Article No. 2091
Written by S NAGARAJAN
Date : 22 August 2015
Time uploaded in London :– 13-17
ச.நாகராஜன்
பாரதி இயல்
பாரதி இயல் இன்று ஒரு பெரும் துறையாக ஆகி விட்டது! இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. அபாரமான அபூர்வமான மேதை அவர். தொடாத துறை இல்லை; தீர்க்க தரிசனத்துடன் பிரம்மாண்டமான ஒரு பாரதத்தை அவர் தன் மனக் கண்களால் கண்டார்.
சிறுகச் சிறுக அவரது கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எல்லாம் சேகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஒரு சிறிய அளவில் மஹாகவி பாரதியார் கவிதைகள், மஹாகவி பாரதியார் கதைகள், மஹாகவி பாரதியார் கட்டுரைகள் என்று அப்போது கிடைத்த அவரது படைப்புகளுடன் வெளி வந்த மூன்று தொகுப்புகளைக் கண்டே அறுபதுகளில் அனைவரும் அசந்து போயிருந்தார்கள்.
இன்றோ! அவரது பன்முகப் பரிமாணம் அடங்கிய அனைத்துப் படைப்புகளும் பரந்த அளவில் கிடைத்துள்ளன. அவை அவர் எந்த அளவு பன்முகப் பரிமாணம் கொண்ட மாமேதை என்பதை உணர்த்துகின்றன.
அவரைப் பற்றிய சுவையான நூல்கள் ஏராளம், கட்டுரைகள், கவிதைகளோ பல்லாயிரம். பின்னாளில் கிடைத்த மஹாகவியின் சில நூல்களும் கூட வெளியிடப்பட்டுள்ளன.
இவற்றில் முக்கியமானவற்றைத் தொகுத்துத் தந்தால் அவரைப் பற்றி அறிய ஒரு சரியான வழிகாட்டியாக அந்த நூல் அமையும்.
அந்த முயற்சியில் ஆசை கொண்டு ஆரம்பிக்கும் ஒரு சிறிய முயற்சி; நல்ல முயற்சி இது.
நூல்கள், முக்கிய கட்டுரைகள், கவிதைகளின் பட்டியலை ஆரம்பிப்போமா?
- என் தந்தை
பாரதியாரின் புதல்வி சகுந்தலா பாரதி எழுதிய அருமையான நூல் இது. 1974ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பதிப்பை பாரதி தமிழ்ச் சங்கம், கல்கத்தா இதை வெளியிட்டது.
“பாரதி நினைவுக்குச் சங்கம் செய்யும் பணியைப் பாராட்டும் வகையில் தான் திருமதி சகுந்தலா பாரதி அவர்கள் இந்நூலை வெளியிடும் வாய்ப்பை எங்களுக்கு நல்கினார்கள் என்றே நம்புகிறோம்”. என்று பாரதி தமிழ்ச் சங்கம் அறிமுக உரையை வழங்குகிறது.
88 பக்கங்கள் அடங்கிய நூலில் ஏராளமான அற்புதமான சம்பவங்களை எளிய நடையில் சகுந்தலா பாரதி தெரிவிக்கிறார். அவர் தரும் சில தகவல்கள்:-
க்ஷத்திரியனைப் போன்ற வீர மரணத்தை அவர் விரும்பினார்.
என் தந்தையார் தேசத்தின் மீதுள்ள அன்பிற்கு அடுத்ததாக என் மீது பிரியம் செலுத்தினார்.
எங்கள் வீட்டில் ஸ்வாமி விவேகானந்தரின் பிறந்த நாள் கொண்டாடப்படுவது வழக்கம்,
நிவேதிதா தேவியார் தாம் இமயமலைக்குச் சென்றிருந்த போது அங்குள்ள மரத்தின் இலையொன்றைக் கொண்டு வந்திருந்ததை தன் ஞாபகார்த்தமாக அளித்திருந்தார். அதை என் தாயார் தன் நகை (இல்லாத) பெட்டியில் வைத்திருந்தார்.
முதல் ஐந்து பக்கங்களில் ஏராளமான தகவல்களில் மேலே கண்டவை சில.
முழுப் புத்தகமும் பாரதியார் பற்றிய ஒரு தங்கச் சுரங்கம்.
பாரதி இயலில் பாரதியாரைப் பற்றி நேரடியாகத் தெரிந்து கொள்ள ஒரு அருமையான நல்ல நூல் இது.
******


You must be logged in to post a comment.