
Written by S NAGARAJAN
Date: 24 March 2017
Time uploaded in London:- 7-09 am
Post No.3755
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
பாரதி இயல்
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 23
ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 8
by ச.நாகராஜன்
ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்
குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்/
- மாதர்களைப் பற்றி ஸ்வாமி விவேகாநந்தரின் அபிப்பிராயம் – 1
ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி (1920)
மேலே கண்ட தலைப்பில் சுதேசமித்திரன் 1920 வருஷ அனுபந்தம் வெளியிட்டுள்ள கட்டுரை இது.
நீண்ட கட்டுரையில் சுவையான செய்திகள் பலவற்றை பாரதியார் தொகுத்து வழங்குகிறார்.
1898 ஜூலை 9ஆம் தேதியன்று ஸ்வாமிஜி எழுதிய ஆங்கிலக் கடிதத்தைத் தமிழ்ப்படுத்தி இதில் பாரதியார் தந்துள்ளார். 1893 ஆகஸ்ட் 20ஆம் தேதி கடிதத்தையும் காண்கிறோம்.
ஸ்வாமிஜியின் கருத்துக்களை வெகுவாக பாரதியார் ஆதரிக்கிறார்.
கட்டுரையின் இறுதியில் அவர் கூறுவது:
“மேற்கூறப்பட்ட வசனங்களிலிருந்து ஸ்வாமி விவேகானந்தர், நம்முடைய தேசத்துக்கு விமோசனம் ஏற்பட வேண்டுமானால் அதற்கு மூலாதாரமாக, நம்முடைய ஸ்தீரிகளுக்கும் பரிபூரண ஸ்வதந்திரம் கொடுக்க வேண்டுமென்றும், அவர்கள் வானத்துப் பறவைகள் போல் விடுதலை கொண்டு திரிய இடங்கொடுக்க வேண்டுமென்றும், அவர்கள் பாடசாலைகளிலும் கலாசலைகளிலும் நிறைந்து கிடக்க வேண்டுமென்றும், தமக்கு வேண்டிய பொருளைத் தாமே உத்யோகங்கள் பண்ணித் தேடிக்கொள்ள் இடங்கொடுக்க வேண்டுமென்றும், ஆண்மக்கள் தொழில் புரியும் எல்லாத் துறைகளிலும் பெண்கள் தொழில் புரிய இடந்தர வேண்டுமென்றும், ஸ்தீரிகளைப் பொதுவாக நாம் பராசக்தியின் அவதாரங்களெனக் கருத வேண்டுமென்றும் (ஸ்வாமி விவேகானந்தர்) கருதினாரென்பது தெளிவாகப் புலப்படுகிறது.
ஸ்வாமி விவேகாநந்தரின் கல்விப் பெருமையும், அறிவுத் தெளிவும், தெய்வீகமான அன்பும், அவருடைய தைர்யமும் மேருவைப் போன்ற மனோபலமும், அவர் செய்திருக்கும் உபந்யாசங்களிலும் நூல்களிலும் விளங்குவதைக் காட்டிலும் அவருடைய கடிதங்களில் ஒருவாறு அதிகமாகவே விளங்குகின்றன என்று கூறுதல் தவறாகாது.
- மாதர் நிலை பற்றி ஸ்வாமி விவேகாநந்தரின்
அபிப்பிராயம் – 2
ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி (1920)
கட்டுரையின் முதற் பகுதியைத் தொடர்ந்து இரண்டாம் பகுதியையும் சுதேசமித்திரன் 1920 வருஷ அனுபந்தம் வெளியிட்டிருப்பதைக் காண்கிறோம்.
இதிலும் ஸ்வாமிஜியின் கடிதங்களைக் காண்கிறோம்.
மிகப் பிரமாதமாக ஸ்வாமிஜிக்கு பாரதியார் இப்படிப் புக்ழாரம் சூட்டுகிறார்:
ஸந்யாசத் துறையில் இறங்காமல் ஸ்வாமி விவேகாநந்தர் இல்லற வாழ்க்கையைக் கைக் கொண்டிருப்பாராயின், மானுஷ்ய ஜாதியின் கலியை ஒரேயடியாக வேரறுத்துத் தள்ளியிருப்பாரென்று தோன்றுகிறது. அவர் யோசனை பண்ணாத பெரிய விஷயமே கிடையாது. அவருக்குத் தெரியாத முக்ய சாஸ்திரம் கிடையாது. அவருடைய அறிவின் வேகத்துக்குத் தடையே கிடையாது. அவருடைய தைர்யத்துக்கோ எல்லை கிடையாது. கண்ணபிரான கீதை உபதேசம் புரிந்து ஸகலவித ம்னுஷ்ய ஸம்சயங்களையும் அறுத்து வேதஞானத்தை நிலை நிறுத்திய காலத்துக்குப் பின்பு, ஹிந்து மதத்தின் உண்மைக் கருத்துக்களை முழுதும் மிகத்தெளிவாக, ஸர்வ ஜனங்களுக்கும் புலப்படும்படி வெளியிட்டுரைத்த ஞானி விவேகாநந்தரே யாவரென்று தோன்றுகிறது.
- பாரதியார்
மேலே கண்ட தலைப்பில் இதே குமரி மலர் இதழில் ஒரு குட்டிச் சமபவத்தையும் காண்கிறோம்.
சம்பவம் இது தான்:
ஒரு சமயம் புதுச்சேரியில் பாரதியாரும் நானும் காலை வேளையிலே சீனிவாஸாச்சாரியாரின் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தோம். வழியிலே, பிரஞ்சு இலக்கியத்தின் பெருமையையும், விக்டர் ஹூகோ அவர்களின் மேதையையும் பற்றி, வெகு நேர்த்தியாக எனக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டு போனார்.
திடீரென்று திண்ணையிலிருந்து, ஒரு பையன் “இளமையில் கல்” என்று படித்த குரல் கேட்டது. உடனே பாரதியார் “முதுமையில் மண்” என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. மேதையென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று எண்ணித் திகைத்துப் போனேன்.
- வ.ரா.
- ‘காந்தி’ 25-3-1934
காந்தி இதழில் இப்படி வ.ரா. எழுதியுள்ள அழகிய சம்பவத்தைப் படிக்க முடிகிறது.
48) மாதர் நிலை பற்றி ஸ்வாமி விவேகாநந்தரின்
அபிப்பிராயம் – 3
பாரதியார் எழுதியுள்ள கட்டுரையின் மூன்றாம் பகுதியுடன் இந்தக் கட்டுரை முடிகிறது.
கட்டுரையை இப்படி முடிக்கிறார் மஹாகவி:-
இங்ஙனம் இந்த அற்புதமான ஸம்பாஷணை முற்றுப் பெற்றது. இங்கு ஸ்வாமி செய்திருக்கும் உபதேசத்தையும், இதனைச் செய்யும்படி தூண்டிய அவரது பேரன்பையும் கைக்கொள்வோமாயின் பாரத தேசத்து ஸ்த்ரீகளுக்குப் பரிபூர்ணமான விடுதலை கிடைத்து விடும்! அதினின்றும் பூ மண்டலத்துக்கு நன்மையுண்டாகும்.
- சுதேசமித்திரன் 1920 வருஷ அனுபந்தம்
– தொடரும்
