
Date: 1 April, 2018
Time uploaded in London- 7-17 am
Compiled by S NAGARAJAN
Post No. 4870
PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
பாரதி போற்றி ஆயிரம் – 66
பாடல்கள் 485 முதல் 491
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்
பாரதி பத்துப்பாட்டு
நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு மூன்றாம் அத்தியாயமான பராசக்தி பார்வையில் பாரதி தொடர்கிறது.
மூன்றாம் அத்தியாயம்: பராசக்தி பார்வையில் பாரதி
31 முதல் 37 வரை உள்ள பாடல்கள்
எத்தனையோ தெய்வங்களைப் பாடிடினும் யாவிலுமிச்
சக்திதன்னை யேநீயும் கண்டாய் – அவை
அத்தனையும் என்வடிவே என்றாய் – உலகில்
சக்திதாசர் என்றிடவே வாழ்ந்தவரும் உன்போலே
தத்துவத்தில் உறுதிகொண்ட தில்லை – கவியில்
நித்தமெனைக் கண்டதுந்தன் எல்லை
மணக்குளத்து விநாயகர் நான்மணிமா லைதனிலும்
மணப்பதெலாம் என்புகழே யன்றோ? – அதன்
மகத்துவத்தை உணர்த்துவதுதான் என்றோ? – பாவில்
இணக்கமாய் சக்திதொழில் யாவுமெனில் சஞ்சலமேன்
எனவுரைத்து போற்றினையே என்னை – அதனை
இனியுணர்ந்து போற்றுவரே உன்னை
முருகனவன் பெருமைகளை உரைக்கின்ற போதினிலே
அருமையுடன் ஒருவரியைச் சொன்னாய் -குகன்
அருளாகிய தாய்மடிமேல் என்றாய் – மேலும்
ஒருமுறையா இருமுறையா உமைமைந்தன் என்பதனை
திருக்குமரன் சிறப்பெனவே கொண்டாய் – மயில்மேல்
வரும்முருகன் தனிலுமெனைக் கண்டாய்
கலைமகளும் திருமகளும் கண்களெனக் கொண்டதினால்
காமாட்சி என்றபெயர் பெற்றேன் – அதுபோல்
காணுமுந்தன் பாட்டினிலும் உற்றேன் – இன்று
நிலையுரைக்க இயலாத பரமனோடு கண்ணனையும்
நிகழ்சக்தி வடிவெனவே சொன்னாய் – எதிலும்
நீக்கமற நிற்பவள்யான் என்றாய்
எங்கணும் சக்தி எதனிலும் சக்தி
என்பதே உந்தன் கவித்துவ சக்தி
அங்கத னால்நீ ஆவேச முற்றே
யாரையும் பணிய மறுத்திட் டாயே
சிங்கமென் றுன்னைச் சொல்லிடும் வண்ணம்
சீரிய மேனி இருந்திட்ட போதும்
அங்கங் கலைந்தே அளவிலா துன்பம்
அடைந்த தினாலுடல் சிதைவுற் றாயே
நூறாண்டு வாழ்ந்திட வரமது கேட்டாய்
நோயுடன் அவ்விதம் வாழ்ந்திடல் நன்றோ?
சீரான வாழ்வின்றி எத்தனைக் காலம்
சிந்தைநொத் துலகில் இருந்திடக் கூடும்?
ஆறான தொருநாள் சமுத்திரம் தன்னில்
ஆவலாய் சங்கமம் ஆகிடுந் தானே
பேரான படைப்புகள் போதுமென் றேநான்
பிள்ளையே உந்தனை அழைத்துக் கொண்டேன்
என்றுமிங் கொருவன் எத்தனைக் காலம்
இருந்தனன் என்பதில் பெருமைதான் உண்டோ?
பொன்றிடும் முன்னர் வேடிக்கை மனிதர்
போலவீ ழாமல்சா திக்கநி னைத்தாய்
இன்றுள படைப்பே இவ்வுல கிங்கே
இருந்திடும் வரையுன் சிறப்பினைக் கூறும்
நன்றினை என்றுன் கவிமலர் யாவும்
நான்மகிழ் தேற்றேன் வாழ்கநீ வாழ்க!
பராசக்தி பார்வையில் பாரதி முற்றும்
தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.
கவிஞரைப் பற்றிய அறிமுகம் ஏற்கனவே தரப்பட்டுள்ளது.
xxxx
பாரதி போற்றி ஆயிரம் – 67
பாடல்கள் 492 முதல் 525
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்
பாரதி பத்துப்பாட்டு
நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு நான்காம் அத்தியாயமான பாஞ்சாலி பார்வையில் பாரதி இடம் பெறுகிறது.
பாஞ்சாலி பார்வையில் பாரதி
1 முதல் 34 வரை உள்ள பாடல்கள்
திருவுடைப் பாஞ்சால நாட்டினில் தோன்றலால்
திகழ்பாஞ் சாலி யென்பார்
துருபதன் மகளாய் வளர்ந்ததால் எந்தனை
திரௌபதி என்ற ழைத்தார்
கிருட்டிணன் தங்கையென கருநிறம் பெற்றதால்
கிருட்டிணை என்று சொன்னார்
பெருந்திறல் கொண்டதோர் பாண்டவர் தேவியென
புகழ்தலே உயர்வாய்க் கொண்டேன்
தீயவை யாவையும் தீய்த்திட வந்ததால்
தீயினில் தோன்றி வந்தேன்
தீயதை மாசுகள் தீண்டாது என்பதால்
திகழ்ஐவர் தேவி யானேன்
ஆயயிப் புவிமுறைகள் ஏதுமெனக் கேலாது
ஆய்ந்தவர் இதை யுணர்வார்
தூயநன் னெறிதனில் நினைத்ததால் அல்லவோ
தெய்வமாய் சிறப்புப் பெற்றேன்
அரனருள் முற்பிறவி வரத்தினால் தோன்றினும்
அரிமகிழ் தங்கை யானேன்
அரண்மனை தன்னிலே வளர்ந்தவ ளாயினும்
அடவியில் வாழலானேன்
அரணெனும் ஐவர்தம் தேவியா யிருந்தும்
அடுத்தவன் இழுத்துச் சென்று
அரசவை தன்னிலே ஆடைகள் பறித்திட
அபலையென தவித்து நின்றேன்
அன்றுமுதல் என்மனதில் நான்கொண்ட பாரமே
அரிய பாரதமாய் ஆக
என்றுமென் நெஞ்சத்தில் குமுறிய ஆவேசம்
ஏயும்குருச் சேத்ர மாக
அன்றங்கு பதினெட்டு அக்ரோணி சேனைகள்
அவளால் அழிந்த தென்று
என்றுமெனைப் பழிப்போர்கள் இருந்தாலும் காரணம்
எவரிங்கு ஆய்ந்து சொன்னார்?
பாரதி எனும்புலவா – இந்தப்
பாஞ்சாலி துயரினை நீயுணர்ந்தாய்
பாரதிர்ந் திடநடந்த – அந்தப்
பாரதப் போரின் காரணத்தை
ஈரநெஞ் சத்துடனே – ஆய்ந்து
எனது நிலையினைத் தேர்ந்துரைத்தாய்
சீரற்ற கௌரவர்கள் – செய்த
சூழ்ச்சியால் விளைந்ததை ஆய்ந்துரைத்தாய்
காலத்தின் கண்ணாடியாய் – பல
கவிதைகள் புனைகின்ற பணியிருந்தும்
சாலநற் சுதந்திரப்போர் – தனில்
சற்றேனும் ஓய்வற்ற உழைப்பிருந்தும்
ஏலவோர் இடமுமின்றி – சென்று
எங்கெங்கோ உறைகின்ற வாழ்விருந்தும்
சீலமாய்ப் பாஞ்சாலி – நிலையை
சிறப்புறப் பாடுவேன் எனயெழுந்தாய்
எண்ணற்றா காவியம் நாட்டினுண்டு – அதில்
எனைப்பற்றிப் பாடினோர் பலருண்டு
திண்ணமாய் முன்னமென் கதையுரைத்த – ஞானம்
திகழ்கின்ற வியாசனின் பெருமையுண்டு
உண்டிடத் திகட்டாத அமுதமென்ன – வில்லி
உரைத்திட்ட அற்புதப் பாடலுண்டு
பண்ணிலே எனதருங் கதையைநாளும் – இங்கு
பாடியே வைத்திட்டோர் நிறையவுண்டு
எத்தனைப் பேரென்னைப் பாடியென்ன? – அதில்
எவருமென் நிலையெண்ணித் துடித்ததுண்டோ?
பித்தனைப் போலந்த துரியன்அன்று – செய்த
பேய்ச்செயல் கண்டிங்கு பதைத்ததுண்டோ?
நித்தமும் நிகழ்கின்ற எளியசெயலாய் – எந்தன்
நிலைபற்றி இயல்பாக எழுதிவைத்தார்
அத்தகை யோர்க்கெலாம் எனதுவாழ்வு – பெண்ணின்
அவலமல்ல ஆங்கதுவோர் கதைமட்டும்தான்
பாரதி நீயொருவன் தானே அய்யா
பதறினாய் குமுறினாய் கோபமுற்றாய்
சீரற்ற மாந்தரின் சிறுமை கண்டு
சீறினாய் மாறினாய் சாபமிட்டாய்
யாரவர் நெட்டைக ரங்க ளென்றாய்
எல்லாரும் பெட்டைகள் எனப்பழித்தாய்
வேரற்ற மரமாக வீழ்ந்தி டாமல்
வீறுகொண் டெழுந்தெனை முழங்கச் செய்தாய்
பாரதத்தை என்னுருவில் பார்த்திட் டாயோ?
பாஞ்சாலி பாரத மாதாஎன்றே
சாரமுடன் உன்மனதில் தேர்ந்திட் டாயோ?
சார்ந்திட்ட தீவிர வாதியாக
சூரனெனும் பீமனை நினைத்திட் டாயோ?
சூழ்நிலையை உணர்ந்தவையில் பேசிநின்ற
வீரனருச் சுனந்தன்னை மிதவா தத்தின்
விளங்குமொரு வடிவமெனப் படைத்திட் டாயோ?
தருமனையே அறத்திற்கோர் வடிவ மென்றே
தக்கோர்கள் யாவருமே புகழ்ந்து சொல்வார்
தருமன்போல் என்றேதான் பண்பிற் கெல்லாம்
தலைமையுறு உவமையென எவரும் சொல்வார்
தருமனவன் சூதாட்டம் தன்னில் கொண்ட
தாளாத மோகத்தால் ஈடு பட்டே
தருமத்திற் கெதிராக எனையே அங்கு
தான்வைத்து ஆடியதை எவர்தான் சொன்னார்?
ஆதலினால் தருமன்தான் நாட்டை வைத்தே
ஆடிய போதேநீ கோபம் கொண்டு
சீதமதி குலத்திற்கே களங்கம் நேர
சீச்சீயிவன் சிறியர்செய்கை செய்தான் என்றாய்
ஏதமுற அதன்பின்னும் மனையாள் தன்னை
ஏற்றதொரு பணயமென வைத்திட் டானே
ஈதறமோ நற்செயலோ எனக்கொ தித்தே
இவன்கையை எரித்திடுவோம் என்றிட் டாயே
இத்தனைக் கடுமையுடன் – தருமனை
எவர்விமர் சித்தாலும்
அத்தனைப் பேருமாங்கே – அவர்மேல்
ஆத்திரம் கொண்டிருப்பார்
வித்தகம் ஏன்நானும் – அவரை
விழியால் எரித்திருப்பேன்
நித்தியப் புலவனேநீ – காட்டிய
நியாயங்கள் அருமையன்றோ?
ஆதலி னால்தானே – அதனை
அனைவரும் ஏற்கின்றார்
நாதனைப் பழித்தபோதும் – உந்தன்
நடுநிலை நானுணர்ந்தேன்
வேதனைப் பட்டவள்நான் – நானே
வியந்திட விரித்துரைத்தாய்
சாதனை செய்திட்டாய் – புதிய
சரித்திரம் படைத்திட்டாய்
பாரதப் போர்நடக்கக் – காரணம்
பாஞ்சாலி சிரிப்புயென்றே
பாரத நாடெங்கும் – கதையைப்
பாங்குடன் சொல்லுகின்றார்
யாரதில் என்செயலை – மிகவும்
இயல்பென உணர்த்துகின்றார்?
பாரதி நீயல்லவோ – திருத
ராட்டின ராயுரைத்தாய்
தடுமாறி விழும்போதில் – பெற்ற
தாய்கூட நகைப்பளன்றோ?
கடுஞ்செய லாகிடுமோ – மைத்துனி
கண்டங்கு சிரித்திடல்தான்
நடுநிலைக் கருத்திதுதான் – இதனை
நயமுறச் சொல்லவைத்தாய்
எடுத்திதை யாருரைத்தார்? -இன்னும்
ஏன்பழங் கதையுரைத்தார்?
காவியம் ஒன்றைப் படைத்திட நீயும்
கருதிய போதினிலே
மேவிய கதைகள் எத்தனை எத்தனை
மனதினில் உதித்திருக்கும்
பாவினில் வடிக்கப் பொருத்தம் நானென
பல்வகைப் பாத்திரங்கள்
தாவிமுன் வந்தே எந்தனைப் பாடென
தாமே கேட்டிருக்கும்
சங்க இலக்கியம் தனிலுறை மாந்தர்
சரித்திரம் அறியாயோ?
பொங்கும் பக்தியில் சிறந்தவர் தம்மை
போற்றிட உணராயோ?
தங்கும் ஐம்பெருங் காப்பியங்களில்தான்
தகுந்தவர் கிடையாதோ?
எங்கும் புகழ்ந்திடும் இராமா யணத்துள்
ஏதும் பொருந்தாதோ?
இத்தனைக் கதைகள் இருந்திட்ட போதிலும்
ஏனந்த பாரதம் தன்னை
நித்தமும் நிலைத்திடும் காவிய மாக்கிட
நீதேர்ந் தெடுத்தனை யென்று
இத்தினம் உந்தனை ஆய்வுகள் செய்பவர்
ஏதேதோ காரணம் சொல்வார்
அத்தனைக் கும்மேலாய் ஆழ்மனத் தில்இந்த
அபலையை நினைத்தனை யன்றோ?
இவ்விதம் பாரதக் கதைதன்னில் ஓர்பகுதி
எழுதலென ஏற்ற பின்பும்
எவ்விதம் எப்பகுதி தனைநாமும் தேர்ந்திங்கு
ஏற்பதென குழப்பம் தோன்றும்
செவ்விய பாரதம் சமுத்திர மல்லவோ
செப்பமுற அதனுள் மூழ்கி
வவ்வியே ஓர்முத்தை எடுத்திடல் எளிதாமோ
வாய்த்தசோ தனைதான் அன்றோ?
சந்திரன் மரபினில் வந்திட்ட மன்னவர்
சரித்திரம் பற்பல உண்டு
அந்தநாள் அத்தின புரத்தினில் நடந்துள
அரியணைப் போட்டிகள் உண்டு
எந்நாளும் யாவரும் போற்றிடும் கண்ணனின்
எண்ணற்ற லீலைகள் உண்டு
இந்தநாள் நினைப்பினும் பதறிடும் குருசேத்ர
யுத்தத்தின் கொடுமையும் உண்டு
எந்தனைப் பற்றியே பாடுதல் என்றாலும்
யானன்று வேள்வி தன்னில்
செந்தணலில் தோன்றிய சிறப்புண்டு எனக்குற்ற
சுயம்வரப் போட்டி உண்டு
இந்திரப் பிரத்தத்தின் அரசியெனும் புகழுண்டு
இருண்டவன வாசம் உண்டு
சிந்திய இரத்தத்தில் சீற்றம் தணிந்தெந்தன்
சிகைதனை முடித்த துண்டு
இத்தனையும் விடுத்து – ஏன்
எந்தன் சபதத்தை
அத்தினம் தேர்ந்தெடுத்தாய்? – யான்தான்
அதனை அறிந்திடுவேன்
இளமைப் பிராயத்தில் – நீ
எந்தன் கதைதன்னை
விளங்கும் தெருக்கூத்தில் – அந்நாள்
விருப்ப முடன்பார்த்தாய்
திரௌபதி வேடத்தில் – உள்ள
திறன்மிகு நடிகர்தனை
துரியன் சபைதனக்கே – அந்த
துச்சா தனன்தானும்
இழுத்து வருகியிலே – காண்போர்
இதயம் துடித்திருக்க
அழுது கதறிநிற்கும் -அந்த
அபலை பதைத்திருக்க
ஆடை பறித்திடுவாய் – என்று
அண்ணன் சொன்னவுடன்
வேடன் பறவைதனை – அங்கு
வீழ்த்திடும் நிலைபோல
துச்சா தனன்பாய்ந்தான் – அவளைத்
துகிலு ரியமுனைந்தான்
அச்சத் துடனதனைக் – காண
அனைவரும் காத்திருந்தார்
அந்நிலை தான்கண்டே – நீயும்
ஆத்திரம் கொண்டெழுந்தாய்
இந்நிலை வந்ததுஏன் – என
எண்ணிலா வினாதொடுத்தாய்
தெருக்கூத் தென்பதையே – மறந்து
தீரமாய் வாதிட்டும்
ஒருவரும் ஏற்கவில்லை – சிறுவன்
உளரலென விடுத்தார்
அன்றுன் பிள்ளைப் பிராயத்த்தில் – கொண்ட
அரியநற் சிந்தனை வித்தன்றோ – நித்தம்
பன்னருங் கேள்வியாய் கிளைவிட்டு – பின்னர்
பாஞ்சாலி சபதமாம் விருட்சமாகி – தமிழில்
என்றுமே நிலைத்திடும் காவியமாய் – எளிய
இன்னருங் கவிகளாய் கனிகளாகி – கற்றோர்
உண்டிடத் திகட்டாத நிலைபெற்றது – என்னை
உன்னத நிலைக்கு உயர்த்திட்டது
எளியபதம் எளியநடை எளிதாய் இங்கு
எவருமதன் பொருளுணர இனிமை யோடு
தெளிவுறவே அமையுமொரு காவி யந்தான்
தெள்ளுதமிழ்க் கிந்நாளில் தேவையென்று
அளியுறவே அந்நாளில் அமைத்துத் தந்தாய்
அதற்குரிய தலைவியென என்னைக் கண்டாய்
ஒளியினால் சூழலையே சிவக்க வைக்கும்
உயர்ரத்ன மாயுளங்கள் சிவக்கச் செய்தாய்
சமநோக்கே நற்கவிஞன் பன்பு என்றே
சகுனிக்கும் சிலநியாயம் உரைத்திட் டாயே
எமதன்னை எனயேற்று எந்தன் குரலாய்
எண்ணற்ற கேள்விகளைத் தொடுத்திட் டாயே
தமதரும் பக்தியினால் பலரும் இங்கே
திரௌபதி கோயிலென அமைத்த போது
நமதன்னை கற்கோயில் தானா காண்பாள்
நான்சொற்கோ யில்தருவேன் எனதந் தாயே
பாரதக் கதைபுவியில் வாழ்கின்ற வரையிந்தப்
பாஞ்சாலி தானும் வாழ்வாள்
பாரமுள என்கதையைப் பாங்குடனே பாடியதால்
பாவலனே நீயும் வாழ்வாய்
பாரதிநின் படைப்பினிலே யாவுமே மறைந்தாலும்
பாஞ்சாலி சபதம் போதும்
பாரதனில் உன்புகழைக் காலமெலாம் காத்திருக்கும்
பைந்தமிழ்போல் வாழ்க! வாழ்க!!
பாஞ்சாலி பார்வையில் பாரதி முற்றும்
தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி
கவிஞரைப் பற்றிய அறிமுகம் ஏற்கனவே தரப்பட்டுள்ளது.
***
***