
Written by S NAGARAJAN
Date: 2 JULY 2018
Time uploaded in London – 6-24 AM (British Summer Time)
Post No. 5170
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
பாரதி இயல்
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 52
மது.ச.விமலானந்தம் அவர்களின் ‘பாட்டும் சபதமும்’
ச.நாகராஜன்
பாரதி ஆர்வலர் மது.ச.விமலானந்தம் அவர்களின் பாரதி சபதம் நூலைப் பற்றி சென்ற கட்டுரையில் பார்த்தோம். அந்த நூலுக்கு முன்னால் பாட்டும் சபதமும் நூல் வெளியிடப்பட்டது. அவர் குயில் பாட்டை ஆய்வு செய்து எழுதிய நூல் இது. முதற் பதிப்பு 1962ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தஞ்சவூர் பைந்தமிழ்ப் பண்ணை வெளியீடாக வெளி வந்தது. 72 பக்கங்கள் கொண்ட ஆய்வு நூல் இது.
மகாகவி பாரதியார் தாம் சொந்தமாகவே – புதுவதாகவே படைத்தும் உள்ளார்; இருந்த ஒன்றைச் சிறந்த ஒன்றாகச் சமைத்தும் இருக்கிறார். முன்னதற்குச் சான்றாக அமைவது குயில் பாட்டு: பின்னதற்குச் சான்றாக விளங்குவது பாஞ்சாலி சபதம் என்று கூறும் நூலாசிரியர், குயில் பாட்டை,
“பாரதியின் குயில் பாட்டு கதையின் புதையல்,கற்பனை ஊற்று; காதற் சுவையின் கருவூலம், கவிதைக் களஞ்சியம்; வேதாந்தத்தின் வித்து; வித்தகர் தம் சொத்து.பாரதி பாடிய கதை தழுவிய பாட்டு – கதைப் பாட்டு இஃதொன்றே எனலாம்.பாரதியார் தேசீயம், தோத்திரம், வேதாந்தம், காப்பியம், சிறுகதை,கட்டுரை போன்றன பல இயற்றியிருப்பினும், இஃதொன்றே பாரதியின் புதுவது புனைந்த புதுமைப் படைப்பாகும்” என்று புகழ்கிறார்.
“கற்பனையே யானாலும் வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானும் சற்றே இடமிருந்தாற் கூறீரோ” என்று பாரதியார் புதிராக ஒரு கேள்வியைப் போட்டாலும் போட்டார் அதைப் பற்றிய ஏராளமான விளக்கங்கள் இன்று வரை தோன்றிக் கொண்டே இருக்கின்றன.
மது ச.விமலானந்தம் தனது ஆய்வின் படி பல்வேறு விதமாகப் பொருளுரைக்கிறார்.
அவற்றில் சில பகுதிகள் இதோ:
“குயிலியைப் பசுவாகவும், சேர இளவரசனைப் பதியாகவும் கொண்டு, மாடன் நெட்டைக் குரங்கன் இருவரையும் எண்ணி நிற்பது பாசவுணர்ச்சியாகவும்; அது போன்றே இப்பிறப்பில் குயிலைப் பசுவாகவும் (ஆன்மாவாகவும்) பாரதியைப் பதியாகவும்,குரங்கு–மாடு இரண்டையும் நாடுவதைப் பாசமாகவும் கொண்டால்; பசுவாகிய ஆன்மா,பதியாகிய இறைவனை அடைய விரும்புங்காலை, உலகப் பற்றும் பந்தமுமாகிய பாசம் தடைப்படுத்துகின்றது என்ற வேதாந்தக் கருத்து நன்கு விளங்கும்”
“உலகம் பொய்; வாழ்வு நிலையற்றது, பார்ப்பன அனைத்தும் பொய்;பரம்பொருளே மெய், உலகம் ஒரு கனவுக் காட்சி, கனவு முடிந்த பின் கனவுப் பொருள் உண்மையல்ல என்றுணர்வது போன்றே, வாழ்வு முடிந்த பின் உலகப் பொருள் எல்லாம் உலையும் தன்மையன என்கிறது அத்வைதம். இதனைத் தான் பாரதி குயில் பாட்டின் இறுதியில் வைத்து உலகியல் உறுதியாக உணர்த்தியுள்ளாரோ என்று தோன்றுகிறது.”
“சமூகத்தில் உள்ள குற்றங் குறைகளை மக்கள் இனம் கொண்டே எடுத்தோதி நிறை செய்யும் சமூகச் சிறுகாப்பியமாகவும் இக்குயில் பாட்டினைக் கொள்வர்.”
அடுத்து அழகு தமிழ்க்குயில் பாட்டின் அருமை பெருமைகளை வகை வகையாகப் பிரித்து விளக்குகிறார் இந்த நூலாசிரியர்.
வர்ணனை, கற்பனை,காதல், இயற்கை போன்ற பல தலைப்புகளில் குயில்பாட்டின் சிறப்புகள் விளக்கப்படுகின்றன.
கானக்குயிலும் கவிக்குயிலும் என்ற தலைப்பில் மேலை நாட்டுக் கவிஞர்கள் Cuckoo, Skylark, Nightingale போன்ற பறவைகளைப் பாடியதை விரிவாக விளக்கும் நூலாசிரியர் அக்கவிஞர்கள், அவர்கள் பாடிய கவிதைகள் ஆகியவற்றின் பட்டியலையும் தருகிறார்.
வோர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, கீட்ஸ், மில்டன், எஸ்.டி.கூல்ட் ரிஜ், ஜில் வின்செண்ட், ட் ரம்மண்ட், ஜான் கெபிள், க்ராஷா, ஜான் லோகன்,லாம்ப்ஸன், ராபர்ட் ப்ரிட்ஜஸ்,லேடி வின்சில்சீ ஆகியோரின் படைப்புகளைப் பார்க்கிறோம்; பாரதியின் சிறப்புகளையும் பார்க்கிறோம்.
காதல் காதல் காதல்;
காதல் போயிற் காதல் போயிற்
சாதல் சாதல் சாதல்
என்ற பாரதியின் வரிகளில் அவர் கூறுவது என்ன?
“காதலை உயரியதாகவும், தெய்வ நிலையதாகவும், அதனையே வாழ்வின் ஒளி நெறியாகவும் கருதுபவர் கவி பாரதி; இதனை, “காதல் புரிவீர் செகத்தீரே!”, காதலித்துக் கூடிக் களியுடனே வாழாமோ’,காதலிருவர் கைப்பிடித்தே..”, “காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம், கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்; காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்’, ‘பாட்டினிலே நான் பாட வேண்டி’, “ என்று இப்படி பாரதியின் சொற்றொடர்களைத் தொகுத்துக் காட்டி, வரிசையாக இன்னும் பல மேற்கோள்களைத் தரும் நூலாசிரியர்,
“அத்தகு காதலை நாடுகிறது குயில்.அக்காதல் இன்றேல் முடிவு சாதலே” என்கின்றது குயில்” என்கிறார்.
பாரதியில் தோய்ந்து, அவரது குயில் பாட்டில் மூழ்கி அதைத் திறம்பட ஆய்வு செய்யும் சிறு நூலாக அமைகிறது இந்த நூல்.
குயில் பாட்டில் மகாகவி விடுத்திருக்கும் புதிரை அவிழ்க்கும் முயற்சியில் இந்த நூல் ஈடுபட்டுப் பல கருத்துக்களை நம் முன் வைக்கிறது.
குயில் பாட்டையும் படித்து, இந்த ஆய்வு நூலையும் படித்தால் நமக்கு அரிய பல கருத்துக்கள் தோன்றும்.
நூலாசிரியர் பாராட்டுக்குரியவர். பாரதியில் தோய்ந்திருக்கும் அன்பர்களுக்கு இந்த நூல் இனிக்கும்.
***