
DATE- 6 FEBRUARY 2018
Time uploaded in London- 6-51 am
Compiled by S NAGARAJAN
Post No. 4706
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாடல்கள் 273 முதல் 284
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்
மகாகவி பாரதி அந்தாதி
புதுச்சேரி பயணம், புதுச்சேரி வாழ்வு மற்றும் புதுவையில் நண்பர்கள் தொடர்பு ஆகிய அத்தியாயங்களில் உள்ள பன்னிரெண்டு பாடல்கள்

புதுச்சேரி பயணம்
பணித்த பாரதி மொழிகேட்டு – தலைவர்
பலரும் அவரைப் போற்றினார்காண்!
துணித லுடனே சூரத்தில் – நடந்த
கூட்டந் தன்னில் முழக்கமிட்டார்!
துணிந்து தீவிரக் கொள்கைகளை – திலகர்
தந்த வழியில் எடுத்துரைத்தார்!
கணித்து லாலா லஜபதிராய் – நாடு
கடத்தப் பட்டதைக் கண்டித்தார்!
கண்டித் துஆங்கில ஆட்சிதனைப் – பாக்களால்
கடிந்து பாடி எதிர்த்திட்டார்!
தண்டனை பெற்று சிறைபுகுந்த – வ.உ.
சிதம்பர னாரைப் பேட்டி கண்டார்!
அண்டியோர் கொடுமை எடுத்துரைத்து – “இந்தியா”
ஏட்டில் பிரசுரம் செய்தாரே!
நண்பர் திருமா லாச்சாரி – யாரை
நலித்து சிறையில் அடைத்தனர் காண்.
அடைப்பட் டநண்பர் வருந்தாது – அதற்கு
காரணங் கேட்டு சிறைசென்றார்!
தடையும் “இந்தியா” ஏற்றதுகாண் – பாரதி
தனக்கும் துன்பம் வருமென்று
இடையூ ரகற்ற புதுச்சேரி – மாறு
வேட மிட்டுச் சென்றாரே!
உடைமை பெற்று தங்குதற்கு – நண்பர்
குப்பு சாமி உதவினாரே!

புதுச்சேரி வாழ்வு
உதவி செய்த அன்பர்க்கு – பாரதி
என்றும் உதவிட மறக்கவில்லை!
இதமாய் கவிதைத் தொகுப்பினுள்ளே – பின்னர்
உவந்து போற்றிப் பாடினார்காண்!
முதலில் சிறையில் இருந்தவராம் – திருமா
லாச்சா ரியாரை ஆங்கிலேயர்
விதந்து விடுதலை செய்தனர்காண் – அவரும்
உடனே சென்றார் புதுச்சேரி
புதுச்சே ரியிலே நண்பர்கள் – கூடி
பணியைத் தொடர எண்ணினரே!
கதுமென அச்சுப் பொறிகளையே – சென்னையி
லிருந்து கொணரச் செய்தனர்காண்!
புதுமைப் பொலிவுடன் “இந்தியா”வை – புதுவைப்
பதியினில் வெளியீ டுசெய்தனரே!
மதுரமா யினிக்கும் “இந்தியா”வின் – அமுதை
மக்கள் மீண்டும் பருகினரே!
பருகினர் “இந்தியா” அமுதத்தை – பாரதி
பணியை இனிதே தொடர்ந்தார்காண்!
அருந்தவப் பயனாய் பாரதிக்கு – இரண்டாம்
மகளாம் சகுந்தலா பிறந்தார்காண்!
திருவுடன் புதுவை அரவிந்தர் – “கர்ம
யோகின்” என்ற ஏட்டினையே
அருந்திறலோடு ஆங்கிலத்தில் – நடத்தி
அரும்பணி புரிந்து பேர் பெற்றார்!

புதுவையில் நண்பர்கள்தொடர்பு
பேர்பெறு இதழாம் “கர்மயோகின்” – அதனை
பாரதி தமிழில் மொழிபெயர்த்து
சீர்மிகு நாமம் “கர்மயோகி” – பெயரால்
செந்தமிழ்த் தொண்டு தாம்புரிந்தார்!
தேர்ந்த நல்ல தேசபக்தர் – வ.வே.
சுப்பிர மணியர் அங்குவந்தார்!
அபூர்வ மிக்க வ.வே.சு. – கடலில்
குதித்து நீந்திப் புதுவைவந்தார்!
புதுவை சீனிவா சாச்சாரி – அவரும்
பாரதிக் கினிய நண்பராவார்!
புதிய பாரத மாதாவின் – கொடியைக்
கொணர்ந்து பாடுக பாடலென்றார்!
கதுமெனத் “தாயின் மணிக்கொடிப் – பாரீர்”
கவிதை பாடினார் பாரதியார்!
விதப்புடன் கொடியைப் பறக்கவிட்டு – யாமும்
வாழ்த்துவம் பாரத அன்னையையே!
அன்னை சொல்லைக் கேளாது – சகுந்தலை
அடமம் செய்த நிலைகண்டு
அன்புடன் மகளை அருகழைத்து – பாரதி
பாப்பா பாட்டு இசைத்தார்காண்!
துன்பம் நெருங்கி வந்தபோதும் – நீயும்
தளர வேண்டாம் என்று கூறி
அன்றே பாரதி இசைத்த பாடல் – இன்றும்
என்றும் சிறப்பால் ஓங்குதுகாண்!
ஓங்கிய செட்டியார் மாடிவீட்டில் – பாரதி
புதுவை தன்னில் குடியிருந்தார்!
தீங்கிழை புயலால் புதுச்சேரி – சேதம்
திக்கெலாம் நிகழ்ந்தது கண்டாரே!
தாங்கொணாத் துயரால் “புயற் காற்று” – கவிதை
தங்கம் மாளிடம் இசைத்தார்காண்!
ஏங்கித் தவித்த மக்களுக்கு – பாரதி
உதவி செய்தார் பரிவுடனே!
பரிவுடன் பாரதி யோகசித்தி – தோத்திரப்
பாடலைப் பாடினார் புதுவையிலே!
பெரிதும் இன்னல் உற்றபோது – பாரதி
யதுகிரி பெண்ணிடம் இசைத்தாரே!
“வரங்கேட் ட”லெனும் தலைப்பீந்து – சக்தியை
வேண்டிப் பாரதி பாடினாரே!
அரட்டிப் பெய்த மழைபற்றி – பாரதி
அடுத்துப் பாடினார் பரவலாக!
பரவிய காய்ச்சலால் துன்புற்று – சகுந்தலை
புலம்பித் தவித்தாள் படுக்கையில்
விரவிய பிரார்த்தனை மேற்கொண்டு – பாரதி
பாடினார் பாடல் “பக்தியினாலே”
வருகை தந்த மருத்துவரும் – பாரதி
பாடலைக் கேட்டு இலவசமாய்
மருந்து தந்து குணப்படுத்த – அதனால்
மகளின் உடல்நலம் ஓங்கியதே!
(மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி’ என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி’ பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.
தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.
அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.
நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.
****