பாரதி போற்றி ஆயிரம் – 14(Post No.4537)

Date: 24  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-10 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4537

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

  பாடல்கள் 93 முதல் 96

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

நாமக்கல் கவிஞர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்

நாமக்கல் கவிஞர் பாடல்கள் 93 முதல் 95 முடிய

பாடல் 93

உலகம் வாழ்க!

 

உலகம் வாழ்க என்ற இந்தத் தலைப்பில் உள்ள 7 பாடல்களில் முதல் பாடலில்  பாரதியாரைப் பற்றிய குறிப்பு வருகிறது. முதல் பாடலை இங்குக் காணலாம்.

 

கவிபாடிப் பெருமைசெய்யக் கம்ப னில்லை

கற்பனைக்கிங் கிலையந்தக் காளி தாசன்
செவிநாடும் கீர்த்தனைக்குத் த்யாக ரில்லை

தேசீய பாரதியின் திறமும் இல்லை
புவிசூடும் அறிவினுக்கோர் புதுமை தந்து

புண்ணியமும் கண்ணியமும் புகழும் சேர்ந்த
உவமானம் வேறெவரும் உரைக்க வொண்ணா                               உத்தமராம் காந்தியரை உவந்து பேச.

பாடல் 94

ஸ்ரீசுப்பிரமண்ய பாரதி

பல்லவி

சுதந்தர ஞானத்தின் சுடரொளி தீபம்
சுபஸ்ரீ சுப்பிரமண்ய பாரதி நாமம்.

அநுபல்லவி

நிதந்தரும் கவலையை நீக்கிடும் சூத்திரம்
நிச்சய புத்திதரும் அட்சய பாத்திரம் (சுதந்)

சரணங்கள்

அச்சம் எனும்பிணியை அகற்றிடும் மருந்து
ஆற்றலைக் கொடுத்திடும் அமுதத்தின் விருந்து
கொச்சை வழக்கங்களைக் கொளுத்திடும் நெருப்பு
கொடுமையை எதிர்த்திடக் கூரிய மறுப்பு! (சுதந்)

தெய்வத் தமிழ்மொழியில் புதுமைகள் சேர்த்துத்
தீரம் விளங்கச்சுத்த வீரமும் வார்த்து
வையம் முழுதும்அதை வணங்கிடச் செய்யும்
வாய்மையும் தூய்மையும் வளர்த்திடும் ஐயன்! (சுதந்)

பெண்ணின் பெருமைகளைக் காத்திடும் கோட்டை
பேதையர் என்பதனைக் கடிந்திடும் சாட்டை
உண்மை அறிவுகளை உணர்த்திடும் போதம்
உத்தம தத்துவங்களை ஒலித்திடும் கீதம்! (சுதந்)

 

பாடல் 95

 

சுதந்தர தினம்

பல்லவி

விடுதலை அடைந்து விட்டோம்–உலகம்
வியந்திடும் படிக்கொரு நயந்திகழ் விதத்தினில் (விடு)

அநுபல்லவி

நடுநிலை தாங்கிடும் நம்மர சோங்கிட
நாநிலம் முழுதுக்கும் ஞானப் பணிபுரிய (விடு)

சரணங்கள்

பாரதி மெய்ப்புலவன் வாக்குப் பலித்ததென
பண்டுநம் தாதாபாய் கண்ட கனவிதென
தீரன் திலகரிஷி த்யாகம் திகழ்ந்திடவும்
தெய்விக காந்திதவம் வையம் புகழ்ந்திடவும் (விடு)

அந்நியப் பிடிப்புகள் அகன்றத னால்மட்டும்
ஆனந்த சுதந்தரம் அடைவது வெகுகஷ்டம்
உன்னத லட்சியங்கள் ஓங்கிட வேண்டும்அதில்
உத்தமன் காந்திவழி தாங்கிட வேண்டும்இனி (விடு)

கிடைத்த விடுதலையைக் கெடுத்து விடாதபடி
கீழான ஆசைகட்குக் கொடுத்து விடாமல்இடம்
அடுத்திடும் யாவரையும் அன்பின் வழிமதித்தே
அகிலம் முழுதும்காந்தி அருளைப் பரப்புதற்கே (விடு)

 

நாமக்கல் கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

பாடல் 96

 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல்

பாரதி

பாரதிக்கு நிகர் பாரதியேமண்ணில் 

யாரெதிர்த்தாலும் மக்கள் 

சீருயர்த்தும் பணியில் (பாரதி)

ஆறோ டிரண்டு திக்கும் 

அதிரப் பறை முழக்கும்
அச்சமில்லாத் தமிழில் 

அறிவில் நிறைந்திருக்கும் (பாரதி)

வீரமும் நெஞ்சந் தன்னில் 

ஈரமும் வேண்டும் என்றான்
வேற்றாரைக் கண்டஞ்சுவார் 

வீணரென்றே புகன்றான்

சோர்வகற்றி யாவரும் 

ஓர் முகமாய் எழுந்தால்
சூழும் அடிமையிருள் 

சொல்லாமல் ஓடும் என்றான் (பாரதி)

பாதகம் செய்பவரைப் 

பாட்டாலே உமிழ்ந்தான்
பஞ்சைகளின் நிலையைப் 

பார்த்து உள்ளம் நெகிழ்ந்தான்

பேதங்கள் வளர்ப்பவரைப் 

பித்தர் என்றே இகழ்ந்தான்
பெண்மையைச் சக்தியை 

உண்மையைப் புகழ்ந்தான் (பாரதி)

[ தோழர் ஜீவாவின் கட்டுரையிலிருந்து எடுத்த பாடல்

 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தோற்றம் 13-4-1930 மறைவு: 8-10-1959) தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான் காடு என்ற சிற்றூரில் பிறந்தவர். சிறந்த திரைப்படப் பாடலாசிரியர். கவிஞர். சமூக சிந்தனை மிக்க சிந்தனையாளர். கிராமியப் பண்ணில் பாடல் இயற்றுவது இவரது தனிச் சிறப்பு. எளிய தமிழில் அரிய கருத்துக்களை வழங்கியவர்..
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****