிய கருத்துகளை உணர்த்தும் பெற்றி வாய்ந்த பழந்தமிழ்ச் சொற்கள் பண்டைப் பனுவலிற்பதிந்து கிடக்குமாயின் அவற்றை அகழ்ந்தெடுத்து வழக்காற்றில் உய்த்தல் வேண்டும். புதிய சொற்கள் வேண்டுமாயின், தமிழ்ச் சொல்லாக்க முறையறிந்து அவற்றைப் பிறப்பித்தல் வேண்டும். நல்ல நூல்களை மொழி பெயர்த்தும் நவீன நூல்களை மொழி பெயர்த்தும் நவீன நூல்களை இயற்றியும் மொழியின் கலைச்செல்வத்தைப் பெருக்க வேண்டும். இங்ஙனம் விரைந்து பணிசெய்ய முற்படாது, தமிழ்மொழியின் பழம்பெருமை பேசி மகிழ்வதாற் பயனில்லை. “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை.” ‘கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோடமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த பைந்தமிழ்’ என்று பாராட்டுவதனால் தமிழ் மொழி பரவிவிட மாட்டாது. என்றுமுள தென்றமிழ்’ என்று இறுமாந்து பேசுவதால் தமிழ்மொழி ஏற்றமுற மாட்டாது. ‘சங்கத் திருப்பிலே யிருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை’ என்று வாய்ப்பறை சாற்றுவதால் தமிழ்மொழி வளர்ந்துவிட மாட்டாது. தமிழ்மொழித் தொண்டு செய்யக் கருதும் தகை சான்ற அறிஞர் பழம் பெருமை பேசும் பழக்கத்தை விட்டொழித்து, தமிழ் மொழியின் குறைகளை அறிந்து, பணி செய்ய முற்பட வேண்டும். தமிழ் நாட்டிலமைந்த பல்கலைக் கழகங்கள் மேலை நாட்டுக் கலைகளை மொழி பெயர்க்கும் விழுமிய பணியை மேற்கொள்ள வேண்டும். தமிழன்னை மீண்டும் தலைசிறந்து விளங்கும் காலம் வருமோ என்று ஏங்கித் தளர்பவர் இந் நாளில் பலராவர். இங்ஙனம் தமிழ்ச் சேய்களிற் பலர் மயங்கித் தளர்ந்தாலும் தமிழ்த் தாய் மனம் தளரவில்லை; உரனிழந்த மக்கள் மனத்தைத் தேற்றுகின்றாள்; எத்திசையும் புகழ் மணக்க மீண்டும் தான் ஏற்றமுறும் காலம் அண்மையில் வருமென்று அறிவிக்கின்றாள். ஆதிசிவன் அருளாலும் அறிவறிந்த மக்கள் ஆர்வத்தாலும் வீறுபெற்று விளங்குவேன்’ என்று தமிழன்னை வாயிலாகப் பாரதியார் கூறும் வாய்மொழி கார்மேகத்தினிடையே இலங்கும் கதிரொளியாகும்.

“வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு”.

*

 

ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டிருப்பதால் அவற்றை எளிதில் பெற்று படித்து இன்புற இயலும்.

அவரது நூல்களில் கடற்கரையிலே, தமிழர் வீரம் மற்றும் தமிழ் இன்பம் ஆகிய நூல்களை www.projectmadurai.org   என்ற இணையதளத்தில் படித்து மகிழலாம், இலவசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

ப்ராஜக்ட் மதுரைக்கு தமிழர்களின் நன்றி என்றும் உரித்தாகுக.

ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் பாரதியார் பற்றிய கட்டுரைகள் பாரதி அன்பர்களின் உள்ளங்களை மகிழ்விக்கும் தமிழ்ச் செல்வம் ஆகும்!

படிப்போம், மகிழ்வோம், பாரதி இயல் தொகுப்பில் அவற்றைச் சேர்ப்போம்!

***