
WRITTEN BY S NAGARAJAN
Date: 11 SEPTEMBER 2018
Time uploaded in London – 6-09 AM (British Summer Time)
Post No. 5416
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
மஹாகவிக்கு அஞ்சலி
இந்தத் தொடரின் இறுதிக் கட்டுரை!
பாரதி 97! – 3
ச.நாகராஜன்
- நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரைப் போட்டிக்கு அழைக்க நினைத்தவர்.
மதுரை விக்டோரியா எட்வர்ட் ஹாலுக்கு தாகூர் வருவதை அறிந்து அவருடன் கவிதைப் போட்டி நடத்த விரும்பினார். ஆனால் அந்த விஷயத்தைப் பற்றித் தொடராமல் அப்படியே விட்டு விட்டார். தாகூரின் பாடலையும் கட்டுரைகளையும் மொழி பெயர்த்து வெளியிட்டவர்.

- சுயசரிதை எழுதியவர்
தன் சுயசரிதையைக் கவிதை வடிவில் யாத்தவர்.
- சர்வ மதம் சமரஸம் கண்டவர்
அனைத்து மதங்களையும் மதித்தவர். அல்லா,அல்லா, அல்லா என்று பாடியவர்.ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் என்று ஏசு கிறிஸ்துவைப் பற்றிப் பாடியுள்ளார்.
- சிறந்த ரசிகர்
அனைத்துக் கலைகளையும் ரசிக்கும் சிறந்த ரசிகர். ஓவியர் ரவிவர்மா மறைந்ததை ஒட்டி இரங்கல் பா பாடினார்.சுப்பராம தீக்ஷிதர் மறைந்ததற்கும் இரங்கல் பா பாடியுள்ளார்.
- இயற்கை ஆர்வலர்
இயற்கையை ரசிப்பதில் அளவிலா ஆர்வம் கொண்டவர். பாஞ்சாலி சபதத்தில் சூரியாஸ்தமனம் பற்றி எழுதியுள்ளார். அநேக பாடல்கள் அவரது இயற்கை ஆர்வத்தை விளக்கும்.
70.நேரம் பயனுள்ளதாகக் கழிய விரும்பியவர்.
நேர நிர்வாகம் பற்றி மிகவும் அக்கறையுடனிருந்தவர். பொழுது வீணே கழிய சற்றும் இடங்கொடேன் என குறிப்பில் எழுதியவர்.சோம்பலின்றி தன் பணிகளைத் தொடர்ந்தவர்.

- நையாண்டி வல்லுநர்
எழுத்தாளர், நகைச்சுவை எழுத்தாளர் என்பதைத் தாண்டி நையாண்டி செய்வதில் வல்லுநர். ஒரு பெரிய நையாண்டி கதையையே எழுதியுள்ளார். கட்டுரைகளில் சரளமான நையாண்டி நடையைக் கையாண்டவர்.
- மதமாற்றம் எதிர்த்தவர்
மதமாற்றம் கண்டு பொங்கியவர். தனது அருமை நண்பர் சுரேந்திர நாத் ஆர்யா மதம் மாறியது கண்டு வருந்தி நொந்து அழுதார்.
- அழகிய கையெழுத்தைக் கொண்டவர்
சிறிய எழுத்துக்கள். இடம் விட்டு இடம் எழுதும் பாங்கு. அழகிய கையெழுத்தைக் கொண்டவர். அவரது கையெழுத்துப் பிரதிகள் இன்றும் காணக் கிடைக்கின்றன.
- நன்கு உடை அணிபவர்
சுத்தமான உடை.அழகிய உடை அணிய விரும்பியவர்.கோட்டு, தலைப்பாகை என அவரது கம்பீரமான உருவத்தை உடையால் இன்னும் மேம்படுத்திக் கொண்டவர்
- நண்பர்களை அரவணைத்தவர்
சுமார் 35க்கும் மேலான சீடர்களைப் புதுவையில் கொண்டிருந்தார்.ஏராளமான நண்பர்களைக் கொண்டிருந்தார். அவர்கள் அனைவரையும் வெகுவாக மதித்து நட்பு பாராட்டி வந்தார்.
- புதிய பாரதம் அமைக்க எண்ணியவர்
வலிமையற்ற தோளினாய் போ போ போ என்று நலிந்த பாரதத்தை விரட்டியவர் ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா என்றும் எதிரிலா வலத்தினாய் வா வா வா என்றும் புதிய பாரதத்தை வரவேற்று அழைத்தார். அவரது பாரதம் உலக நாடுகளில் மேன்மையுற்ற பாரதம். அதையே அவர் அமைக்க விரும்பினார்.

- வெளிதேச வாசம் வெறுத்தவர்
புதுவை வெள்ளைக்காரர் வசம் ஆகும் என்ற ஒரு நிலை வந்த போது பிரான்ஸில் குடியேறலாமா என்ற பேச்சு எழுந்தது. ஆனால் பாரதியார் அப்படி பிரான்ஸுக்குச் செல்ல விரும்பவில்லை. வெளிதேச வாசத்தை அவர் வெறுத்தார். சிறந்த சுதேசி.
- மாதாமணி வாசகம் வெளியிட்டவர்
தன் நூலான மாதா மணிவாசகத்தை தென்னாப்பிரிக்காவிலிருந்து வெளியிட்டவர்.
- ஆங்கில பத்திரிகாசிரியர்
தமிழ் பத்திரிகை ஆசிரியர் என்பதோடு பால பாரதம் என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கும் ஆசிரியராக ஆனார்.
80.தெய்வ அருள் பெற்றவர்
‘மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள் மனோன்மணி என் மாசக்தி வையத்தேவி’ என எழுதினார். விண்ணும் மண்ணும் தனி ஆளும் வீரை சக்தி நினதருளே என்றவர் அனைத்தும் சக்தி அருளினாலேயே நடக்கிறது என்று நம்பினார். அந்த சக்தியின் அனுக்ரஹத்தையும் பெற்றார்.
81.மரணம் வென்றவர்
காலா என் காலருகே வாடா, உன்னை சற்றே எட்டி மிதிக்கிறேன் என்றவர். சாகா வரம் அருள்வாய் -ராமா என்று பாடியவர்.பார் மீது நான் சாகாதிருப்பேன் என்று அறிவித்தவர்.
உண்மை தான்! தனது சாகா வரம் பெற்ற பாடல்களினால் இன்றும் வாழ்கிறார். என்றும் வாழ்வார்.

- சகல உயிர்களையும் நேசித்தவர்
தின்ன வரும் புலியையும் அன்போடு நேசிக்க உபதேசித்தவர்; குருவிகளுக்கு அரிசி மணிகளைப் போட்டு ஆனந்தித்தவர். காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று முழங்கியவர்.
83.வ.வே.சு. ஐயரால் பெரிதும் போற்றப்பட்டவர்
புதுவை வாழ்க்கையில் வ.வே.சு ஐயரின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். அவரது பாடல்களைக் கண்ட ஐயர் வெகுவாக அவரை வியப்புடன் போற்றினார். சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல் போன்ற அக்ஷர லக்ஷம் பெறும் பாடல்களை பாடுபவர் என்று முகவுரை எழுதி அவரது நூல்களை அனைவரும் வாங்கி அவரை ஆதரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
84.விவேகானந்தரின் பக்தர்
விவேகானந்தரின் பக்தராக விளங்கினார். அவரது ஜீவித சரித்திரத்தையும் எழுதியுள்ளார். விவேகானந்தரை ‘பாபேந்திரியம் செறுத்த எங்கள் விவேகானந்தப் பரமன்’ என்று போற்றிப் பாடியுள்ளார்.
85.ரமணரை தரிசித்த கவிஞர்
திருவண்ணாமலை சென்ற போது பகவான் ரமணரை தரிசித்தார். அங்கு அவர் முன் மௌனமாக அமர்ந்திருந்தார்; பேசவில்லை.
86.நாடக ஆசிரியர்
குட்டி நாடகங்களைச் சிறப்பாக எழுதியவர். ஜகத் சித்திரம் உள்ளிட்டவற்றில் அவரது நாடகம் எழுதும் வல்லமையைப் பார்க்கலாம்.
- தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்த நினைத்தவர்
தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதை மாற்றி அமைத்து அதை புதிய பாணியில் மாற்ற நினைத்தவர். அது பற்றி அறிவிப்பும் வெளியிட்டவர். ஆயின் முயற்சி தொடரவில்லை.
- பிரெஞ்சு தேசீய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்தவர்.
பிரெஞ்சு தேசிய கீதமான லா மார்ஸ்லே என்ற கீதத்தை “ அன்னை நன்னாட்டின் மக்காள் ஏகுவம் மன்னு புகழ் நாள் இதுவே“ என்று தமிழில் மொழிபெயர்த்தார்.
ஆக வந்தேமாதரம் என்ற இந்தியாவின் தேசீய கீதத்தையும் பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதத்தையும் தமிழில் தந்ததால் இரு தேசங்களின் தேசீய கீதங்களையும் தமிழாக்கிய பெருமையைப் பெறுகிறார்.
- பாரதி பட்டத்தை பதினோரு வயதிலேயே பெற்றவர்.
இவரை மட்டம் தட்ட நினைத்த காந்தி மத நாதர் தந்த ஈற்றடியான, ‘பாரதி சின்னப் பயல்’ என்பதை ‘காந்திமதி நாதனைப் பார்; அதி சின்னப் பயல்’ என எழுதி அனைவரையும் இள வயதிலேயே வியக்க வைத்தவர். இவரது கவிதா திறமையைக் கண்ட அறிஞர்கள் இவருக்கு பதினோரு வயதிலேயே – 1893ஆம் ஆண்டிலேயே – இவருக்கு பாரதி பட்டம் அளித்தனர்.
- புதிய கவிதா பாரம்பரியத்தை உருவாக்கியவர்
தனது புதிய கவிதா நடையினாலும், பொருளினாலும் தமிழில் புதிய கவிஞர்கள் பரம்பரையை உருவாக்கியவர். பாரதி காலம் தொட்டு இன்று வரை அவரது தாக்கம் இல்லாத கவிஞர் ஒருவர் கூட இல்லை.

91 பழையதையும் புதியதையும் இணைக்கும் பாலமாக இருந்தவர்
பெண் விடுதலை வேண்டியவர், ‘முன்னை அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து’ வாழ உபதேசித்தார். காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கை கொடுக்கச் சொன்னவர் மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழச் சொன்னார். பழமையைப் போற்றி அதில் உள்ள நல்லது அனைத்தையும் எடுத்துக் கொண்டு நவீன உலகின் சிறப்புக்களையும் ஏற்று வாழச் சொன்னவர். பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைக்க விரும்பியவர்.
- உலக அறிஞர்களின் தத்துவங்களைப் பாராட்டியவர்
லாவோட்சு, விட்மன், புத்தர் என உலக அறிஞர்கள் மற்றும் மகான்களின் தத்துவங்களை ஆங்காங்கே கட்டுரையில் தந்தவர். அரவிந்தர், தாகூர், காந்திஜி உள்ளிட்டோரின் சிறப்பான கருத்துக்களையும் தமிழில் தந்தவர்.
- புராணங்களைப் பரப்ப விரும்பியவர்
புராணங்களைப் பற்றி,’நன்று புராணங்கள் செய்தார்- அதில் நல்ல கவிதை பல பல தந்தார், கவிதை மிக நல்லதேனும் அக் கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்’ என்று பாடினார். ஆனால் புராணங்கள் என்று கட்டுரை எழுதி, (கற்பனை என்றாலும்) அவற்றை நாடெங்கும் பரப்ப வேண்டுமென்று அறிவுறுத்தினார். ஏனெனில், ‘புவிதனில் வாழ்நெறி காட்டி நன்மை போதிக்கும் கட்டுக்கதைகள் அவை தாம்’ என்று காரணத்தையும் தெரிவித்தார். ஸ்வாமி விவேகானந்தரும் புராணங்களை நாடெங்கும் வெள்ளமெனப் பாய்ச்சுங்கள் என்று கூறியதை நோக்கினால் இருவர் கருத்தும் ஒன்றாகிறது.
- ஆங்கில கவிதை, கட்டுரை, நூல் எழுதியவர்
ஆங்கிலக் கவிதைகளை எழுதியுள்ளார். தனது கும்மிப் பாடலைத் தானே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். The Fox with the golden Tail என்ற ஆங்கில நூலை வெளியிட்டுள்ளார்.
- சிறை சென்ற தியாகி
1918 நவம்பர் 20ஆம் தேதி புதுவையிலிருந்து குதிரை வண்டியில் குடும்பத்துடன் புறப்பட்ட பாரதியார் பிரெஞ்சு எல்லையைக் கடந்தவுடன் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டார். கடலூர் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நவம்பர் 20 முதல் டிசம்பர் 14 முடிய சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.
- ஏராளமான அதிசய அனுபவங்களைப் பெற்றவர்
வாழ்க்கையில் நம்ப முடியாத அதீத உளவியல் அனுபவங்களையும் அதிசய அனுபவங்களையும் பெற்றவர். கோவிந்தசாமி புகழ் என்ற கவிதையில். “ஒரு நாள் இறந்த எந்தை தன்னுருவம் காட்டினான், பின்னர் என்னைத் தரணிமிசை பெற்றவளின் வடிவம் உற்றான்’ என்று கூறி இறந்த தந்தையையும் தாயையும் கோவிந்த சாமி காட்டத் தான் பார்த்ததைக் கூறுகிறார். திருவனந்தபுரம் சென்ற போது மிருகக் காட்சிச் சாலையில் காவலாளி தடுத்த போதும் ஒரு சிங்கத்தின் அருகில் சென்று அதைத் தொட்டு, ‘அன்பு கொண்டோரை நீங்கள் ஒன்றும் செய்ய மாட்டீர்கள் என்பதை கர்ஜனை மூலம் தெரிவியுங்கள்’ என்று சொல்ல சிங்கம் கர்ஜித்தது. இப்படி ஏராளமான அனுபவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

- சிறந்த மனிதர்
மன்னுக்கு இதம் செய்பவர் மனிதர். அதாவது உலகிற்கு இதம் செய்பவர் என்ற அர்த்தத்திற்கு இலக்கணமாக வாழ்ந்த சிறந்த வியக்க வைக்கும் மனிதர் மகாகவி பாரதியார்.
*
பாரதியாரின் புகழுக்கு முடிவில்லை. அவரது சிறப்பியல்புகளை
97 என்ற எண்ணுக்குள் கட்டுப்படுத்த முடியாது. இந்த எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவர் அவர். பாரதியார் திரு நாமம் வாழ்க. தேச பக்தியும் தெய்வ பக்தியும் வெல்க! வந்தேமாதரம்!! பாரத் மாதா கீ ஜெய்!!!
முற்றும்
குறிப்பு: மேலே கண்ட சிறப்புக்களை விளக்கும் விதத்தில் ஏராளமான பாடல்களையும் கட்டுரைகளையும் பாரதியார் படைத்துள்ளார்.பல அரிய சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன.
இவற்றை இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ள ஏராளமான பாரதியார் பற்றிய கட்டுரைகளில் காணலாம்.
(www.tamilandvedas.com பார்க்கவும்)
இந்தக் கட்டுரையாசிரியர் தொகுத்துள்ள பாரதி போற்றி 1000 என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள ஆயிரம் பாடல்களிலும்