
Compiled by ச.நாகராஜன்
Date : 7 September 2015
Post No. 2132
Time uploaded in London: – காலை 8-50
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 6
ச.நாகராஜன்
பாரதியார் பிறந்த நாள்
அரவிந்த ஆசிரமம் அமுதன்
இது ஒரு புத்தகம் அல்ல. வானொலி உரை. அரவிந்த ஆசிரமத்தைச் சேர்ந்த அமுதன் அவர்களை புதுவை வானொலி நிலையத்தார் அழைத்து மஹாகவி பாரதியார் பற்றி உரை ஒன்றை நிகழ்த்துமாறு வேண்டினார்கள்.
பாரதியார் பிறந்த தினத்தன்று 11-12-1968ஆம் தேதி இது ஒலிபரப்பப்பட்டது.
அமுதன் அவர்கள் சிறுவயதிலேயே பாரதியாருக்கு அறிமுகமானவர். பின்னால் அரவிந்த ஆசிரமத்தில் மஹரிஷி அரவிந்தருடன் நெருங்கிப் பழகும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. அன்னை அவர்களின் அந்தரங்கக் காரியதரிசியாகவும் அவர் ஆனார்.
வைகறை என்ற இதழ் அரவிந்த ஆசிரமம் வெளியிடும் ஒரு அழகிய தமிழ் இதழ். பிப்ரவரி, ஏப்ரல்,ஆகஸ்டு, நவம்பர் மாதங்களில் வெளி வர ஆரம்பித்த இந்த இதழின் ஆசிரியப் பொறுப்பில் இருந்த அவர் அழகுற அருமையான தங்கம் நிகர் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வந்தார். இந்த வைகறையில் 1970ஆண்டு மலர் 1இல் இவரது வானொலி உரை முழு வடிவில் அப்படியே பிரசுரமானது.
பாரதி அன்பர்கள் அரவிந்தரின் தொடர்பினால் மஹாகவி எவ்வளவு மகிழ்ச்சியுற்றார், அரும் படைப்புகளைப் படைத்தார் என்பதை அறிவர். அந்த நெருங்கிய தொடர்பைப் பற்றியும் மஹாகவி பற்றியும் நன்கு விளக்கிக் கட்டுரைகளைப் படைத்தவர் அமுதன் அவர்கள்.
அமுதன் அவர்களின் வானொலி உரை
அவரது உரையின் பெரும் பகுதி, அரவிந்த ஆசிரமத்திற்கும் வைகறைக்கு நாம் செலுத்தும் உரிய நன்றியுடன், அவரது சொற்களிலேயே இதோ:-
“பாரதியார் புதுவையில் இருக்கும்போது அவருடன் நெருங்கிப் பழகினவர்களில் நானும் ஒருவன்; இந்த ஒரு காரணத்தினாலேயே நான் அவரை நன்கு தெரிந்து கொண்டு விட்டதாகவும் நான் ஏதோ ஏனையோர் இதுவரை சொல்லியிராத விவரங்களை சொல்லப் போவதாகவும் நினைக்கக் கூடாது. என்னை விட அவரை அறிந்து தெரிந்தவர்கள் இருக்கத்தான் வேண்டும். பாரதியாரைப் பற்றி எண்ணிறந்த கட்டுரைகள் வெளி வந்துள்ளன – பாரதியாரின் நாட்டுப்பற்று, பாரதியாரின் இலக்கியம், முக்கியமாக – அவர் கவிதை, பாரதியாரின் புதுவை வாழ்க்கை முதலிய.
சுருங்கச் சொல்லின் இவை எல்லாவற்றையும் விட அவர் நம் தமிழ்வானின் கீழ்த்திசையில் முளைத்த வெள்ளி.
நான் பாரதியாரை முதன் முதலில் பார்த்தது 1909. அவரை தரிசித்த ஒரு வாரத்திற்குள்ளேயே அவர் சாதாரண மனிதன் அல்ல என்பது பசுமரத்தில் அடித்த ஆணி போல் என் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்து விட்டது. அன்று நானோ சிறுபிள்ளை.
பாரதியாரின் அசாதாரணத் தன்மை அவர் நடையிலும் உடையிலும், பாவனையிலும் பளிச்சென்று பிரகாசிக்கும்; அதை நாம் வேண்டாவிடினும் அதை கவனித்தே ஆக வேண்டியிருக்கும்.
பாரதியார் ஆதர்ச புருஷன் – கொண்ட ஆதர்சத்தில் முழுக்க ஈடுபட்டவர்; அவரிடம் எதிலும் அரைகுறை என்ற பேச்சே கிடையாது. ஒரு கொள்கையை அவர் உள்ளம் கண்டதும், அதைக் கொண்டதும், உடனே அந்த க்ஷணமே அதைக் கைக்கு மெய்யாக ஆக்கி விடப் பார்ப்பார், ஆக்கியும் விடுவார். கொள்கைக்கும் செய்கைக்கும் மத்தியில், அவர் வரை, இடைவெளி கிடையாது.
இன்று போல் அல்ல அன்று. இன்று நாம் ஒளியை விட்டு விலகி, மண்ணோடு மண்ணாய் விட்டோம். இன்று, “வருமானம் என்ன, செலவு என்ன, சாப்பாட்டிற்கு வழி என்ன, எவ்வளவு சேகரம் செய்தோம்?” என்பன போன்ற எண்ணங்களும் உணர்ச்சிகளும் தனி மனிதனையும் மக்கள் குழாத்தையும் ஆட்டிக் கொண்டிருக்கின்றன. அன்றோ மக்கள் உள்ளத்தில் தீ சுடர் விட்டெரியக் கண்டோம். அச்சுடரை மூர்த்திகரிக்கும் ஆதர்ச புருஷர்கள் மக்களிடை சஞ்சாரம் செய்தார்கள். அத்தகைய மூர்த்திகளில் ஒருவர் பாரதியார். அவர் மண்ணுலகில் நடமாடிய போது நாம் விண்ணுலகில் வாழ்வதாக நினைத்தோம். அவர் ‘விடுதலை’ என்னும் மந்திரச் சொல்லைக் கர்ஜித்த போது நாம் நமது தளைகள் அறுந்து இறக்கை கட்டி விண்ணில் பறப்பதாக எண்ணினோம். மண்ணும் ஒளிர்ந்தது.
பாரதியார் வாழ்ந்த காலம் மண்ணில் விண்ணைக் கண்ட காலம்.பாரதியார் தன் பாடல்களைப் பாடிய மாதிரி வேறெவரும் பாடி நான் கேட்டதில்லை – அந்த ஆவேசம், அந்த சக்தி, அந்த உத்ஸாஹம், அந்த தாண்டவம் நான் மீண்டும் காணவில்லை.
பாரதியார் வாக்கில், அவர் சொல்லில் ஓர் அமாநுஷ்யம், தைவதம் மிளிர்ந்தது – அது தெய்வ சம்பத்தல்லவா?
எவரிடமும் அவருக்கு அவநம்பிக்கையே கிடையாது – பச்சைக் குழந்தை உள்ளம். தன் பொருள், பிறர் பொருள் என்பதும் அவரிடம் கிடையாது – ஒருவித சரளம், அவர் பிறரிடம் சல்லாபம் செய்யும்போது.
பட்டினத்துப்பிள்ளை: “பொய்யாய்ப் பழங்கதைக் கனவாய் மெல்லப் போனதுவே”
பாரதி: “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொற்புதிது, சோதி மிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை”
மேனி சிலிர்க்க வைக்கும் மெய்யுரை
எப்படிப்பட்ட உரை! மண்ணகத்தில் விண்ணகத்தைக் கண்ட காலத்தில் மஹாகவியுடன் நெருங்கிப் பழகும் பேறு பெற்ற பெரியவர் அல்லவா அமுதன்!
அவர் உரை மேனி சிலிர்க்க வைக்கிறது. பாரதி அன்பர்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அற்புத உரை இது!
*************
You must be logged in to post a comment.