
DATE – 8 FEBRUARY 2018
Time uploaded in London- 8-49 am
Compiled by S NAGARAJAN
Post No. 4714
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாடல்கள் 291 முதல் 305
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்
மகாகவி பாரதி அந்தாதி
இயற்றிய நூல்கள் என்ற அத்தியாயத்தில் உள்ள பதினைந்து பாடல்கள்

இயற்றிய நூல்கள்
திகழ்ந்த சுதேச கீதங்கள் – பாரதி
தொகுத்தார் “ஜன்ம கீத” மென்று!
பகர்ந்த இந்தப் பெரும்பாகம் – பாரதி
பகுத்துத் தந்தார் இரு மூன்றில்!
நிகரிலா தலைப்பு ஐம்பத்து – மூன்று
அதிலும் பிரிவுகள் பலவுண்டு!
உகப்புடன் ஆயிரத் துத்தொளாயி – ரத்தொன்
பதிலே பாரதி இயற்றினாரே!
இயற்றிய நூலே “ஜன்ம பூமி” – விடுத்தார்
சமர்ப்பணம் நிவேதா தேவிக்கு!
“இயல்பாய் கதிரவ னைநோக்கிப் – பூக்கும்
சூரிய காந்தி மலரைப் போல்”
வயவறு மக்கள் நெஞ்சமெலாம் – தர்ம
வழியில் புகுந்திட விரும்புகிறேன்!
நயந்து பூமி மாதாவும் – தொண்டரும்
நேயன் பணியை ஏற்பீரே!”
“ஏற்பீர் தொண்டினை எனவுரைத்து – பாரதி
முகவுரை, சமர்ப்பணம் தந்தாரே!
ஆற்ற லோடு “ஜன்ம பூமி” – சாதி
இன, மத வேறு பாடின்றி
போற்றி முப்பது கோடிமக்கள் – நெஞ்சில்
பாய்ந்து புரட்சியை எழுப்பியதே!
ஊற்றாய்ச் சுரந்த “ஜன்ம பூமி” – பாரதி
படைப்பாய் யாமும் நன்றேற்றோம்!
நன்றே பாரதி தந்த பாக்கள் – படைப்பில்
“நாட்டுப் பாட்டாய்” உயர்வேற்று
அன்பர் பரலி நெல்லையப்பர் – நூலாய்
அடுத்து வெளியிட யாம்கண்டோம்!
வந்தே மாதரம் என்பதற்கு – தாயை
வணங்குவோம் என்பதே பொருளாகும்!
இந்தியத் தாயை வணங்கிடுவோம் – நாட்டுப்
பாட்டால் போற்றிக் காத்திடுவோம்!

காத்து வளர்க்கும் திருமாலாம் -மாயக்
கண்ணனைப் போற்றி பாரதியார்
ஏத்திப் பாடிய பாக்களையே – பரலி
நெல்லை யப்பர் இங்கிதமாய்க்
கோத்துக் கண்ணன் பாட்டாகத் – தொகுத்துக்
கொடுத்தார் பாரதம் விழிப்புறவே!
பாத்திறம் வண்ணப் படைப்பாகக் – கண்ணன்
பாட்டில் திகழ்ந்தான் எண்ணியாங்கு.
எண்ணி யாங்கு வடிவத்தில் – கண்ணன்
உதித்து அருளும் தந்திடுவான்!
கண்ணனே தோழன், தாய்தந்தை – சேவகன்
கொற்றவன் சற்குரு சீடனுமாய்
திண்டிறல் காந்தன் காதலனாய் – ஒளிர்ந்து
தந்தருள் புரியும் தெய்வமவன்!
கண்ணன் பாட்டை வெளியிட்ட – நெல்லை
யப்பரைப் பாரதி வாழ்த்தினார்காண்!
வாழ்த்துரை தந்து வ.வே.சு. – ஐயர்
கண்ணன் பாட்டைப் போற்றினார்காண்!
ஆழ்ந்த ஞானக் கீதையினை – கண்ணன்
உலகுக் களித்த பரம்பிரமம்!
வாழ்ந்து காட்டிய பக்தர்க்கு – மகிமை
வளமெலாந் தந்து காத்தவர்காண்!
தாழ்த்தி இருகை கூப்பியாமும் – கண்ணனை
துதித்துத் தினமும் போற்றிடுவோம்
போற்றிப் பாடினார் மாரியையே – அவளே
பல்வளம் நல்கும் முத்துமாரி
நாற்றிசை போற்றும் அன்னைமாரி – உப்பளம்
நல்லூர் வாழும் முத்துமாரி!
ஏற்ற தாழ்வு நீக்குமாரி – அவளே
ஒற்றுமை தந்து காக்குமாரி!
தேற்ற மனமும் நல்குமாரி – அருளை
வேண்டிப் பாரதி பாடினார்காண்!
பாடினார் பாரதி குயில்பாட்டு – அதுவே
பெட்புறு கற்பனைக் காவியமாம்!
ஈடிலா இன்பக் காதலையும் – காதலால்
ஏங்கித் தவிக்கும் நிலையினையும்
வாடியே பல்லுயிர் இவ்வுலகில் – ஒவ்வா
விருப்பினால் துடிக்கும் தன்னுணர்வும்
கோடியாய் விரித்துப் பாடினாரே – பாரதி
குயிலின் பாட்டும் உயர்ந்ததுகாண்!
உயர்ந்த ஞானம் தருபவராம் – மணக்குளம்
விநாயகர் அருளை வேண்டியுமே
நியம வெண்பா, கலித்துறையும் – அகவல்
நாடி விருத்தம் மாறிவர
நயமுற நாற்பது பாடல்களால் – விநாயகர்
நான்மணி மாலையும் பாடினார்காண்
இயன்றஅந் தாதித் தொடையுடனே – பாரதி
ஆக்கினார் பரம்பொருள் ஒன்றென்று!
ஒன்றென நொண்டிச் சிந்துகொண்டு – பாரதி
ஒப்பிலா காவியம் படைத்தார்காண்
கம்பனுக் கடுத்தோர் காப்பியமாய் – பாரதி
பாஞ்சா லிசபதம் இயற்றினார்காண்
ஒன்றிய எளிய தமிழ்நடைக்கு – உகந்த
சான்று பாஞ்சா லிசபதமாம்!
நன்றே பொருட்சுவை வளத்துடனே – புதிதாய்
நவின்றார் பாரதி பெண்மையையே!
பெண்மையை உயர்த்தி காட்டிடவும் – தேசப்
பற்றினை மக்களுக் கூட்டிடவும்
எண்ணி வடித்த காப்பியமே – பாரதி
பாஞ்சா லிசபதம் என்றறிவோம்!
திண்டிறல் வியாசர், வில்லியுமே – கூறா
கவியின் கூற்றைக் கண்டோம்யாம்!
பெண்மை புரட்சி புதுநடைக்கு – தமிழில்
புதுமை பாரதி கூட்டினார்காண்!
கூட்டிய வசன காவியமாய் – பாரதி
கொடுத்த நூலே ஞானரதம்
தீட்டினார் அதனை சென்னையில் – அதனை
மாண்புற முடித்தார் புதுவையிலே!
பூட்டிய ஞான ரதமேறி – சத்திய
உலகங் கண்டு வியந்தார்காண்!
காட்சிகள் அனைத்தும் கற்பனையே – பாரதி
கவினுறு படைப்பே ஞானரதம்.
ஞான ரதத்துடன் சுயசரிதை – உவந்தே
புதுவை தன்னில் இயற்றினார்காண்
ஞானப் பாடல் பாடினாரே – பாரதம்
ஞானமே என்று விளக்கினாரே!
மானம் உயர்ந்த பாரதத்தில் – புத்தர்
மகானுந் தோன்றி ஞானமீந்தார்!
ஆனவை பலப்பல பாரதியார் – இயற்றி
ஏற்றார் சீர்த்தி எங்கெங்கும்
எங்கும் பாரதி கீர்த்தியோங்க – அறிந்தார்
சோம சுந்தர பாரதியார்!
இங்கித மாக ஆங்கிலத்தில் – “வாழும்
மிகப்பெரி யகவிஞர் பாரதியார்”
என்றே போற்றிக் கட்டுரையும் – எழுதி
பாரதி புகழை ஓங்கவைத்தார்!
மன்பதை ஆங்கில நாடெங்கும் – பாரதி
மாண்புகழ் பெருகக் கண்டோம்யாம்!
(மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)
கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி’ என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி’ பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.
தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.
அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.
நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.
****